1036திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  ஒழியாமற் பொருந்துதல் - அக்காட்சி இடையறாது கண்டுகொண்டு அதனொடு பொருந்தி நிற்றல்; சிவயோகத்தாற் கூறி நிற்றல்; "மற்றொன் றறிந்திலரால்" (1254); "வேறுணரார்" (1255).
  வாழ்தல் - அந்நிலையின் பயனை விடாது அனுபவித்துக் கூடிநிற்றல்.
  பேதித்த பந்தப் பிறப்பின் நெறி - மாதுக்கம் என்றதனை விளக்கியவாறு; பேதித்தல் - உயிர் சார்ந்து நிற்கவேண்டிய சார்புணர்ந்து சாரவொட்டாது தடுத்து நிற்றல். பந்தம் - மூலமலம்; பந்தப் பிறப்பின் நெறி - மலத்தினால் வரும் பிறவி வழி; நெறி என்றார் பிறவியில் இடையறாது செலுத்துதலின்.
  பேர்மின் - அந்நெறியினின்று விலகிச் சிவநெறி சேர்தல். "மனம் பற்றி வாழ்மின்" என்ற பதிகக்கருத் துரைத்தவாறு; வாழ்மின் என்றது சிவச் சார்பு பெற்று வாழ்மின் என்றதாம்; அது பந்தப் பிறப்பின் நெறி பெயர்தலால் வருதலால் பிறப்பின் நெறி பெயர்தலே வாழ்வென்றார். என்னை? பந்தப் பிறப்பின் நெறி பெயரும் உயிர், சார்ந்ததன் வண்ணமாந் தன்மை யுடைமையானும், பந்தத்தைப் பெயர்ந்த வழிச் சிவனையன்றி வேறு சார்பு இன்மையானும், சிவனையே சாருமாதலின் பந்தநெறி பெயர்தலே வாழ்வாம் என்க; "இவ்வான்மாத் தன்னை யிந்திரியத்தின் வேறாவான் காணவே முதல்வனது சீபாதத்தையணையும் - "ஊசல் கயிறற்றால்தாய் தரையேயாந்துணையால்" என்ற உண்மை காண்க.
  போதித்த நோக்கு - ஞானகுரு அறிவிற் பொருந்தக் கொளுவிய உள்நோக்கம்; உற்று - அதனுள் அழுந்தி; போதித்த என்றதற்கு ஞானகுரு என்ற எழுவாய் அவாய்நிலையான் வந்தது. "தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்த" என்றது இக்கருத்தை விளக்கியது. ஈண்டுச் சகலான்மாக்களுக்குப் பிள்ளையார் ஞானஉபதேசம் செய்தருள்கின்றா ராதலானும், சகலர்க்குக் குருவேடத்தினுள் மறைந்தே முதல்வன் அருளுவானாதலானும், இங்கு எழுவாய் மறைந்து நின்றது.
  போதித்த நோக்கு உற்று ஒழியாமற் பொருந்தி வாழ்ந்து - "ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி" என்ற சிவஞானபோதம் ஒன்பதாஞ் சூத்திரம் இக்கருத்தையே விளக்குதல் காண்க.
  போதித்த நோக்குறுதலும் (1), ஒழியாமற் பொருந்துதலும் (2), வாழ்தலும் (3) என்ற இம்மூன்றும் முன் கூறியபடி சிவஞானபோதம் ஒன்பதாஞ் சூத்திரத்தினுள் (1) அம்முதலை ஞானக்கண்ணாலே காண்க எனவும், (2) அசத்தாயுள்ள வன்னபேதங்களை அசத்தென்று காண உளதாய் நிற்பது ஞானசொரூபம் எனவும், (3) இனி இவ்விடத்து ஸ்ரீ பஞ்சாக்கரத்தை விதிப்படி உச்சரிக்க எனவும் முறையே மூன்றதிகரணங்களால் விரித்துப் போதிக்கப்பட்டமை காண்க. "அண்டனை யான்மாவி லாய்ந்துணரப்பண்டணைந்த, வூனத்தைத் தான்விடுமா றுத்தமனி லொண்கருட, சானத்திற் றீர்விடம் போற்றான்"(9 - 2) என்றவிடத்து அச் சிவஞானத்தானே, ஆசாரியன் "சிவோயம்" எனத் தன்னுள்ளே பாவித்துச் "சிவத்துவமசி" என்றறிவுறுக்கும் மகா வாக்கியப் பொருளை நாடோறும் பயின்று, சிவோகம் எனப் பாவிப்பானாயின், அந்தப் பாவனைக்குள் விளங்கும் முதல்வனால் அநாதியே கூடிய பொதுவியல்பையும், அதற்கேதுவாகிய மல மாயா கன்மங்களையும் தான் விட்டு நீங்குமாறு, ஒள்ளிய கருட தியானத்தில் விளங்குங் கருடனால் அப்பாவகன்ம விடத்தைத் தீர்த்துக் கொள்ளுமாறு போலாமென்க" (மாபாடியம்) எனவரும் உரையும் காண்க; அச்சூத்திரப் பிண்டப் பொழிப்புரைக்கும் வழிப் (1)பசுஞானத்தானும் பாசஞானத்தானும் அறியப்படாத முதல்வனை அம்முதல்வனது ஞானக்கண்ணானே தன் அறிவின்கண்ணே ஆராய்ந்தறிக