| மெய்த்த விறற் சின்னங்கள் - மெய்யனாகிய இறைவன் தந்தவை என்றும், போலியாகிய பொய்ப் புகழ்களைக் கூறாது பொருவில் ஞானத் தலைவரது உண்மைப் பொருள்சேர் புகழ்பற்றிய திறங்களையே கூறுபவை என்றும் உரைக்க நின்றது; கூறும் பொருள்களின் உண்மைத் திறமும், உடையாரது திறமும் கருவியின் மேல் ஏற்றப்பட்டன; விறல் - இவை ஊதப்பட்ட செயலாலே இனி அடுத்த நிலையில் இடி வீழ்ந்து இவற்றைத் தடுத்தவன் தலையிழக்க நேரும் நெறிபிறழாத வலிமை குறித்தது. |
| இத்தகைய....என்று - சைவத் திறம் எப்போதும் பொறுமையும் கருணையுமே மேற்கொண்டதொன் றென்பதும், ஆயின் அதன் நிலை புறச்சமயிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுத் தடையுண்டபோது அவ்விடை யூற்றினைத் தண்டமூலம் விலக்க முற்படுவதில் பின்வாங்காத வீரமுடையதொன் றென்பதும் குறித்தது. |
| தங்கள் நிலை ஏற்பர் - நீதி நெறியில் தம்மளவில்நின் றமைவுபடாது மீச்சென்று உண்மைக்கு மாறான செயல்களைத்தாம் நினைந்த நினைந்தவாறே ஆக்கிரமித்துச் செய்து செல்வர். |
| புகுந்தபடி - நிகழ்ந்தனவற்றை நிகழ்ந்தவாறே. புகுந்த - தமது செல்லுகையில் இடையே தடையாக வந்து புகுந்த என்றலுமாம். |
| 907 |
2806 | வருமிடத்தி லழகிதா நமக்கு வாதில் மற்றிவர்தம் பொருணிலைமை மறாத வண்ணம் பொருமிடத்தி லறிகின்றோம் புத்த நந்தி பொய்ம்மேற்கோ" ளெனப்புகலி வேந்தர் கூற வருமுறைசொற் றிருப்பதிக மெழுது மன்ப ராளுடைய பிள்ளையார் திருவாக் காலே "உருமிடித்து விழப்புத்த னுத்த மாங்க முருண்டுவீழ்" கெனப்பொறா வுரைமுன் விட்டார். | |
| 908 |
| (இ-ள்) வருமிடத்தில் அழகு இதுஆம் - வருகின்ற இடத்திலே இது மாறு கோளாவதன்றி நமக்கு அழகேயாம்; மற்றிவர்தம்....கூற - மாறுகொண்ட இவர்களது பொருள் நிச்சயம் மறுக்க முடியாதபடி, பொருகின்ற இடத்தில் புத்தநந்தியின் பொய்யினை மேற்கொண்டு வரும் கொள்கையின் நிலையினை உள்ளபடி காட்டுவோம் என்று புகலி காவலராகிய பிள்ளையார் சொல்ல; அருமுறை....விட்டார் - அரிய திருமுறைகளாகிய சொற்றிருப் பதிகங்களை எழுதும் நியதியுடைய ஆளுடைய பிள்ளையாரது திருவாக்கின் ஆணையாலே "புத்தநந்தியினது தலையானது இடி வீழ்தலினால் உருண்டு வீழக் கடவது" என்று பொறுக்கமாட்டாத சொல்லை முன்னே சொல்லி விட்டனர். |
| (வி-ரை) வருமிடத்தில் நமக்கு இது அழகாம் - என்க. அழகு - வெகுளலும் வெறுத்தலுமின்றி அழகிதாகக் கொள்ளத்தக்கதொன் றென்றதாம்; வருமிடம் - நாம் சென்று தேடாது, செல்லும் வழியிலே. இடையிட்ட இது, திருவருளால் வந்ததென்பதும், திருவருள் எவ்வழியானும் செலுத்துவன வெல்லாம் நன்மையே என்பதும் குறிப்பு. அழகு - நியதியின் அமைதி: |
| மற்று இவர்தம் பொருள் நிலைமை - மாறுபட்டு எழுந்து கூறும் இவர்கொள்ளும் பொருள் நிச்சயத்தின் தன்மை. |