| உள்ளிட்டுக் கூறி "உருமிடித்து உத்தமாங்கம் உருண்டு வீழ்க" என அன்பர் கூறியது. |
| வேறு மொழிப்போர் - மாறுபட்ட மொழிகளால் தொடங்கிய போர். வேறு மொழி - உண்மைக்கும் தகுதிக்கும் வேறுபட்ட மொழி என்க. போர் ஏற்பான் - போர் ஏற்கும் பொருட்டு; மொழிகளாற் போர் செய்ய. வந்த - வலிந்து தானே வந்த; |
| கூறுபட நூறியிட - தலை வேறு - உடல் வேறாக இரு கூறாகும்படி சிதைக்க; நூறியிட - சிதைக்க; "உருண்டு வீழ்க" என்று ஆணை தந்தாராதலின் தலைவேறாகக் கூறுபட்டு வீழ்ந்தது. |
| வெருக்கொண்டது - திடுக்கிட்டு நடுங்கிற்று. அன்றே - அப்பொழுதே. |
| உரும் இடித்து - உருண்டு வீழ்க - இடி வீழ்தலால், உடலிற் கண் முதலிய அங்கங்கள் சிதைந்து வீழ்தலும், உடல் அறுபட்டுப் பிளத்தலும், உடல் எரிதலும் முதலிய பலவும் நிகழ்வன. ஈண்டுத் தலை கூறுபட்டு வீழ்ந்தது என்க. |
| மாறுவலி - வாய்மையுணர் - என்பனவும் பாடங்கள். |
| 909 |
2808 | மற்றவர்க ணிலைமையையும் புத்தநந்தி வாக்கின்போ ரேற்றவன்றன் றலையு மெய்யும் அற்றுவிழ வத்திரவாக் கதனா லன்பர் அறுத்ததுவுங் கண்டவர னடியா ரெல்லாம் வெற்றிதரும் பிள்ளையார் தமக்குச் சென்று விண்ணப்பஞ் செய, "வெதிர்ந்த விலக்கு நீங்க வுற்றவிதி யதுவேயா; மர!வென் றெல்லா மோது"கென, வவ்வொலிவா னுற்ற தன்றே. | |
| 910 |
| (இ-ள்) மற்றவர்கணிலைமையையும் - மற்ற அந்தப் புத்தர்களது நிலைமையினையும்; புத்தநந்தி...அறுத்ததுவும் - வாக்கினாற் போர் செய்ய மேற்கொண்டு வந்த புத்தநந்தியின் தலையும் உடம்பும் வேறாக அறுபட்டு விழும்படி அத்திர வாக்கினாலே அன்பர் அறுத்த செயலினையும்; கண்ட...விண்ணப்பஞ் செய - பார்த்த சிவனடியார்கள் எல்லாம் அவ்வெற்றியைத் தரும் பிள்ளையாருக்குச் சென்று விண்ணப்பிக்க; எதிர்ந்த...ஓதுகென - எதிர்ப்பட்ட இறையூறு நீங்கும்படி பொருந்திய இறைவரது அருள் விதியே அதுவாகும்; ஆதலால் சிவனை வழுத்தி அர! அர! என்று எல்லாரும் சிவநாமமோதி முழக்கம் செய்க என்று பிள்ளையார் கூறியருள எல்லாம் அர என்றோதினர்; அவ்வொலி வானுற்றதன்றே - அவ்வாணையின்படி அவர்கள் முழக்கிய சிவநாம ஒலி வானத்திற் சென்று பொருந்திற்று அப்பொழுதே. |
| (வி-ரை) மற்று அவர்கள் - மாறுபட்டு வந்த அப்புத்தர். |
| வாக்கின் போர் ஏற்றவனாகிய புத்தநந்தி என்க. வாக்கின் போர் - வேறு, படை முதலியவற்றாலன்றி வாக்கினாற் செய்யும் வாதமாகிய போர். |
| அன்பர் அத்திர வாக்கதனால் - அறுத்ததுவும் என்க. அத்திர வாக்கு - "அத்திரமாவன" என்ற பதிக மந்திரம். வாக்கதனால் அறுத்தலாவது வாக்கில் கூறப்பட்ட சிவனது அத்திரமாகிய மந்திரமே படையாகக் கொண்டு. "காழி மாநகர்க் கவுணியர் கடவுள், ஞான மாகிய நற்பதி கங்கள், எழுதுறு மன்பர்தம் மின்புறு மொழியாற், களிறென வந்த கன்மனப் புத்தன், முருட்டுச் சிரமொன் றுருட்டின ரன்றி, வாய்ந்த வாளொன் றேந்தின ரிலரே" (சங்கற்பநிராகரணம்) என்றதும் கருதுக. |