[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1129

முதலைகள் மிகவுமுண்டு. சுவாமி - கேதீசுவரர்; அம்மை - கௌரியம்மை; தீர்த்தம் - பாலாவி; பதிகம் 2.
இஃது இலங்கை கவர்ன்மெண்டு இருப்புப்பாதையில் தலைமன்னாரினின்றும் 20 நாழிகையளவில் உள்ள கோட்டைமன்னார் நிலையத்தினின்றும் மேற்கில் கற்சாலைவழி 6 1/2 நாழிகையளவில் அடையத்தக்கது. இரயில் நிலையத்திலிருந்து மாட்டு வண்டிகள் கிடைக்கும். மன்னார் பட்டினத்தில் (Motor) மோட்டார் வண்டி உண்டு. திருக்கேதீச்சரம் இரயில் நிலையத்தினின்று இரண்டு நாழிகை யளவிலும் அடையலாம்.
2789
அப்பதியைத் தொழுதுவட திசைமேற் செல்வார்
   அங்கையன றரித்தபிரா னமருங் கோயில்
புக்கிறைஞ்சிப் பலபதியுற் தொழுது போற்றிப்
   புணரிபொரு தலைகரைவா யொழியப் போந்தே
செப்பரிய புகழ்த்திருவா டானை சேர்ந்து
   செந்தமிழ்மா லைகள்சாத்திச், சிவனார் மன்னும்
ஒப்பரிய புனவாயில் போற்றி செய்து
   வணங்கினா ருலகுய்ய ஞான முண்டார்.

891

(இ-ள்) அப்பதியை...செல்வார் - அந்தப் பதியினைத் தொழுது (அங்குநின்றும் நீங்கிப்) பின்பு வடதிசையின்மேற் செல்வாராகி; அங்கையனல்...இறைஞ்சி - அழகிய கையில் அனலை ஏந்திய இறைவர் விரும்பி வீற்றிருக்கும் கோயிலினுள்ளே புகுந்து வணங்கி; பல பதியும் தொழுது போற்றி - பல பதிகளையும் வணங்கிச் சென்று; புணரி....போந்தே - கடல் அலைகள் புரண்டுவரும் அவ்வெல்லைகள் பிற்படக் கடந்து சென்று; செப்பரிய....சாத்தி - சொல்லுதற்கரிய புகழையுடைய திருவாடானைப் பதியினைச் சேர்ந்து செந்தமிழ் மாலைகளைச் சாத்தி; சிவனார்....உண்டார் - உலக முய்தற்பொருட்டுச் சிவஞானமுண்டருளிய பிள்ளையார் ஒப்பற்ற திருப்புனவாயிலினைத் துதித்து வணங்கியருளினார்.
(வி-ரை) அப்பதி - முன்பாட்டில் "உன்னிமிகப் பணிந்தேத்தி" என்ற திருக்கேதீச்சரமாகிய பதி என அகரம் முன்னறிசுட்டு. பதியைத் தொழுது - என்றது இங்கு நின்றவாறே நலத்தை நோக்கித் தொழுதார் என்ற குறிப்புத் தருவது.
கோயில் - திருவிராமேச்சுரம். முன்னதனைத் தொழுது என்றதனால் இருந்த வாறே மனத்தாற்றொழுது என்பதும், இங்குப் புக்கிறைஞ்சி என்றதனால் நேரே சென்று மெய்யுற வணங்கி என்பதும் குறிப்பிற் பெறவைத்த நயம் கண்டுகொள்க. இறைஞ்சி - செல்வாராகி விடைபெற்றுக் கொள்ளும் பொருட்டு வணங்கி.
புணரி பொருது அலைகரைவாய் ஒழிய - கடற்கரை எல்லைகள் நீங்க; ஒழிய - பிற்பட.
செப்பரிய புகழ் - பெயர்த்தற்கரிய முனிசாபமும் நீங்கவருளியமையும், பிறவுமாம்; தலவிசேடம் பார்க்க.
செந்தமிழ் மாலைகள் - பதிகம் ஒன்றே இப்போது உள்ளது; பல பதிகங்களிருந்துஏனையவை சிதலரித்தொழிந்தன போலும். பதிகத்துப் பாடல் ஒவ்வொன்றும் தனித்தனி ஒவ்வோர் மாலையாம் என்ற மரபுபற்றி இப்பதிகப் பாடல்களை மாலைகள் என்றார் என்றலுமாம். "செந்தமிழ்" (11) என்ற பதிகக் குறிப்பும் கருதுக.