| சினம் உள்ளத்தில் விளைந்த நிலையினையும்; வெகுண்டு சொல்லுதல் அம்மூட்சி பிறர்பாற் சென்ற நிலையினையும் குறித்தன ஆதலின் கூறியது கூறலன்மை யுணர்க. |
| சென்று - பிள்ளையாரது திருக்கூட்டத்தின் முன்னணியில் வரும் திருச்சின்னமொலிப்போரும் திருத்தொண்டர்களும் ஆகிய இவர்பாற் சென்று. |
| வெற்றி.....பிடிப்பது என - எம்மோடு வாதில் வெற்றிபெறா நிலையில் பிடிக்கலாகாது என விலக்கினான் - முழக்கத்தைத் தடுத்தான் என்பது; மேற்பாட்டில் "விலக்குங் காலை" (2805) என்பது காண்க. |
| வென்றன்றோ பிடிப்பது - வென்றல்லாமல் பிடிக்கத் தகாது என்பது எச்சம்; ஓகாரம் எதிர்மறை. |
| வெற்றிபுனை சின்னங்கள் - "பரசமய கோளரி" என்று புறச்சமயங்களை வென்ற வெற்றியைக் கூறும் சின்னங்கள். |
| எம்மை வென்றன்றோ - அமணரை முக்காலும் வென்றது பரசமயங்களை யெல்லாம் வென்றதாம்; அவ்வாறு கொள்ளாது புறச்சமயி ஒவ்வொருவனும் தன்னைத் தனித் தனி வெல்லல் வேண்டுமென்று ஆர்த்தல் மதியீனம் என்பார் புல்லறிவிற் சாக்கியர் - சார்வறியாச் சாக்கியர்கள் என்றார். |
| 906 |
2805 | புத்தரினம் புடைசூழப் புத்த நந்தி பொருவின்ஞா னப்புனிதர் திருமுன் பூதும் மெய்த்தவிறற் சின்னங்கள் விலக்குங் காலை வெகுண்டெழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி "இத்தகைய செயற்கிவரைத் தடிதல் செய்யா திதுபொறுக்கிற் றங்கணிலை யேற்ப" ரென்று முத்துநிரைச் சிவிகையின்மேன் மணியை வந்து முறைபணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார். | |
| 907 |
| (இ-ள்) புத்தரினம்....காலை - புத்தர் கூட்டம் தன்னைச் சூழ்ந்து வரப் புத்தநந்தி ஒப்பற்ற ஞானத்தினை உடைய தூய பிள்ளையாரது திருமுன்பு ஊதப்பெற்ற உண்மைத் திறம் பெற்ற திருச்சின்னங்களை விலக்கிய பொழுது; வெகுண்டெழுந்த...நோக்கி - சினந்து எழுந்த திருத்தொண்டர்கள் அவனுடைய செய்கையினை வெறுத்துப்பார்த்து; இத்தகைய...என்று - இவ்வாறு செய்யும் கொடுஞ் செயலுக்கு இவர்களைத் தண்டிக்காமல் இதனைப் பொறுத்துக்கொண்டு செல்வோமானால் தங்கள் நிலையினையே மேலுங் கொண்டெழுவார்கள் என்று உட்கொண்டு; முத்து...நின்றார் - முத்துக்களின் வரிசைபட உள்ள சிவிகையின்மேல் எழுந்தருளிய மணியாகிய பிள்ளையாரிடம் வந்து அவரை முறையினாற் றொழுது நேர்ந்த வண்ணங்களைச் சொல்லி நின்றார்கள். |
| (வி-ரை) பொருவில் ஞானப் புனிதர் - பொருவில் ஞானமாவது சிவஞானம் (1967); புனிதர் - இகலும் பற்றுமின்றிக் கருணையே உருவமானவர்; இதுவே அகத்தூய்மைக் கியல்பாதலின் புனிதம் - அகத்தூய்மை குறித்தது; முன்னர் நிகழ்ந்த சமண வாதமும், இனிவரும் புத்தவாத முதலியனவும் புறச் சமயிகள்பாற் கொண்ட இகல்பற்றியேனும், சைவர்கள்பால் வைத்த விருப்புப்பற்றியேனும் உள்ளனவல்ல என்பதும், உண்மைநிலை காட்டி உலகை உய்விக்கும் பொருட்டேயாம் என்பதும் உணர்த்தியவாறு. |
| ஊதும் - ஊதப்படும்; செயப்பாட்டுவினை செய்வினையாய் நின்றது. |