1130திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

ஒப்பரிய - "பழம்பதி" என்பது முதலிய சிறப்புக்களாலும், மூர்த்திவிசேடச் சிறப்பாலும், பாண்டிநாட்டின் 14 பதிகளும் இங்கு ஒருங்கே வழிபட உள்ள சிறப்பாலும், பிறவாற்றாலும் ஒப்பரிய என்றார். தலவிசேடம் பார்க்க.

891

பலபதி - இவை உப்பூர் - திருவெற்றியூர்(வைப்புத் தலம்) முதலாயின என்பது கருதப்படும்.
திருவாடானை
திருச்சிற்றம்பலம் பண் - நட்டராகம் - 2-ம் திருமுறை
மாதோர் கூறுகந் தேற தேறிய, வாதி யானுறை யாடானை
போதி னாற்புனைந் தேத்து வார்தமை, வாதி யாவினை மாயுமே. (1)

(1)

வீட னார்மலி வேங்க டத்துநின், றாட லானுறை யாடானை
நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ், பாட நோய்பிணி பாறுமே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- ஆதியானுரையும் திருவாடானையைப் போற்றுவாரை வினைவாதியா; அவர்களது பழவினைகளும் நோயும் பிணியும் மாயும்.
பதிகப் பாட்டுக் குறிப்பு : - (1) போது - நாண்மலர்; -(2) வீடும் - நீங்கும்; -(3) நோய் மங்கும் என்க; பிணி - நோயின் மூலமாகிய பிணிப்பு; -(4) தொழ எண்ணுவார் - தொழ எண்ணுதலே பயன் தரும்; 8-வது பாட்டும் பார்க்க: -(5) கொய் - பறிக்கும்; கை - கையிற்கொண்ட; -(6) முன்செய்த ஊனம் - பழவினை; உள்ள - உள்ளவை - அகரவீற்றுப் பலவறிசொல்; -(7) ஆடானைப் பதியை வலங்கொள்வார் - என்க; -(9) அறையும் - ஒலிக்கும்; பறையும் - நீங்கும்; -(11) வேங்கடம் - சுடுகின்ற சுடலை; (வெங்கடம் - என்பதும் பாடம்.) நோய்பிணி - நோயும் அதன் மூலமாகிய பிணியும்; பிணிப்பு - ஆணவம்.
குறிப்பு :- இப்பதிகம் மலர்தூவி இத்திருநகரைத் தொழவே வினைமாயும் என்ற கருத்துக் கொண்டு தலத்தினைப் பாடியது. "ஆரூரைப் பத்தி மலர்தூவ" (குறிஞ்சி); "மலர்தூவி முதுகுன்றை" (குறிஞ்சி) என்ற பதிகங்கள் போலக் காண்க. ஆதலின் இது தலத்தின் புறத்து அருளப்பட்டதென்று கருத இடமுண்டு. அவ்வாறாயின் "செந்தமிழ் மாலைகள் சாத்தி" (2789) என்ற குறிப்புக்கேற்ப மற்றும் பதிகமும் இருத்தல் கூடுமென்பது ஆராயத் தக்கது.
தலவிசேடம்:- திருவாடானை - பாண்டிநாட்டுப் பாடல் பெற்ற பதிகளுள் ஒன்பதாவது தலம். "ஆட்டுத் தலையும் யானையுடலு மாக" என்று சபிக்கப்பெற்ற பிருகு முனிவர் அவ்வுருவத்துடனே வந்து பூசித்துச் சாப நீங்கப்பெற்ற தலமாதலின் இப்பெயர் பெற்றது. தூர்வாசு முனிவர் தம்மிடம் வந்தபோது வந்தனை செய்யாமையால் அவர் அவ்வாறு பிருகு முனிவரைச் சபித்தனர் என்பது வரலாறு. "அஜகஜபுரம்" என்று இதனை வடமொழியில் மொழிபெயர்த்துக்கொண்டு வழங்குவர் (அஜம் - ஆடு; கஜம் - ஆனை); இவ்வுருவம் கோயிலில் வைத்து வழிபடப்பெறுகின்றது. நீலமணியைச் சிவலிங்கமாய்த் தாபித்துச் சூரியன் வழிபட்டமையால் சுவாமிக்கு ஆதிரத்தினேசுவரர் என்று பெயர் வழங்கும். சுவாமி - ஆடானைநாதர் (அஜகஜேஸ்வரர்); அம்மை - அம்பாயிரவல்லி; தீர்த்தம் - சூரிய தீர்த்தம்; பதிகம் - 1.