| (இ-ள்) பிள்ளையார்தாம் ஏடகம் வன்னி என்று எடுத்துப் பாட - பிள்ளையார் திருவேடகத் திருப்பதிகத்தை "வன்னியு மத்தமும்" என்ற தொடங்கிப் பாடியருளவும்; கூடிய...கூடி - ஆற்று நீரினுட் கூடி வந்த ஏட்டினிடம் குலச்சிறையாரும் சென்று பொருந்தி; காடிடமாக...புக்கு - பெரு மயானமே இடமாக ஆடுகின்ற கண்ணுதற் பெருமானது திருக்கோயிலின் பக்கத்தில் நிலைபெற்ற வைகையாற்றின் நடுவிலே புக்கு; நின்ற ஏடு எடுத்துக் கொண்டார் - மேற் ஏறாமல் நின்ற ஏட்டினை எடுத்துக் கொண்டனர். |
| (வி-ரை) வன்னி என்று எடுத்து ஏடகம் பாட - என்க; ஏடகம் - திருஏடகத் திருப்பதிகத்துக்கு ஆகுபெயர். பதிகத்தை என சாரியையும் உருபும் தொக்கன. |
| வன்னி - பதிக முதற்குறிப்பு. எடுத்தல் - தொடங்குதல். |
| நீரில் கூடிய - என்க; நீரில் கூடிய ஏடு குலச்சிறையாரும் கூடி - நீரி னடுவழியாக எதிரேறி வந்த ஏட்டினைக் குலச்சிறையார் கரைவழியை குதிரைமீது வந்து பொருந்தி. ஏடு - ஏட்டின் இடமாக; இங்குக் கூடி என்பது, குலச்சிறையார் கரைவழியாலும் ஏடு நீர்வழியாலும் ஒத்த இடத்தைப் பொருந்துதல் குறித்தது. பின்னர் நீர் நடுவுட் புக்கு என்றது கரையினின்று நீரினுட் புகுதலைக் குறித்தலின் கூறியது கூறலன்மை யுணர்க. |
| நின்ற - "கரைக்கோலை தெண்ணீர்ப் பற்றின்றிப் பாங்கெதிர் விரவும்" என்று முன் ஆணையிட்டருளிய பிள்ளையார், இப்போது ஏடு தங்க ஆணைதந்து "ஏடுசென்று அணைதரும்" என்று அருளியமையால் மேல் எதிர்ந்து செல்லாமலும் நீரோடு உடன் ஓடாமலும் அணைந்துநின்ற என்க. |
| எடுத்துக் கொண்டார் - கையினால் எடுத்து மேற்கொண்டனர். அதனைத் தலையின்மிசை வைத்தலை மேற்கூறுவது காண்க. |
| 850 |
| திருஏடகம் |
| திருச்சிற்றம்பலம் பண்-கொல்லி |
| வன்னியும் மத்தமும் மதிபொதி சடையினன் பொன்னிய றிருவடி புதுமல ரவைகொடு மன்னிய மறையவர் வழிபட வடியவர் இன்னிசை பாடல ரேடகத் தொருவனே | |
| (1) |
| கோடுசந் தனமகில் கொண்டிழி வைகைநீர் ஏடுசென் றணைதரு மேடகத் தொருவனை நாடுதென் புகலியுண் ஞானசம் பந்தன பாடல்பத் திவைவல்லார்க் கில்லையாம் பாவமே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம். |
| பதிகக் குறிப்பு:- வைகை நீரினை ஆணையால் எதிர்ந்து சென்ற ஏடு சென்று அணைந்து தங்கும் ஏடகம் என்பது. "பாடினா ரேடு தங்க"(2747) என ஆசிரியர் அறிவித்தமையும் "ஏடுசென் றணைதரும் ஏடகம்" என்ற பதிகத் திருக்கடைக் காப்பும் காண்க. |
| குறிப்பு:- இப்பதிகம் மதுரையில் வைகையாற்றின் கரையில் எழுந்தருளியிருந்த படியே பிள்ளையார் அருளி ஆணையிட்டது. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) வன்னி - மரம். வன்னியின் இலை; மதி - எண்ணும்மை தொக்கது; வன்னியும் மத்தமும் முதலியவை மிகுதியும் மேற்பெய்தமை |