2800 | நீடுதிருத் தொண்டர்புடை சூழ வங்கண் நித்திலயா னத்திடைநின் றிழிந்து சென்று பீடுடைய திருவாயில் பணிந்து புக்குப் பிறையணிந்த சென்னியார் மன்னுங் கோயில் மாடுவலங் கொண்டுள்ளால் மகிழ்ந்து புக்கு மலர்க்கரங்கள் குவித்திறைஞ்சி வள்ள லாரைப் "பாடகமெல் லடி"யெடுத்துப் பாடி நின்று பரவினார் கண்ணருவி பரந்து பாய. | |
| 902 |
| (இ-ள்) நீடு....சென்று - நீடுகின்ற திருத்தொண்டர்கள் பக்கத்திற் சூழ்ந்துவர அவ்விடத்து முத்துச்சிவிகையினின்றும் இறங்கிப் போய்; பீடுடைய ....புக்கு - பெருமை பொருந்திய திருவாயிலினைப் பணிந்து உள்ளே புகுந்து; பிறையணிந்த...புக்கு - பிறையினைச் சூடிய சென்னியையுடைய இறைவர் நிலைபெற்று வீற்றிருக்கும் திருக்கோயிலின் உட்பக்கங்களில் வலமாக வந்து மகிழ்ச்சியுடனே உள்ளே புகுந்து; மலர்க்கரங்கள் குவித்திறைஞ்சி - மலர் போன்ற கைகளைக் கூப்பி வணங்கி; வள்ளலாரை....பாய - வள்ளலாராகிய இறைவரைப் "பாடக மெல்லடி" என்று தொடங்கும் பதிகத்தைப் பாடியருளி நின்று கண்களினின்றும் கண்ணீர் அருவி பெருகத் துதித்தருளினார். |
| (வி-ரை) இத்திருப்பாட்டுப் பிள்ளையார் திருநள்ளாற் றிறைவரை வழிபட்ட சிறப்புக் கூறியது; 2798 போலக் காண்க. திருவாலவாயினில் அரச சபைமுன் உண்முகமாகவே போந்தருளி யிருந்து துணைசெய்த பேரருட்டிறத்தினையே நினைந்த ஆராமையால் செய்த வழிபாடாதலின் இத்துணைச் சிறப்பும் விரித்தபடி; பதிகம் பார்க்க. |
| பாடக மெல்லடி - பதிக முதற்குறிப்பு. |
| பரவுதல் - ஆலவாயின்கண் வந்தமர்ந்தருளிய அருட்பெருக்கினை ஒவ்வொரு திருப்பாட்டினும் மகுடமாகவே வைத்துப் போற்றுதல். பரவியவாறு மேற்பாட்டில் விரிக்கப்படுதல் காண்க. |
| பாடக மெல்லடி - "போகமார்த்த பூண்முலையாள்" என முதற் பதிகத்திற் றொடங்கிப் போற்றிய வகையே, அத்திருப்பதிகம் வரைந்த ஏட்டினை முன்வைத்து மதுரையில் அரசன் முன்னர் அருளிய அத்திருப்பதிகத்திலும் "தளிரிள வளரொளியுமை" என்று தொடங்கியும், மீண்டும் இங்கும் அவ்வாறே "பாடக மெல்லடிப் பாவை" என்று தொடங்கியும் இவ்வாறு மூன்றுமுறையும் ஒன்றுபோலவே அருளிய குறிப்பு இங்கு இறைவரது அருட்சத்தியாரது வெளிப்பாடு குறித்தது; "முலையிணையவை குலவலின்...இவை பழுதிலை" என்று காரணக் குறிபட அருளியதும் காண்க. |
| வள்ளலாரை - சோணாட்டினின்று அமணர் வாதத்தினுள் பாண்டி நாட்டில் தாமே வெளிப்பட்டு வந்தருளிய வள்ளன்மை குறிப்பு; அமண்களை நீக்கிச் சைவ விளக்கம் கண்டு பாண்டி நாட்டினின்றும் சோணாட்டுக்கு மீண்டருளிய பிள்ளையார், சோணாட்டில் அதுபற்றி நினைந்து சென்று தொழுத பதி இதுவேயாம். "நள்ளாறுடைய நம்பெருமான்! ஆலவாயின்கண் அமர்ந்தவாறு இதுஎன்கொல்?" என்ற பதிகம் ஆளுடைய பிள்ளையாரது திருவுள்ளக் குறிப்பினை விளக்குகின்றது; அதனை |