| உயர்ந்த மாடங்களையுடைய மாதோட்டத்தில் திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளிய இறைவரது செம்மையாகிய திருவடிகளை மிகவும் நினைந்து பணிந்து துதித்து; அன்பரோடும்....உற்றார் - இறைவர்பால் முன்னாள் உலவாக்கிழி பெற்ற பிள்ளையார் அன்பர்களுடனே கூடியிருந்து மகிழ்ச்சி பொருந்தினர். |
| (வி-ரை) மேவி - மேவி அங்கிருந்தபடியே ஈழநாட்டுத் தலங்க ளிரண்டினையும் வணங்கிப் பதிகம் பாடியருளினர் என்பார் மேவி என்றார். மேல் உன்னி என்றதுமிது. |
| ஆழி புடைசூழ்ந் தொலிக்கும் ஈழம் - ஈழம் - ஈழநாடு; இப்போது இலங்கைத் தீவு எனப்படும்; தீவாதலின் ஆழிபுடை சூழ்ந்து ஒலிக்கும் என்றார். புடை - எல்லாப் பக்கங்களிலும்; எப்புடையினும் என முற்றும்மை தொக்கது. |
| திருக்கோணமலை - திரிகோணமலை எனப்படும். |
| மாதோட்டம் - நகரம்; திருக்கேதீச்சரம் - கோயிலின் பெயர்; மாதோட்டம் உள்நாடும் கேதீச்சரம் நகரமும் ஆம் என்பாருமுண்டு; "மாதோட்ட நன்னகருள்...பாலாவியின் கரைமேல்....திருக்கேதீச்சரத்தான்" (நம்பி. தேவா). |
| அன்பரோடும் - உவகையுற்றார் - "அன்பரொடு மரீஇ" (12 - சூத் - போதம்); அன்பர்களுடன் கூடியிருத்தல் அணைந்தோர் தன்மை; அது முத்தி யின்பத்தின் மிக்க இன்பத்தினைத் தருதல் குறிக்க உவகையுற்றார் என்றார். |
| உலவாத கிழிபெற்றார் - உலவாக்கிழி பெற்றாராகிய பிள்ளையார். பெற்றார் - வினைப்பெயர். உலவாத கிழிபெற்ற வரலாறு திருவாவடுதுறையில் பிள்ளையார், சிவயாகத்துக்குத் தந்தையாருக்காகப் பாடி 1000 பொன் கொண்டதாய் எடுக்க எடுக்கக் குறையாத பொற்கிழியை இறைவர்பாற் பெற்றனர் என்பதாம். முன் 2315 முதல் 2328 வரை உள்ள பாட்டுக்களில் விரித்துரைக்கப்பட்டது காண்க. உலவாக்கிழி பெற்றார்போன்று அன்பர் கூட்டத்தை விரும்பியடைந்து மகிழ்ந்தனர் என்ற குறிப்பும் பெற நின்றது காண்க. உன்னி - இவ்வாறே திருக்காளத்திமலையி லிருந்தபடியே வடக்கு நோக்கிப் பணிந்து வடநாட்டுப் பதிகளை நினைந்து பாடியருளுதலும் காண்க. ஈண்டு இராமேச்சுரத்திலிருந்தபடியே ஈழநாட்டுப் பதிகளிரண்டினையும் பாடியருளியது இடையே கடல் குறுக்கிட்டுச் சூழ்ந்திருத்தலால் கடலைக் கடந்து செல்லலாகாது என்ற மறைவிதி காரணமாக என்பது கருதப்படும. ஆழிபுடை சூழ்ந்தொலிக்கும் ஈழம் என ஆசிரியர் அறிவித்ததும் இக்குறிப்பும் பெறுதற்கு. |
| 890 |
| திருக்கோணமலை (திரிகோணமலை) |
| திருச்சிற்றம்பலம் பண் - புறநீர்மை - 3-ம் திருமுறை |
| நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பு நிமலர்நீ றணிதிரு மேனி வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையார் கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக் குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந்த தாரே. | |
| (1) |
| குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரைக் கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன் உள்ளசெந் தமிழார் மாலையீ ரைந்து முரைப்பவர் கேட்பவ ருயர்ந்தோர் சுற்றமு மாகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| |