| இருக்கவல்ல - வீற்றிருக்கும் அருமைப்பாடு குறித்தது;-(9) பெருகி - கருணை மேன்மேற் பொங்கி;-(10) ஆறு - அங்கம்; நான்கு - வேதம்; அமர்தல் - விரும்புதல்; - (11) சேடர் செல்வர் - சேடராகிய செல்வர்; சேடர் - அறிவுடையோர்; சொல்லல் - சொல்லுதலும் பாடுதலும்; "பிதற்றாய் பிறைசூடி தன்பேரிடமே (தேவா)" |
| தலவிசேடம்:- திருப்புத்தூர் - பாண்டி நாட்டுப் பாடல்பெற்ற பதிகளுள் 6-வது பதி. தலவிசேடம் - III -பக். 684 பார்க்க. இலக்குமி பூசித்த குறிப்புத் தோன்ற ஸ்ரீதளி எனப்படும். "திருத்தளி" (தேவா-தாண்); வயிரவர் பூசித்துச் சுவாமிக்கும் அம்மைக்குமிடையே (கந்தர்போல) கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் வரம்பெற்ற பதி. |
2784 | பற்றார்தம் புரங்கண்மலைச் சிலையாற் செற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து புற்றாரும் பணிபூண்ட புனித னார்தம் பூவணத்தைப் புக்கிறைஞ்சிப் புகழ்ந்து பாடிக் கற்றார்க டொழுதேத்துங் கானப் பேருங் கைதொழுது தமிழ்பாடிச் சுழியல் போற்றிக் குற்றாலங் குறும்பலாக் கும்பிட் டேத்திக் கூற்றுதைத்தார் நெல்வேலி குறுகி னாரே. | |
| 886 |
| (இ-ள்) பற்றார்தம்...போந்து - பகைவரது திரிபுரங்களை மலையாகிய வில்லினாலே அழித்தருளிய பரமனாரது திருப்புத்தூரினைப் பணிந்து சென்று; புற்றாரும்....புகழ்ந்து பாடி - புற்றில்வாழும் பாம்புகளை அணிந்த புனிதராகிய இறைவரது திருப்பூவணத்தை அணைந்து வணங்கிப் புகழ்ந்து பாடியருளி; கற்றார்கள்....தமிழ் பாடி - கற்றவர்கள் தொழுது போற்றுகின்ற திருக்கானப்பேர்ப் பதியினையும் தொழுது பதிகம் பாடி; சுழியல்...குறுகினாரே - திருச்சுழியலைப் போற்றிப் பின்னர்க் குற்றாலத்தினையும் குறும்பலாவினையும் கும்பிட்டுத் துதித்துக் கூற்றுவனை உதைத்தருளிய இறைவரது திருநெல்வேலியினைச் சேர்ந்தருளினார். |
| (வி-ரை) பற்றார் - பகைவர் - அன்பில்லாதவர். |
| மலைச்சிலையாற் செற்ற - என்றதுபசாரம். சிலை வளைத்தமை மட்டேயன்றி அதனால் ஒரு செயலுமின்றி நகைப்பினாலே எரித்தனர். |
| புற்றாரும் பணி - பணி - அரவு; புற்றாரும் - என்பது பாம்பாகிய சாதியின் பொதுவியல்பேயன்றி இறைவர் அணிந்த அரவுகள் புற்றில் வாழ்வன என்பதன்று. |
| கற்றார்கள் தொழுதேத்தும் - "கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை" (திருவிசைப்பா); "தம்மை மறந்து நின்னை நினைப்பவர்" (கோயினான் மணிமாலை) என்ற தன்மை வரக்கற்றவர். |
| குற்றாலம் - குறும்பலா - இவையிரண்டும் தனிப் பதிகங்கள் பெற்ற இரண்டு பதிகள்; ஒரு தலத்துள்ளனவாதலின் ஒன்றாகச் சேர்த்துக் கும்பிட்டேத்தி என்று ஒருவினையாற் கூட்டி உரைத்தார்; குற்றாலம் - கும்பிட்டும் குறும்பலா ஏத்தியும் என்று விரித்து நிரனிரையாகக் கூட்டி முடிப்பதுமாம்; தலவிசேடம் பார்க்க. குற்றாலம் என்பது கூத்தர் கோயில் எனக் குற்றாலத்தினுள் உள்ள தனித் தளி; குறும்பலா - அகத்திய முனிவரால் விட்டுணு உருவத்தைச் சிவனுருவாக ஆக்கப்பட்ட தலம். வரலாறு கந்தபுராணத்துட் காண்க. (திருக்குற்றாலப் படலம்). |