1154திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

2804
மற்றவர்கள் வெவ்வுரையும் பிள்ளை யார் முன்
   வருசின்னப் பெருகொலியு மன்னுற் தொண்டர்
பொற்புடைய வார்ப்பொலியுஞ் செவியி னூடு
   புடைத்தநா ராசமெனப் புக்க போது
செற்றமிகு முள்ளத்துப் புத்த நந்தி
   செயிர்த்தெழுந்து தேரர்குழாஞ் சூழச் சென்று
"வெற்றிபுனை சின்னங்கள் வாதி லெம்மை
   வென்றன்றோ பிடிப்ப"தென வெகுண்டு சொன்னான்.
(இ-ள்) மற்றவர்கள்...புக்கபோது - மற்று அவர்களுடைய கொடிய சொல்லும், அப்பொழுதே பிள்ளையார் முன்பு வருகின்ற திருச்சின்னங்களின் பெருகிய ஒலியும் நிலைபெற்ற திருத்தொண்டர்களுடைய அழகிய ஆர்தலினால் உண்டாகும் ஒலியும்கூடி ஒருசேர வந்து தனது காதினுள் காய்ச்சி அடித்த இருப்புச் சலாகைபோலப் புகுந்த போது; செற்றமிகும்...சென்ற - கோபம் மிகும் உள்ளத்தினை உடைய புத்தநந்தி மேலும் மிகச்சினந்து எழுந்து புத்தர் கூட்டம் தன்னைச் சூழ்ந்து வர அத்திருக்கூட்டத்தினிடையே போய்; வெற்றிபுனை...சொன்னான் - "வெற்றிக் கறிகுறியாக முழக்கப்படும் சின்னங்கள் எம்மை வாதத்தில் வென்ற பின்னரன்றோ பிடித்தல் வேண்டும்" என்று கடுமையாகக் கோபித்துச் சொன்னான்.
(வி-ரை) மற்றவர்கள் - மற்று - முன்கூறிய "சாக்கியர்க ளறிந்தார்"(2803) என்ற குறிப்பில் வந்தது; தமது தலைவனாகிய அந்தப் புத்தநந்திக்கு ஆக்கந்தேடாது, இவர்களது ஏவுதலினால் சிறிது நேரத்தில் இறந்துபாடாகிய அழிவுதேடித்தருகின்றாராதலின் மற்றவர்கள் - ஆத்தரல்லாதவர் - என்ற குறிப்பும்படக் கூறினார்.
உரையும் - பெருகொலியும் - ஆர்ப்பொலியும் - (ஒருசேரப்) புக்கபோது - என்று கூட்டுக. உரை - சாக்கியர் கனன்று சொல்லிய உரை; மேல்வரு மிரண்டும் ஒருசார்பின ஆதலின் ஒலி என்ற சத்தத்தாற் கூறினார்.
பொற்புடைய ஆர்ப்பு ஒலி - பிள்ளையார் திருநாமங்களையும், சிவநாமங்களையும் முழக்கியும் பிள்ளையாரது புகழ்களை எடுத்துக் கூறி முழக்கியும் வருதலால் பொற்புடைய என்றார்; பொற்பு - மொழியாற் குறிக்கப்படும் பொருளின் செம்மை.
செவியினூடு புடைத்த நாராசமெனப் புக்கபோது - வெவ்வுரையால் செவியினூடு துன்பம் புகவும், இவ்வொலிகள் அத்துன்பினை மேலும் கொடுந்துன்பம் விளைக்கவும் இவ்வாறு ஒருங்கே இருவகையாய் நிகழ்ந்த துன்பினைக் கூறுவார் நாராசமென வாளா கூறாது புடைத்த நாராசமென இருவகைத் துன்ப ஏதுக் கூறி உவமித்தார்; வினைபற்றி வந்த உவமம். புடைத்தல் - காய்ச்சி அடித்தல்; மிக்க வெப்பமும் கூர்மையுமாய்த் துன்பத்துக்கு இரண்டு காரணங் கண்டபடி; "எறிவேல் பாய்ந்த, புண்ணிலாம் பெரும்புழையிற் கனனுழைந்தா லெனச்செவியிற் புகுத லோடும்" எனக் கம்பன் இக்கருத்தைப் பற்றிய இவ்வுவமத்தையே மேற்கொண்டு விரித்தல் காண்க. "நெருப்பு நுனையுறீஇச் சுடுநா ராசஞ், செவிசெறித் தாங்கு" - (பெருங்கதை - 1, 47 237 - 238).
செற்றமிகும் உள்ளம் - செயிர்த்தெழுந்து வெகுண்டு சொன்னான் - என்று மும்முறையும் விரித்தல் மூண்டெழுந்த நிலை குறித்தது. செற்றமிகுதல் அவனது உள்ளத்தின் இயல்பாகிய நிலையினையும், செயிர்த்தெழுதல் உரையாலும் ஒலிகளின்கேள்வியாலும்