[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1107

தன்றி உறுத்தல் செய்யா என்று எடுத்துக்காட்டியபடி;-(9) மொய் ஒளி உந்தி - மாலினுடைய அழகிய உந்தித் தாமரை. உரவோன் - பிரமன்;-(10) மிண்டு - வன்மை.
தல விசேடம்:- திருப்பரங்குன்றம் - பாண்டி நாட்டின் பாடல்பெற்ற தலங்களுள் மூன்றாவது பதி; முருகப்பெருமானது படைவீடுகள் எனப்படும் ஆறு சிறந்த பதிகளுள் முதலாவது; அப்பெருமான் சூரர்களை வதைத்தபின் இங்கு எழுந்தருளித் தெய்வயானையம்மையாரைத் திருமணம் செய்து கொண்டருளிய பெருமையுடைய பதி. அத்திருமணத்தில் சிவபெருமான் உமையம்மையாரோடும் எழுந்தருளி யிருந்து கண்டு, தேவர்களுக்கும் வெளிப்படக் காட்சி கொடுத்த பெருமைபெற்ற பதி; இத்திருமணக் காட்சிபற்றிய விழா இன்றும் நடைபெறுகின்றது. ஆனால் கந்தமா புராணத்திற் கூறியபடி சூரசங்காரத்தினை அடுத்து நடைபெறாது பல மாதங்கள் பின் நடைபெறுவது பிற்காலத்தாரால் நேர்ந்த வழக்கு மாறுபாடு; அதனை மாற்றிப் புராணத்துள் விதித்த உரிய நாளில் செய்வது சிறந்த புண்ணியம்; ஆளுடைய நம்பிகள் திருவாலவாயினின்றும் எழுந்தருளித் தமிழ் மூவேந்தர் முன்னே மொழிந்தாறுமோர் நான்குமோரொன்றினையும்"(11) என்று தமது "கோத்திட்டையும் கோவலும்" என்ற பதிகத்தினுள் வைத்துப் பாராட்டியருளி, இறைவரது திருவடிக்கீழ் ஆட்செய்யும் அருமை நினைந்து "அடிகே ளுமக்காட் செயவஞ் சுதுமே" என்று பாடியருளிய பெருமை பெற்ற பதி; பரங்குன்றம் - என்பது கோத்திட்டை எனப் பெற்றது. பரன் எழுந்தருளியது எனவும் பரன்போன்றது எனவும் உரைக்க நின்றது. வைப்புத்தலம் என்றும் கூறுவர்; திட்டை - மேடு - குன்று; இங்குக்காணும் திருக்கோயில் ஏறக்குறைய 1200 ஆண்டுகளின் முன்னே மகேந்திரவர்மன் முதலாகிய பல்லவர்களது ஆட்சியில் மலையைக்குடைந்தெடுத்து நிறுவிய கற்குகைக் கோயில்களுள் ஒன்றாம்; இறைவரது திருவுருவமும் முருகப்பெருமான் தெய்வயானையம்மையை மணஞ் செய்யும் திருமணக் கோலம் அணிதிகழ அமைந்துள்ளமை கண்டு கண்டு மகிழ்ந்து உய்யப்பெறுதல் சிறப்பு. தம்மை யடைந்து "வேண்டினர் வேண்டியாங் கெய்தினர் வழிபட" இகபர வாழ்வுகளையெல்லாம் அருளும் கலியுகக் கண்கண்ட தெய்வமாகிய முருகப்பெருமான், தமது திருமணக் கோலத்துடன் எழுந்தருளியிருந்து அனேகமாகிய மக்கட்கூட்டம் இல்வாழ்வு பெற்றின்பமடைந்திருக்க மணம்புணரும் பெருவாழ்வை நாடோறும் வகுத்துவைக்கும் பெருங்கருணை இன்றும் விளங்கக்காணும் பெருமையினால் "போகியா யிருந்து யிர்க்குப் போகத்தைப் புரிதல்"(சித்தி .1-50) என்னும் ஞானசாத்திர உண்மையினைத் தெளியக் காட்டும்பதி. இறைவரும் அவ்வாறே விளங்கும் தன்மை பதிகம் 1-2-3-4-9 பாட்டுக்களிற் பாராட்டப்பட்ட தலம்.
சுவாமி - பரங்கிரிநாதர்; அம்மை - ஆவுடை நாயகி; தீர்த்தம் - சரவணப் பொய்கை; மலைமேல் - காசி தீர்த்தம்-கந்த தீர்த்தம்; பதிகம் - 2.
இது திருப்பரங்குன்றம் என்ற நிலையத்தினின்றும் 1/4 நாழிகையளவில் அடையத் தக்கது. மதுரையினின்றும் மேற்கில் கற்சாலைவழி 4 நாழிகையில் அடைவதற்குரியதாக மற்றும் எல்லா வசதிகளும் உள்ள தலம்.
திருப்பரங்குன்றம்
திருச்சிற்றம்பலம் பண் - குறிஞ்சி - 1-ம் திருமுறை
முற்றுஞ் சடைமுடைமேல் முதிரா விளம்பிறையன்
ஒற்றைப் படவரவ மதுகொண் டரைக்கணிந்தான்