[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம் | 1113 |
| பெய்து இறைவனை ஆட்டுதல் குறித்தது. மேற்பாட்டில் வருவன பாத்தியம் அர்க்கியம் ஆசமனம் முதலாயின; -(4) நிறையுடை - அன்பின் நிறைவுடைய; நிறைவாவது வேறொன்றற்கும் இடந்தராமை; முழவு - பலி - பாட்டு - வழிபாட்டு அங்கங்கள்; குறையுடையவர் - தம்பாற் குறைந்தடைந்தவர்; -(5) வண்ணமும் - உம்மை தீதிலாராதலுடன் என இறந்தது தழுவிற்று; -(6) கள்ளமே - உள்ளமே - ஏகாரங்கள் தேற்றம்; -(7) அலகிட - திருவலகுப் பணி செய்ய; ஞானமாமலர் - செபித்துச் சாத்தும் பூ. வாய்மை - கொடை, பொறை, அன்பு முதலாகிய அட்டபுட்பம் என்றலுமாம்; -(8) நாளுநாளுயர்வதோர் நன்மை - "பையப் பையப் பழுக்கு மருட்கனி" என்றபடி பக்குவ முறையில் நாடோறும் வளரும் அருணலம்; வளர்வதோர் - வளருந் தன்மையேயன்றிக் குறைவுபடாத ஒப்பற்ற; -(9) நிலை - பணிதல்; கலையினார் - நுல்களாற் பேசப்படும்; -(10) உறித்தலைச் சுரை - உறியாகிய சுரை; உச்சி - தலையின் மயிர் என்று பொருள் தந்தது; கறித்தல் - உண்ணுதல்; -(11) கோடு - கரை; பாட்டகத்திவை - பாட்டுக்களுள் இவற்றை. | | தலவிசேடம் :- திருக்கானப்பேர் - பாண்டிநாட்டுப் பாடல் பெற்ற பதிகளுள் 10-வது பதி. இது காளையார் கோயில் என விளக்கமாய் வழங்கப்படுவது. ஆளுடைய நம்பிகளும் சேரமான் பெருமாணாயனாரும் திருச்சுழியலில் வழிபட்டு எழுந்தருளியிருந்தபோது இறைவர் நம்பிகளுக்குக் "கங்குலிடைக் கனவின்கட் காளையாந் திருவடிவாற், செங்கையினிற் பொற்செண்டுந் திருமுடியிற் சுழியமுடன், எங்குமிலாத் திருவேடம் காட்டி"க், "கானப்பேர் யாமிருப்பது எனக்கழறி" அகல, நம்பிகள் உணர்ந்து "தொண்டரடித் தொழலும்" என்று தொடங்கும் திருப்பதிகத்தினைக், "கண்டு தொழப் பெறுவதென்று கொலோவடியேன் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே" எனப் பாடியருளிப் போந்து வணங்கிய பதியாதலின் இப்பெயரால் வழங்குவது; காட்டானையாகும்படி சபிக்கப்பெற்ற ஐராவதம் போந்து விதிப்படி வழிபட்டுச் சாப நீங்கப்பெற்ற பதி யென்பது பிள்ளையாரது திருப்பதிகத்துப் போற்றப்பட்டது. நன்கு திருப்பணிகள் பலவும் செய்யப்பட்டு விளங்குகின்ற தலம்; அத்திருப்பணிகள் காரணமாய், அவற்றைச் செய்த அன்பர் "பத்தர் குணத்தினரா யெத்திசை யும்புகழ, மன்னி யிருப்பவர்கள், வானி னிழிந்திடினு மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே" என்று பயனருளிய நம்பிகளது திருவாக்கின் வாய்மையை உலகம் காணுமாறு நிலவுவதும் காண்க; ஐராவதம் "விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடும்" என்ற பிள்ளையாரது திருவாக்கின் வாய்மை காண இன்றும் திருக்கோயிலின் தடாகத்தில் யானை மூழ்கிவரும் திறமும், தீர்த்தம் யானைமடு என வழங்குவதும், "கார்வயல்சூழ்" என்ற நம்பிகளது திருவாக்கின் வாய்மையினால் இன்றும் வயல்கள் கார்நெல்வகை சிறக்க உள்ள திறமும் காணப்பெறுவன. | | சோமேசுவரர் - சௌந்தரநாயகியம்மை; சந்நிதி 1; காளீசுவரர் - சொர்ணவல்லியம்மை; சந்நிதி 1; சுந்தரேசுவரர் - மீனாட்சியம்மை; சந்நிதி 1 என மூன்று சந்நிதிகள் திருக்கோயிலில் உள்ளன; தீர்த்தம் - யானைமடு; பதிகம் 2. | | இது திருவாடானைக்கு மேற்கில் கற்சாலை வழி 21 நாழிகையிலும் தேவகோட்டையிலிருந்து தென்மேற்கில் மட்சாலை வழி 15 நாழிகையிலும் உள்ளது; இவை பழைய வழிகள், இப்போது மானாமதுரை - திருச்சி இருப்புப்பாதையில் சிவகங்கை நிலையத்தினின்றும் 12 நாழிகையளவில் கற்சாலைவழி அடைவது சுருக்கம். அந்தப் பாதையில், நடராசபுரம் - நாட்டரசன்கோட்டை நிலையங்களினின்றும் இன்னும் அணிமையில் அடையலாம். ஆயின் வண்டிவசதிகள் குறைவு. |
|
|
|
|