| அவன் "முன்பு புலப்படா வகைகொண் டுய்த்த" "ஓங்கிய சைவவாய்மை ஒழுக்கத்தின் நின்ற" சிவவழிபாட்டினை, அவ்வரசனும் உடன் வரவும், உலகம் நவைநெறி நீங்கித் திருநெறியிற் செல்லவும் கண்ட பெருமகிழ்ச்சியுடனே அம்மையாரும் அமைச்சனாரும் உடன்வரவும், முன்னர்ப் பிள்ளையாரை அந்த மாநகரிடத்திராது அகல்விக்க அமணர் சூழ்ச்சியுட்பட்ட அரசன்றானே அவருடன் கூடச்சென்று இறை வழிபாட்டினை நிகழ்விக்கவுமாகக் கண்ட இவ்வற்புதக் காட்சியினைத் தமது திருவுள்ளத்துக் கண்டு மகிழ்ந்த ஆசிரியர் அதனை நாமும் குறிக்கொள்ளும் வகை எடுத்துக் கூறியவாறாம் என்க; மன்னவன்றானும் என்ற குறிப்பும் இது. |
| எங்கள் செம்பியன் மகளார்தாமும் - எங்கள் - சைவம் பெருக்கிய உரிமைப் பாட்டின் சிறப்பு. அநபாயச் சோழரது மந்திரியாரா யிருந்த நிலைமையில் அவர் விரும்பியபடிதாம் இப்புராணம் பாடியபடியால் அம்மரபின் உரிமையும், இராசராசச் சோழர் திருமுறைகளை வெளிப்படுத்திய நிலைமையின் அம்மரபின் உரிமையும், பிறவும் கருத்துட் கொண்டு கூறியவாறாம். "மங்கையர்க்குத் தனியரசி யெங்கள் தெய்வம்" (மங்கையர்க்கரசியார் புராணம்) என்றும், "தங்கள் பொங்கொளிவெண் டிருநீறு பரப்பினாரை" என்றும் கூறும் கருத்துக்களை ஈண்டு வைத்துக் காண்க. எங்கள் செம்பியன் - "மன்னிய சைவத் துறையின் வழிவந்த குடிவளவர்" (1900) என்று இப்புராணத் தொடக்கத்துக் கூறிய குறிப்பும் காண்க. |
| மகளார் - அமைச்சனார் - என்ற பன்மைக் குறிப்பும், தென்னவன்றானும் என்ற ஒருமைக் குறிப்பும் முற்சரித நிகழ்வெல்லாங் குறித்து நின்றன. |
| ஞானசம்பந்தர் செய்ய பொன்னடிக் கமலம் போற்றி - போற்றி என்று துதித்துக்கொண்டு; திருக்கோயிலினுட் புகும்போதும் திருக்கோயிலினுள்ளும் சிவனையன்றி வேறு நினைவதும் துதிப்பதும் செய்யலாகாது என்பது விதி. ஈண்டு இவ்வாறு இம்மூன்று பெருமக்களும் பிள்ளையாரைப் போற்றிப் புக்கதென்னை? எனின், அது தம்மிறைவரும் குலமுதல்வருமாகிய அவ்விறைவர் பிள்ளையாரைத் தந்தருளி யாட்கொண்ட நன்றிபற்றி எழுந்ததென்பது; மேல்(2765) விளக்கப்படுவது காண்க. செய்ய - செம்மை - சிவத் தன்மை - தருந் தன்மையுடைய. சிவந்த என்றலுமாம். ஆலயத்துள் ஆசாரியரை வழிபடுதல் வேண்டும் என்ற விதியுங் கொள்ளப்படும். |
| உள்ளால் - உள்ளே இறைவர் திருமுன்பு. ஆல் - ஏழனுருபின் பொருளில் வந்தது. |
| 864 |
2763 | கைகளுந் தலைமீ தேறக் கண்ணிலா னந்த வெள்ளம் மெய்யெலாம் பொழிய வேத முதல்வரைப் பணிந்து போற்றி, "ஐயனே யடிய னேனை 'யஞ்ச'லென் றருள வல்ல மெய்யனே" யென்று "வீட லாலவாய்" விளம்ப லுற்றார். | |
| 865 |
| (இ-ள்) கைளும்....பொழிய - கைகள் இரண்டும் தலையின்மேல் ஏறிக் குவிந்திடவும் கண்கள் இரண்டினின்றும் ஆனந்தக் கண்ணீர்வெள்ளம் திருமேனி முழுவதும் பொழியவும்; வேத....போற்றி - வேத முதல்வராகிய மறைவரைப் பணிந்து துதித்து; ஐயனே....என்று - "ஐயனே! அடியேனையும் அஞ்சேல் என்று அருளிச் செய்து ஆட்கொள்ளவல்ல மெய்ப் பொருளாகியவரே!" என்று; வீடலாலவாய் விளம்பலுற்றார் - வீடலாலவாய் என்று தொடங்கும் திருப்பதிகத்தினை அருளிச் செய்யலுற்றனர். |
| (வி-ரை) கைகளும் தலைமீது ஏற - ஏற - முயற்சியானன்றித் தாமே ஏறிக் குவிய; உம்மை கண்களினின்றும் வெள்ளம் பொழிய என எதிரது தழுவிற்று. |