| இது சிவகங்கை நிலையத்தினின்றும் திருக்கானப்பேர் வழி கிழக்கில் கற்சாலைவழி 35 நாழிகையளவில் அடையத்தக்கது; மோட்டார்பஸ் வசதி உண்டு. காரைக்குடி நிலையத்தினின்று 38 நாழிகையளவிலும் அடையலாம். |
| திருப்புனவாயில் |
| திருச்சிற்றம்பலம் பண் - காந்தார பஞ்சமம் - 3-ம் திருமுறை |
| மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி நூலினன் பன்னிய நான்மறை பாடியா டிப்பல வூர்கள் போய் அன்னமன் னந்நடை யாளொ டும்மம ரும்மிடம் புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன வாயிலே. | |
| (1) |
| பொற்றொடி யாளுமை பங்கன்மே வும்புன வாயிலைக் கற்றவர் தாந்தொழு தேத்தநின் றகடற் காழியான் நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் நன்மையால் அற்றமில் பாடல்பத் தேத்தவல் லாரருள் சேர்வரே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு:- செஞ்சடை வெண்பிறையான் முதலியனவாகப் பல தன்மைகளாலும் போற்றப்படும் இறைவர் அம்மையுடன் விரும்பி வீற்றிருக்கும் இடம் புன்னை சூழும் புனவாயிலே. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு: -(1) விரிநூலினன் - அறிவும் ஞானமும் விரிந்து விளங்குதற்கு ஏதுவாகிய வேத சிவாகமங்களை அருளியவன்; மார்பில் பிரியும் பூணூல் பூண்டவன் என்றலுமாம்; பன்னிய - பலவாறும் எடுத்துச் சொல்லிய; தாம் பன்னிய - தம்மைப் பன்னிய என இருவகையும் கொள்ள நின்றது; போய்.....அமரும் - பலவூர்கள் திரிந்து பின் தமது பழம்பதியாகிய இங்கு அமரும் என்ற குறிப்பும்பட நின்றது; 2-வது பாட்டும் பார்க்க. புன்னைகள் - நெய்தற் கருப்பொருள். புன்னை - இங்குத் தலமரமாதலும் காண்க; -(2) விண்டவர் - பகைவர்; கண்டல் - தாழை; - (3) பாரிடம் - பூதகணம்; -(5) மதமத்தம் - ஊமத்தை; மெலிதரு - சாபத்தால் கலை குறைந்தடைந்த;- (6) கனல் வாயது - வடித்த கூரிய வாயினை உடையது; எரியுமிழ்வதுபோல் அழிக்கும் என்றலுமாம்; சீருறு செல்வம் - அழியாச் சிறப்பும் ஆனந்தமுமுடைய முத்தித் திரு; சிவலோகன் என்ற குறிப்புமிது; -(7) பொருந்தலர் - பகைவர்; பொருந்தாதவர்; அடையாதவர்; - திருவளர் தாமரை - "திருவளர் தாமரை"(திருக்கோவை - 1); "திருவமர் தாமரை"(திருவிருத்தம் - நல்லூர் - 10); நரல் - சத்திக்கின்ற; சங்குகள் இயல்பாகிய நாதந் தரும் தன்மை குறித்தது; -(10) போதி....எனப் பெயராயினார் - புத்தர்; பெயர்க்காரணம் குறித்தது; வேதன் - வேதங்களைச் சொன்னவன்; வேதங்களாற் சொல்லப்பட்டவன்; உயிர்களின் மலத்தை வேதிப்பவன்என்ற குறிப்புமாம்; வினைவீடும் என்ற குறிப்புமிது; -(11) கற்றவர் - மனமிறக்கக் கற்றவர். "கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை"(திருவிசை); தம்மை மறந்து அரனை நினைக்கக் கற்றவர்; அற்றமில் - குற்றங்களை இல்லையாகச் செய்யும். தமிழாகிய பாடல் என இயையும். |
| தலவிசேடம் :- திருப்புனவாயில் - பாண்டிநாட்டுப் பாடல் பெற்ற பதிகள் பதினான்கனுள் ஏழாவது தலம். பழம்பதி - (விருத்தபுரி) என வழங்கப்படும் பெருமையுடையது. நம்பிகள் தேவாரத்துள் "பத்தர்தாம் பலர் பாடிநின் றாடும் பழம்பதி" |