| சுழியல் போற்றி - என அடைமொழியின்றி வாளாகூறியது பதிகமிறந்துபட்ட நிலைக்குறிப்புப்போலும். |
| 886 |
| திருப்பூவணம் |
| ்திருச்சிற்றம்பலம் பண் - தக்கேசி - 1-ம் திருமுறை |
| அறையார் புனலு மாம லரு மாடர வார்சடைமேல் குறைமார் மதியஞ் சூடி மாதோர் கூறுடை யானிடமாம் முறையார் முடிசேர் தென்னர் சேரர் சோழர்கடாம் வணங்குந் திறையா ரொளிசேர் செம்மை யோங்குந் தென்றிருப் பூவணமே. | |
| (1) |
| திண்ணார் புரிசை மாட மோங்குந் தென்றிருப் பூவணத்துப் பெண்ணார் மேனி யெம்மி றையைப் பேரிய லின்றமிழால் நண்ணா ருட்கக் காழி மல்கு ஞானசம் பந்தன்சொன்ன பண்ணார் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வானிடையே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு:- இறைவரது இடம் தென்றிருப்பூவணமே. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு: - (2) அறை - ஓசை - சத்தம்; குறைஆர் - குறைதல் பொருந்திய; மூறையார் முடிசேர் - "முடியா லுலகாண்ட மூவேந்தர்" (தேவா-நம்பி); தென்னர் சேரர் சோழர்கள் தாம்வணங்கும் - தமிழ் மூவேந்தர்களுக்கும் பொதுவாகிய வணங்குமிடம் என்பது நாட்டு நடப்பினாலும் அறியக்கிடக்கின்றது. 2 - 5-வது பாட்டுக்களும் பார்க்க; தலவிசேடம் பார்க்க; திறைஆர் ஒளிசேர் செம்மை - ஏனை ஒளிகள் எல்லாம் திறையளக்கும் - பணியும் - பேரொளியுடைய செவ்விதாம் தன்மை; ஒளி - ஞானவொளியினையும், செம்மை - சிவத்தன்மையினையுங் குறிப்பாலுணர்த்தின; தென் - அழகு; தெற்கு என்றலுமாம். தென்றிருப்பூவணமே - ஏகாரம் தேற்றம். திரு - தெய்வத் திருவுணர்த்தும் சிறப்பு; பாட்டுத்தோறும் இதுவே மகுடமாய் வருவது - இத்தலச் சிறப்புணர்த்துவது; தென்திருப்பூவணமே - இடமாம் என்று கூட்டுக; - (2) மருவார் - பொருந்தாதவர் - பகைவர்; சாலி - நெல்வகை; ஆலை - கரும்பாலை; மன்னர் - மூவேந்தர்; காத்தளித்த சேடர் - சேடர் - அறிவுடையார்; மாதவர்; இவர்களைக் காப்பது அரசர் கடன் என்பது; - (3) வைகை....வாரி சேர நின்ற - வைகை அணிமையில் கடலை நோக்கிச் சேரஉள்ள நிலையும் அவ்வணிமையில் அதன் வடகரையில் இப்பதி உள்ளமையும் குறிப்பு. சேரநின்ற - சேர்தல் - அடுத்தல்; சேர - நின்ற - என்றதனால் அணிமையில் நின்றதேயன்றிச் சேர்தலில்லை என்றது குறிக்கப்பட்டது. வைகை கடலொடு சேராது இராமநாதபுரம் சில்லாவின் கோடியில் ஓர் ஏரியின்கண் பாய்ந்து முடிந்துவிடுவதாம். "கடல் ஒருவர்க்கு முதவாத வுவரியென, மடுத்தறியாப் புனல்வைகை"(வாத - உப - பட) என்று இதனைச் சுவைபடக் கூறுவது திருவிளையாடற் புராணம்; வைகையின் கரையில் இந்நகரம் அழகுடன் அமைவது பற்றி மேல் 4 - 8 - 9-ம் பாட்டுக்களும் "அணியார் வைகைத் திருக்கோட்டி னின்றதோர் திறமும் தோன்றும்" என்ற திருத்தாண்டகமும் பார்க்க; - (5) வில்லி - வில்லையுடையவன்; வில்லியாகிய - மகிழ்ந்தான் என்று கூட்டுக; - (6) மறையோன் - என்று உலகர் ஏத்த நின்ற என்க; மறையோனாகிய பிரான் - என்றலுமாம்; நன்று தீதென் றொன்றிலாத - நன்மையென்றும் தீமை யென்றும் வரும் பாடுபாடு தன்னிடத்துப் பொருந்தாதவன்; "குற்றநீ |