| பணிவீர் - என்னுடன் கூடவே போந்து பணிவீர் என்றதாம். |
| ஞானமுணர்வார் - ஞானம் - "எண்ணரிய சிவஞானத் தின்னமுதம்" (1965) "தாவில்தனிச் சிவஞானம்"(1916); உணர்வார் - உணரும் தன்மையுடையவர் என வினைப்பெயர்; ஞானமுணர்வாராதலின் இவ்வாறு பணித்தருளினர் என்பது குறிப்பு. அருளியதன் அருண்ஞானக் குறியாவது அவர்களது பிரிவாற்றாமையினை அகற்றியதும், பாண்டி நாட்டுப் பதிகளைத் தம்முடன் கூட வழிபடுமாறு பணித்து வழிகாட்டியருள்வதும், அதன்மூலம் பாண்டி நாடு முழுமையும் தாமே போந்தருளி "வேதநூல் நெறியே யாக்கி வெண்ணீற்றின் சார்வினான் மிக்கு யர்ந்த கதியருளுவதும்"(2790), பிறவுமாதல் கண்டுகொள்க. |
| அவரும் - தென்னவனார் முதலிய மூவர்களும்; போத - உடன் வர. |
| 884 |
2783 | ஆறணிந்தார் தமைவணங்கி யங்குப் போற்றி யணியாப்ப னூரணைந்து பணிந்து பாடி நீறணிந்த செல்வர்பதி பிறவுஞ் சேர்ந்து நிலவுதிருப் பதிகங்க ணிகழப் பாடிச் சேறணிந்த வயற்பழனக் கழனிசூழ்ந்த சிரபுரத்து வந்தருளுஞ் செல்வர் செங்கண் ஏறணிந்த வெல்கொடியார் திருப்புத் தூரை யினிதிறைஞ்சிச் சிலநாளங் கிருந்தா ரன்றே. | |
| 885 |
| (இ-ள்) ஆறு....போற்றி - கங்கையை(ச் சடையில்) அணிந்த இறைவரை அப்பதியிற் போற்றி; அணி...பாடி - அழகிய திருஆப்பனூரினைச் சார்ந்து வணங்கிப் பாடியருளி; நீறணிந்த...பாடி - திருநீறு தங்கி அழகு செய்யும் திருமேனியையுடைய செல்வராகிய இறைவரது பதிகள் பிறவற்றையும் சேர்ந்து நிலைபெற்ற திருப்பதிகங்களை நிகழும்படி பாடி; சேறணிந்த....செல்வர் - சேறு பொருந்திய வயல்கள் சூழ்ந்த சீகாழியில் வந்தவதரித்தருளும் செல்வராகிய பிள்ளையார்; செங்கண்....இருந்தாரன்றே - செங்கண்ணையுடைய இடபத்தை உடைய வெற்றி பொருந்திய கொடியினை உயர்த்திய இறைவரது திருப்புத்தூரினை இனிதாகச் சார்ந்து வணங்கிச் சில நாள்கள் அங்கு எழுந்தருளி யிருந்தனர். |
| (வி-ரை) ஆறு - கங்கையாறு; சடையில் என்பது இடநோக்கி வருவிக்கப்பட்டது. |
| அங்குப் போற்றி - இறைவர் எங்குமுள்ளாராதலின் எங்கெங்கும் போற்றும் நிலையில் அங்கும் போற்றி. |
| அணி ஆப்பனூர் - "அணியாப்ப னூரானை" என்ற பதிக ஆட்சி போற்றப்பட்டது. வைகையாற்றினது வடகரையின் அமைப்பாகிய அணியும், திருவாலவாயின் காட்சியினது அணியும், பிறவும் குறிப்பு. |
| நீறு அணிந்த - நீறு இங்குத் தங்கியதால் அழகினைப் பெற்ற. |
| செல்வர் - ஐசுவரிகமுடையவர்; ஐசுவரியம் - ஈசுவரத் தன்மை. |
| நிலவு திருப்பதிகங்கள் நிகழ - நிலவுதல் - அழிவுறாதிருத்தல்; நிகழ - வழங்குமாறு. |
| சேறு அணிந்த - சேறு - ஏனைய இடங்களில் அழுக்கென் றொதுக்கப்படினும் வயலில் உள்ளபோது அழகு தருவது; பயிர் விளைவுக்குக் காரணமாய் உலகு புரக்கும் தன்மைக்குக் காரணமாதல் குறிப்பு. |