| பிள்ளையார் தொழுத நிலையும் அப்பர் இறைஞ்சிய நிலையும் நிகழ்ந்த நுட்பங்களை உய்த்துணர்ந்துகொள்க; அன்றியும் அரசுகளைப் பிள்ளையார் தமது "அப்பர்" என அழைத்தருளி மேற்கொண்ட நிலையும் கருதுக. இனி, ஈண்டுச் சிவபாதவிருதயர் தமது திருமகனார் என்ற நிலையிற் காணவருகின்றனர்; அவ்வோகைச் செய்தி கேட்டுத் தாதையார் வருகின்றனர் என்ற கருத்துடன் எதிர்கொண்ட பிள்ளையார், "எப்பொழுது வந்தருளிற்று" என்று உரைத்து அழைக்க, அவர் பிள்ளையாரைத் தொழுதபோது, பிள்ளையார், அந்தத் தாதையாரது சார்புபற்றித் திருத்தோணியில் இருக்கும் தாதையாரையும் தாயாரையும் நினைந்து தொழுதனர்; தாதையார் தொழுதபோது உலகத் தாதையார் என்ற நிலையில் பிள்ளையார் தொழவில்லை. அவ்வாறு தொழுதிடுதல் எம்மனோராகிய உலகரது பாசநிலையா யொழிந்து "பாசமற்று இலரா"கிய பிள்ளையார் போன்ற பெரியோர்நிலை யாகாது. பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின்ற எம்மனோர்க்குப் "பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்" என்றபடி உலகப் பொருள்களே காட்சிப்பட இறைவனை அவற்றுட் காணலரிது. ஆனால் பெரியோர் "பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார்"; ஆதலின் "பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம்" என்ற நிலையுடையார் என்ற நுட்பத்தினை ஈண்டுக் கண்டுகொள்க. பவபாச மறுத்தவர் - தொழுத தாதையாரை அவ்வாறே தாதையார் என்ற நிலையிற் காணாது அவர் சார்பில் தோணித் தாயாரையும் தந்தையாரையுமே நினைவுறச் செய்தது பவபாசமறுத்த நிலை என்க. இது "மறக்குமாறிலாத என்னை" (தேவா) என்ற நிலை. |
| 879 |
2778 | இருந்தவத்தோ ரவர்முன்னே யிணைமலர்க்கை குவித்தருளி "யருந்தவத்தீ! ரெனையறியாப் பருவத்தே யெடுத்தாண்ட பெருந்தகையெம் பெருமாட்டி யுடனிருந்த தே?" யென்று பொருந்துபுகழ்ப் புகலியின்மேற் றிருப்பதிகம் போற்றிசைத்தார்; | |
| 880 |
2779 | "மண்ணினல்ல" வென்றெடுத்து மனத்தெழுந்த பெருமகிழ்ச்சி யுண்ணிறைந்த காதலினாற் கண்ணருவி பாய்ந்தொழுக வண்ணலார் தமைவினவித் திருப்பதிக மருள்செய்தார் தண்ணறும்பூஞ் செங்கமலத் தாரணிந்த தமிழ்விரகர். | |
| 881 |
| 2778. (இ-ள்) இருந்தவத்தோரவர்....குவித்தருளி - பெருந் தவத்தையுடையவராகிய அந்தச் சிவபாதவிருதயர் முன்னே இணையாகிய மலர்போன்ற இரண்டு கைகளையும் கூப்பியருளி; "அருந்தவத்தீர்!.... இருந்ததே என்று - அரிய தவத்தையுடையவரே! என்னை அறியாப் பருவத்திலே எடுத்தாண்ட பெருந்தகையாராகிய தோணியப்பர் எமது பெரியநாயகியாருடன் நன்கெழுந்தருளி யிருந்தோ? என்ற கருத்துடன்; பொருந்து....இசைத்தார் - பொருந்தும் புகழினையுடைய சீகாழியின்மேல் திருப்பதிகத்தினாற் போற்றிசைப்பாராகி, |
| 880 |
| 2779. (இ-ள்) "மண்ணினல்ல"....என்று எடுத்து - "மண்ணினல்ல" என்று தொடங்கி; மனத்தெழுந்த...பாய்ந்தொழுக - திருவுள்ளத்திலே எழுந்த பெரிய மகிழ்ச்சியோடு உள்ளே நிறைவாகிய ஆசைப் பெருக்கினாலே கண்களிலிருந்து அருவிபோலக் கண்ணீர் பாய்ந்து வழிய; அண்ணலார் தமை வினவி - தோணியப்பர் இனி திருந்தமைபற்றித் தாதையாரை வினவி; தண்ணறும்...தமிழ் விரகர் - குளிர்ந்த மணமுடைய அழகிய செந்தாமரை மாலையினை அணிந்த தமிழ் விரகராகிய பிள்ளையார்; திருப்பதிகம் அருள்செய்தார் - திருப்பதிகத்தினை அருளிச்செய்தனர். |
| 881 |