1088 | திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்] |
| யாழ்ப்பாணரும் உடனிருந்து யாழ் வாசிக்கப் பெற்றமையால் அவருக்கு முன்னர்க் கூடலிறைவர் அருளிய திறத்தினை நினைவுற்று ஈண்டு வைத்துப் பாராட்டியருளினர் என்க. | | இனிப், பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத்தினுள் விறகு விற்றதுமுதல் இசை வாது வென்றதுவரை நான்கு படலங்களினும் பேசப்படும் பாணபத்திரனார் வேறு; இங்குக் குறித்த திருநீலகண்டப் பாணர் வேறு என்பது உணரத்தக்கது. அவர், இறைவர்பால் "மதிமலி புரிசை" என்ற திருமுகம் பெற்றுக் கழறிற்றறிவாரிடம் சென்று பெரும்பரிசில் பெற்றனராதலின் காலத்தால் மிகப் பிற்பட்டவராதல் கழறிற்றறிவார் புராணத்தினுள் 26 - 39 வரையில் உள்ள பாடல்களினும், 94-வது பாட்டினும் ஆசிரியர் அருளியவாற்றாலும், திருவிளையாடற் புராணம் திருமுகங்கொடுத்த படலத்தானும் அறிந்துகொள்ளத் தக்கது; இவ்விருவார்பாலும் தனித்தனி இறைவர் செய்த அருளிப்பாடுகள் வெவ்வேறாம். அவை ஒன்றேயெனக் கொண்டு மயங்கித் தமது மயக்கத்தை ஆசிரியர் பெருமான்மே லேற்றி அவர்பால் அறியாமையைச் சுமத்தி அபசாரப்படும் மாக்களும் உண்டு; ஆராய்ச்சி என்ற பேரால் செய்யப்படும் தகுதியில்லாச் செயல்கள் பலவற்றுள் இதுவுமொன்றாம் என விடுத்தொழிக. தாரம் - பண்பாடும் திறம் என்றுகொண்டுரைப்பினும், அரியபண்டம் என்று கொண்டு பொற்பலகை எனக்கொண்டுரைப்பினும், அஃதிவ்விருவர்க்கும் இறைவர் அருளுதலும் அமையுமாதலின் மாறுபாடோ மயக்கமோ கூடுதல் யாங்கனமென்க; யாழ்ப்பாணருக்குப் பலகையிட்ட வரலாற்றைப் பெயரொற்றுமைபற்றிப் பிறழ உணர்ந்த வடமொழியாளர் பாடியதை அவ்வாறே திருவிளையாடலுள் மொழிபெயர்த்தனர் என்பதும் அமையும்; பலகையிட்ட வரலாறு ஈரிடத்தும் வெவ்வேறாய் வருவதும் கருதத் தக்கது. ஈண்டு யாழ்ப்பாணர்க்குப் பலகை தந்தருளியது யாழினைத் தரையில் வைப்பின் கீதந்தாக்குமென்று பலகையிட்டருளினர் என்பதாம். இக்கருத்தால் யாழ் தரையில் வைக்காது பலகையின் மேல் வைத்து வாசிக்கும் இயலும் மரபும் காண்க. பாணபத்திரனார்க்கு இரவில் மழையில் தாமுங் கருவியும் நனைந்துவந்து, வாசிக்க இடர்ப்பட்டபோது, அதனை மாற்ற இறைவர் அருளியது வரலாறு; தாரம் - பண் பாடும் திறம் எனக்கொண்டுரைப்பின் யாழ்ப்பாணர் திருவாலவாயிலிலும், திருவாரூரிலும் தமது மரபின் முறைபற்றிப் புறமுற்றத்திற் கோயில் வாயிலில் இருக்க அதனையாற்றாது திருமுன் வரச்செய்து பாட அருளிய தன்மை குறித்ததென்க. இனித், திருவிளையாடற் புராணம் புராணத்தின் பகுதியில் அமைவதாலும், திருத்தொண்டர் புராணம் திருமுறையாகிய வேதப் பகுதியில் அமைவதாலும் இவை ஒன்றொடொன்று மாறுபட்டபோது வலிமையுடையதென எடுக்கத்தக்கது வேதமேயாம் என்ற ஆதரவுகளின் ஏற்றத் தாழ்ச்சி முறையும் மனங்கொள்ளத் தக்கது என்பது முன்னரும் பலவிடத்து உரைக்கப்பட்டது. பிறவும் கண்டுகொள்க. | | அவரொடும் அளவளாவி - என்றதனாலும் பதிகத்துட் பாணர் என்றது யாழ்ப்பாணரைக் குறிக்கும் என்க. | | தெருள் - உண்மையுணர்வாகிய அறிவு. "முன்னின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன் கருணைக் கடன்மூழ் கினரே"(1336); "தெருளுமுணர் வில்லாத சிறுமையேன்"(1798). | | திருத்தொண்டின் உண்மை நோக்கி - திருத்தொண்டர்கள் முதல்வர்பாலும் திருவேடத்தார்பாலும் செய்யும் திருத்தொண்டுகளின் திறங்களையே பேசிக் கலந்து களிப்புறுவது இயல்பு. "வாய்மைச், சால்பின்மிக் குயர்திருத் தொண்டினுண்மைத் திறந் தன்னையே தெளியநாடிக், காலமுய்த் தவர்களோ டளவளா விக்கலந் தருளினார்" |
|
|
|
|