| புக்கு ஆர்வத்தொடும் பணிந்தார் - ஆர்வமாவது தாம் எண்ணித் தோணியப்பர் பாற் றவங்கிடந்த பரசமய நிராகரிப்பும் நீற்றினை ஆக்குதலுமாகிய சைவப் பெருக்கத்தினை நிறைவேற்றத் தமக்குத் தந்த பெருங்கருணைத் திறத்தினை நினைந்து கொண்ட தன்மையாலாயது; "இத்தனையும் எம்பரமோ வைய வையோ வெம்பெருமான் றிருக்கருணை யிருந்த வாறே"(தேவா) என்ற எண்ணமே எஞ்ஞான்றும் தோன்ற வழிபடுதல் பெரியோ ரியல்பென்க; தோணியப்பர் தந்த வரம் ஈண்டு நிறைவேறத் தந்தமையால் அவரைப்போலவே திருஆலவாயமர்ந்த தனிநாதனைக் கண்டு பணிந்தனர் என்பது; பிள்ளையாரை மிகநினைந்த தாதையார், தோணியப்பரை வணங்கிப் புறப்பட்டு, அவரையே ஈண்டு மதுரையில் மனங்கொண்டு கண்டு பணிந்து, பின் பிள்ளையாரைக் காண்கின்றனர் என்ற திறமும் கண்டுகொள்க. "அங்கணரைப் பணிந்து போந்து (பின்) அருகணைந்தார் தமை வினவ" என மேல் கூறுவது காண்க. இவ்வாறே பிள்ளையாரும் தாதையாரைக் கண்டவுடன் அவர் சார்விற் றிருத்தோணியப்பரைக் கண்டு "மண்ணினல்ல" என்ற பதிகம் ஆண்டுத் திருமடத் திருந்தபடியே அவரை வினவிப் பணிந்தமையும் காண்க(2728). |
| 876 |
2775 | அங்கணரைப் பணிந்துபோந் தருகணைந்தார் தமைவினவ "இங்கெம்மைக் கண்விடுத்த காழியா ரிளவேறு தங்குமிடந் திருநீற்றுத் தொண்டர்குழாஞ் சாருமிடஞ் செங்கமலத் திருமடமற் றிது"வென்றே தெரிந்துரைத்தார். | |
| 877 |
| (இ-ள்) அங்கணரை...வினவ - அங்கணராகிய இறைவரைப் பணிந்து புறம்போந்து பக்கத்தில் வந்தணைந்த நகர மாந்தர்களாகிய அடியார்களை(ப் பிள்ளையாரது திருமடத்தினைப் பற்றி) வினவ; இங்கெம்மை....தங்குமிடம் - இங்கு(க் குருடராயிருந்த) எம்மைக் கண்திறப்பித்து ஒளிநெறி காட்டிய சீகாழியவரது இளஞ்சிங்கமாகிய பிள்ளையார் தங்கும் இடமாவது; திருநீற்று....இது என்றே தெரிந்துரைத்தார் - திருநீற்றுத் தொண்டர் கூட்டம் சாரும் இடமாய்ச், செந்தாமரை போன்ற திருமடம் மற்று இதுவேயாகும் என்று தெரிந்து சொன்னார்கள். |
| (வி-ரை) அங்கணர் - அழகிய கருணைநோக்க முடையவர்; பணிந்து - முன்பாட்டிற் கூறியவாறு திருவடிக்கீழ்ப் புக்கு ஆர்வத்தோடும் பணிந்து. |
| போந்து - வினவ - திருக்கோயிலின் புறத்தே போந்து வினவினாராக; திருக்கோயிலினுள் சிவன் பேச்சன்றி வேறுபேச்சுப் பேசலாகாதென்பது விதியாதலின் அம்மரபு பற்றிப் புறம் போந்தபின் வினவினார். |
| அருகு அணைந்தார்தமை - ஆங்குப் பக்கத்துச் சார்ந்து அணைந்தார்களாகிய தொண்டர்களை; அருகு - திருக்கோயிலினருகு; கோயிலின் அருகு என்றதனாலும் அவர்களை நோக்கிச் சிவபாதவிருதயர் பேசும் உரிமை எண்ணத்தக்க நிலையில் இருந்தமையாலும்அவர்கள் அடியார்கள் என்று கருதப்பட்டது; அல்லாரைக் காணலும் பேசலும் இணங்குதலும் தகாதென்றும் அவர்கள் அஞ்சத்தக்கவர் என்றும் பெரியோர் கொள்வர். "காணா கண்வாய் பேசாதப் பேய்களோடே" (திருவிசைப்பா). "திருமுண்டந் தீட்டமாட்டாது அஞ்சுவா ரவரைக் கண்டா லம்மநா மஞ்சு மாறே" (திருவா). |
| இங்கெம்மைக் கண் விடுத்த - என்றமையால் அவர்கள் பாண்டி நாட்டவர் - மதுரை நகரத்தவர் என்றும், முன் அகக்கண் குருடாய் அமணிருளில் நின்று, பின் பிள்ளையாரருளியவாற்றால் ஞானம் விளங்கப்பெற்று அகக்கண் பெற்றவர் என்றும் கொள்ளப்படும். |