| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டுரைக்க நின்றன. |
| 2778. (வி-ரை) இருந்தவத்தோர் - சிவபாதவிருதயர்; "செய்தவத்தால்" (2770); "தவமான நெறியணையும் தாதையார்" (2776) என்று பன்முறையும் அவரது தவம்பற்றியே விதந்து கூறியது அவரது சிவதவத்தின் பெருஞ்சிறப்புக் குறித்தது. இதுபற்றியே பிள்ளையாரும் "அருந்தவத்தீர்! என ஈண்டு அவரை விளித்தருள்வதும் கருதுக; "தாமென்று மனத்தளராத் தகுதியரா யுலகத்துக், காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்"(பிள்.தேவா - பிரமபுரம்) என்ற திருவாக்கு இவரது குறிப்புப் பெற நிற்பதும் காண்க; இவரது தவம் நிறைவெய்திய பயன் இப்போது ஈண்டு மதுரையிற் பெற்றமையால் இக்கருத்தால் இங்கு விதந்து பாராட்டியபடியாம். இருந்தவத்தோர் - பிள்ளையார் என்று கொண்டுரைப்பாருமுண்டு. |
| அவர் முன்னே இணைமலர்க் கைகுவித்தருளி - அவர் முன்னே - கை குவித்தது அவர் முன்பு ஆயினும் குறித்தது தோணியப்பரை என்பது குறிப்பு. |
| "எனையறியாப் பருவத்தே எடுத்தாண்ட பெருந்தகை யெம்பெருமாட்டி யுடனிருந்ததே?" - இது பதிகக் குறிப்பும் கருத்துமாம். "போதையார் பொற்கிண்ணத்தடிசில்" என்ற பதிகத்தின் இரண்டாவது பாட்டினறியக் கிடக்கின்றது. |
| "போதையார் பொற்கிண்ணத் தடிசில்" (பதிகம்) - என்றதனால் பொற்கிண்ணத்தில் ஞானமூட்டியதும், பிள்ளையாரது அறியாப் பருவமாகிய மூவாண்டு வயதும், ஞானவமு தூட்டி எடுத்தாண்டமையும், "பேதையா ளவளொடும் பெருந்தகையிருந்ததே" (பதிகம்) என்றதனால், "பெருந்தகையெம் பெருமாட்டி யுடனிருந்ததே-" என்றதும் பெறப்படுதல் காண்க. |
| அறியாப் பருவம் - அறிவு நிரம்பாத இளங் குழவிப் பருவம்; இறைவரை அறிந்து வழிபடாத காலம் என்றலுமாம்; மறந்த காலம் என்ற குறிப்பும் காண்க. என்னை இன்னார் என்று நான் அறியாத பருவம் என்றுரைக்கவும் நின்றது. |
| பெருந்தகை - யான் அறியாதிருந்தும் தான் நினைந்து அறிந்து எடுத்தாண்டமை குறிக்கப் "பெருந்தகை" என்றார். |
| இருந்ததே - நலம் பெற இருந்ததே என்க; ஏகாரம் வினா. "வினவி - அருள் செய்தார்"(3779) என மேல்வரும் பாட்டிற் கூறுதல் காண்க. |
| போற்றிசைத்தார் - இசைத்தாராய் - அருள்செய்தார் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க நின்றது; முற்றெச்சம். புகலியின் மேற் றிருப்பதிகம் போற்றி இசைத்தார் - பெருந்தகை எம்பெருமாட்டியுட னிருந்ததே எனத் தாதையார்பால் இறைவர் இறைவியாரது நலம் வினாவும் வகையால் பதிகம் அமைந்ததாயினும் புகலியைப் போற்றுதல் கருத்தென்பது. போற்றிசைத்தல் - ஒருசொல்லியல்பிற்று. |
| எம்பெருமாட்டி - பாலமுது ஊட்டிய நன்றி குறிக்க எம் என்ற உரிமைப்பாட்டுடன் கூறினார். பதிக முழுமையும் அம்மையைப் போற்றியதும் குறிப்பு. |
| பொருந்து புகழ் - தன் மேன்மைகருதிப் புகழ் தானே வந்து பொருந்தும் என்க. ஏனைய புகழ்கள்போலப் பொருந்தாத என்பதின்றிப் பொருந்திய - பொருத்தமாகிய - புகழ் என்க. |
| புகலியின் மேல் - திருவாலவாயினின்றபடி சீகாழியாகிய அத்தலத்தைப் பாடியதென்ற வரலாறு குறிக்க இவ்வாறு எடுத்துக்காட்டினர். |
| 880 |