1078திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

  (இ-ள்) ஆலவாய்.....கண்டு - இறைவரது திருவாலவாய் என்னும் கோயில் அவ்விடத்தில் முன்பு தோன்றிடக் கண்டு; பாலறாவாயர்....சென்று - பிள்ளையார் மிகுந்த அடிமைப் பண்பினாலே தொழுது சென்று; மாலும்....புக்கார் - விட்டுணுவும் பிரமனும் துதிக்க நிலைபெற எழுந்தருளிய இறைவரது கோயிலின் திருவாயிலின் முன்பு சீலமுடைய அடியார்களின் முன்பு முத்துக் சிவிகையினின்றும் இறங்கி உள்ளே புகுந்தனர்.
  (வி-ரை) அண்ணல் ஆலவாய்க் கோயில் என்க. ஆலவாய் என்பது கோயிலின் பெயர்.
  அங்கண்முன் தோன்றக் கண்டு - வைகைக் கரையினின்றும் சிலதூரம் வந்த பின்பே ஆலவாய்க் கோயில் முன்னே கட்புலப்படும் ஆதலின் அவ்வாறு தோன்ற.
  மிக்க பண்பாவது - உறைப்புடைய அடிமைத்திறம்.
  மாலு நான்முகனும் போற்ற மன்னினார் - பிரமன் முதலிய தேவர்கள் வந்து துதித்த வரலாறுகள் தலபுராணத்துட் கண்டுகொள்க.
  வாயில் - திருவாயிலின் அணித்தாகிய இடத்தில்.
  சீல மாதவத்தோர் - சைவ சீலமுடைய அடியவர்கள். மாதவம் - ஈண்டுச் சிவ பூசையே தவமெனப்படும்.
 

863

2762
தென்னவன் றானு மெங்கள் செம்பியன் மகளார் தாமும்
நன்னெறி யமைச்ச னாரு ஞானசம் பந்தர் செய்ய
பொன்னடிக் கமலம் போற்றி யுடன்புகப் புனிதர் கோயில்
தன்னைமுன் வலங்கொண் டுள்ளாற் சண்பையர் தலைவர் புக்கார்.
  (இ-ள்) தென்னவன் தானும்.......அமைச்சனாரும் - பாண்டியனும் எங்களுடைய சோழ மன்னரது மகளாராகிய மங்கையர்க்கரசியாரும் உலகை நன்னெறிப்படுத்தும் மந்திரியாராகிய குலச்சிறை நாயனாரும்; ஞானசம்பந்தர்.....உடன்புக - திருஞானசம்பந்தருடைய செம்மை தரும் பொற்பாதத் தாமரைகளைப் போற்றி எனத் துதித்துக் கொண்டு உடனே உட்புக; சண்பையர் தலைவர் - சீகாழியரவர்களது தலைவராகிய பிள்ளையார்; புனிதர் கோயில்....வலங்கொண்டு - புனிதராகிய இறைவரது திருக்கோயிலினை முன் வலமாகச் சூழ்ந்து வந்து; உள்ளால் புக்கார் - உள்ளே புகுந்தருளினர்.
  (வி-ரை) தென்னவன் தானும்....உடன்புக - முன்னர் "மங்கையர்க்கரசியாரும் மன்னனும் போற்றி வந்தார்"(2759) என்றது வைகையாற்றினின்றும் போந்து திருவீதியில் வந்த செயல் குறித்தது; ஈண்டுக் கூறியது திருக்கோயிலினுள் புகும்போது பிள்ளையாருடனேகூடச் செல்லும்போது உள்ள நிகழ்ச்சியினை. இதனை இவ்வாறு வேறுபிரித்து விதந்து கூறியதென்னை? எனின், முன்னர்த் தொடக்கத்து அந்நாளின் முன்னாளில் அமைச்சர் மட்டும் உடன் வரவும் அம்மையார் முன்னவே சென்றிருப்பவும் ஆலயத்துட் சென்றருளிய பிள்ளையார், திருமடத்தினின்று அந்நாள் முற்பகல் அரசன் கோயிலுக்குப் போதுவார் இறைவர் திருவுள்ள மறிவேனென்று "திருவாலவாயுட் புக்கார்"(2635). அப்போது கவலைமீக் கொண்ட "அம்மலர்க் குழலினாரும் அமைச்சரும்" மட்டும் உடன் புகப் புக்கருளினர். அதுகாலை அரசன் அமணர் சூழ்ந்து நிற்ப உணர்வின்றி மிக்க சுரநோயுடன் கிடந்தனன்; திருவருள் கைவந்தமையால் ஈண்டு அதே நாளில் பிற்பகல் அரசன் உள்நோயும் புறநோயும் நீங்கி அமணர் சூழலும் நீங்கி உடன்வரவும், பன்னாள்