1064 | திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்] |
| திருவிராகப் பதிக முழுமையும் ஆகிய தேவார அகச்சான்று உறுதிகூறுகின்றது; "நள்ளாறுடைய நம்பெருமான் - ஆல வாயின்க ணமர்ந்த வாறிது - என்கொல் சொல்லாய்" என்ற பதிகமும் பார்க்க. இனிப், புனல்வாதம் நிகழ்ந்து வைகையாற்றில் பிள்ளையார் இட்ட ஏடு எதிர் சென்றமையால் அமணர் தோல்வியுற்றுச் சிவனே பரம்பொருளாவார் என நாட்டப்பட்டமை திருப்பாசுரப் பதிகத்தால் ஐயமற விளக்கம் பெறுகின்றது. "ஆழ்க தீயது; எல்லா மரனாமமே சூழ்க" "தெற்றென்று தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப், பற்றின்றிப் பாங்கெதிர் விரவும் பண்புநோக்கிற், பெற்றென் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே" எனவரும் திருப்பாசுரப் பகுதிகளும் "ஏடுசென் றணைதரு மேடகம்" என்ற பதிகமும் இதற்குரிய அகச்சான்றுகளாதல் தெளிக. "பருமதின் மதுரைமன் னவையெதிரே பதிகம தெழுதிலை யவையெதிரே, வருநதி யிடைமிசை வருகரனே வசையொடு மலர்கெட வருகரனே" என்ற திருவியமகமும் இதனை நாட்டியதுடன் இவ்வாதங்களில் எல்லாம் பிள்ளையாரே வெல்லவும் அமணர் தோற்கவும் நிகழ்ச்சிகள் கூடிய செய்தியும் விளங்குகின்றது. | | ்இவ்வாற்றான் சமணர் கொலை முயன்ற தீச்செயலும், அதுவே அரசனுக்கேறிக் கொடிய நோய்பற்றிய செயலும், அமணர் பிள்ளையாரைப் பொறாமையாற் சூழ்ந்து பதறிக் கதறிய செயலும், இவை காரணமாக ஒன்றன்பின் ஒன்றாய் மூன்று பெருவா தங்களும் அவற்றால் மூன்றுமுறை அமணர்க்குத் தோல்விகளும் நிகழ்ந்த செயலும், இவையெல்லாம் பிள்ளையார் தேவார அகச்சான்றுகளால் நாட்டப்பெறுகின்றன; பொய்யினான் மெய்ம்மையாக்கப் புகுந்து வஞ்சித்துக் தனது உரிமை உண்மைச் சமயத்தை மறக்கவும் இகழவும் இடையூறு செய்யவும் மயக்கம் செய்தும் தனக்கு இறந்துபடுமளவு தரும் நோய் விளைத்தும், உண்மை நின்ற பெருகுநிலைக் குறியாளரை அவமதித்து நிந்தித்துக் கொலையும் சூழ்ந்தும், சைவ உடைமைகளையும் உண்மை அறிவையும் ஆறலைத்துக் கவர்ந்தும், இத்துணையும் தமது சீவனோபாய முயற்சிகளின் ஆக்கங் கருதிச் செய்ததுமன்றி, அதனோடு நில்லாமல், ஒட்டி வாதமும் செய்து தோல்வியும் பெற்றார்களாயின் அச்சமணர்களை அரசன் ஏற்றவாறு நீதிமுறைத் தண்டஞ் செய்வதில் என்ன குறை? பெருங்குற்றம் நடந்ததும், பெருவாதங்கள் நடந்தனவும் தேவாரங்களால் அறியப்படுதலின் அவற்றுக்குத் தக்க தீர்ப்பும் அரச தண்ட முறையும் நிகழ்ந்தமை எளிதில் கருதக்கிடக்கின்றது. சைவம் மீளத் தாபிக்கப்பட்டமையும் சமணம் வலியிழந்தொழிந்தமையும் கண்கூடாகக் காண்கின்றோம். ஆதலின் அரச நீதிமுறையால் சமணர் அழிக்கப்பட்டனர் என்பது தேற்றமாய் விளங்குமன்றோ? பிள்ளையார் அமணர் கழுவேறிய செய்தி கூறாமைக்குக் காரணம் பல இருத்தல் கூடும். அரசநீதிமுறை பற்றியதாய் அஃது ஒழிந்து சமயச்சார்பு பற்றியதன்றாதலின் அவர் கூறும் நியதியில்லை என்க. அன்றியும் தேவாரங்கள் முழுமையும் நமக்குக் கிடைத்தில என்பதனையும் ஈண்டு நாம் மறந்துவிடலாகாது. (3) சீன யாத்திரிகன் குறிப்பிடாமை பற்றி இந்நிகழ்ச்சி நிகழவில்லை என்பது தவறு; அவ்வாறு முடிவுகொள்ளுதல் தவறான அளவைமுறை. வெதிரேகச் சொல் என்ற அன்மைபற்றி இன்மை கூறுதல் இன்றியமையாத நியதியாகிய பொருத்தமிருந்தாலன்றிக் கூடாது, சீதமின்மை பனியின்மை என்புழிப்போல; சீன யாத்திரிகன் கூறாதனவெல்லாம் நிகழாதன என்றல் பொருந்தாது; சீன யாத்திரிகன் ஆளுடைய பிள்ளையார் ஞானமுண்டமை முதலியனவாகத் தேவார அகச்சான்றுடன் கூடிய ஏனையவெல்லாம் எழுதினானா? ஆளுடைய அரசுகளைச் சமணர் துன்புறுத்திக் கொலைசூழ்ந்த செயல்களையும் அதன்காரணமாகப் பல்லவன் மகேந்திரன் சமண்விட்டுச் சைவம் சார்ந்ததும் பாடலிபுத்திரத்துப் பாழிகளையும் பள்ளிகளையும் இடித்துக் குணபா |
|
|
|
|