| (வி-ரை) மாமறையோர் - சிவபாத இருதயர். மறையோர் - பணிந்தனர் என்று கூட்டுக; இனி, இவ்வாறன்றி, மறையோர்களது - பதிகளிடைத் தங்கி என்று ஆறாம்வேற்றுமைத் தொகையாகத் தொடர்புபடுத்தி உரைப்பினுமமையும்; என்னை? சோழ நாட்டின் எல்லையும் இடையில் மறவர் வைப்பும் நீங்கிப் பாண்டி நாட்டினுட் சென்றபின் மதுரை சேரும்வரை திருத்தலங்கள் மிகச் சிலவேயாம்; பிள்ளையார் சென்ற வழியில் திருக்கொடுங்குன்றமொன்றே இடையில் வணங்கி மதுரை சேர்ந்த வரலாறு முன் (2527) உரைத்தது காண்க. ஆதலிற் சிவபாத இருதயர் சென்ற வழியில் இடையில் மறையவர் பதிகளில் தங்கித் தங்கிச் சென்றனர் என்பதாம். சோழ நாட்டில் முன் "பரன்கோயில் பணிந்தேத்தி" என்ற ஆசிரியர் ஈண்டுப் பதிகளிடைத் தங்கி என்ற குறிப்பும் காண்க. |
| வழிச் செல்வார் - வழி போவாராய்ப் - புக்குப் பணிந்தார் - என்று கூட்டி முடிக்க. |
| தேமருவு நறும் பைந்தார் - பூழியரது வேப்பமாலையைக் குறித்தது; தேனுடைமை, நறுமை, பசுமை என்ற தன்மைகள் வேம்புக்குரியன. |
| தாம் அணைந்து - பரிசனங்கள் முதலியோர் ஒருவருமுடனின்றித் தாமாக என்றதும் குறிப்பு. |
| தனி நாதன் - முதற் கடவுள்; ஒப்பற்ற என்றலுமாம். "தனக்குவமை யில்லாதான்" (குறள்); ஊழியில் எல்லாரையும் தம்முள் ஒடுக்கித் தாமொருவரே தனியாக இருப்பவர் என்ற குறிப்பும்ஆம்; அவர் தாமே அணைந்தார்க்கு அவ்வாறே இவரும் தனி நின்றருளினார் என்ற நயமும் காண்க. "முளைத்தானை யெல்லார்க்கு முன்னே தோன்றி" (தேவா) |
| பூமருவும் சேவடி - தேவர் முனிவர் பரவித்தூவிய மலர்கள் இருக்கும் திருவடி. |
| புக்கு - மனம் வைத்து. |
| மாமறையோர் - பிள்ளையாரைப் பிரிந்து குறைந்தது இரண்டாண்டு அளவும், மிக நினைந்த சிவபாதவிருதயர் நேரே செல்லாது தோணியப்பரை வணங்கிச் சென்றதும், வழியில் மிக்குளவாம் பரன்கோயில் பணிந்து சென்றதும், பின்னர்த் திருமதுரையினை யணைந்தவுடன் பிள்ளையாரது திருமடத்தினைச் சென்றணையாது, நேரே திருவாலவாயமர்ந்த தனிநாதன் சேவடி புக்கு ஆர்வத்தொடும் பணிந்தமையும், அதன் பின்னரே திருமடத்தினைக் கேட்டறிந்து அங்குச் சென்றதும் கருதுமளவில் அவர் பிள்ளையாரை மிக நினைந்து தீயராகிய அமணரிடையே அவரது நலங்களை அறியும் அவாவுடன் வந்தாராயினும், இறைவரை வழிபடும் ஆர்வமும் முறையுமே அதனின் மேலாய் முதற்கண் வைத்த சீல ஒழுக்கமுடையர் என்பது போதரும்; தமது இல்வாழ்க்கைக்கு மகவு வேண்டிய அவர் அதனின் மேலாய்ச் சைவ ஆக்கமே கருதித் தலைநின்று தவம் புரிந்தனர் என்று கூறிய வரலாறு ஈண்டு நினைவுகூர்தற்பாலது; மனைவி மக்கள் முதலிய உலகச் சார்புகளையே பற்றி அவையே பொருளென மயங்கி ஒழியும் எம்போன்ற உலக மாக்கள் இவ்வுண்மை இல்லறவொழுக்கத்தினைக் கருதிக் கண்டு ஒழுகுவோமாயின் நலந்தரும். பிள்ளையார்பாற் பொருள் வேண்டிப் பெற்ற தாதையார் அவர் பிரிவாற்றாது தொடர்ந்து வந்தாரேனும் "ஆதி மாமறை விதியினா லாறுசூழ் வேணி, நாதனாரை முன்னாகவே புரியுநல் வேள்வி"கள்(2327) செய்வதன் பொருட்டுப் பிரிந்து சீகாழியிற் சென்றதனையும் ஈண்டு நினைவுகூர்க. இவ்வாறுவேதநெறி தழைத்தோங்கிய நல்லொழுக்கம் பற்றிய குறிப்பெல்லாம் பெற வைத்து ஈண்டு மாமறையோர் என்றவாற்றாற் கூறினார். |