1160திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

பிள்ளையார் தமக்குச் சென்று விண்ணப்பஞ் செய - அன்பர் வாக்கினால் இடி வீழ்ந்து புத்தநந்தி தலையறுபட்ட இடம், பிள்ளையாரது எழுச்சியின் முன்னணி; ஆண்டு ஊதிச் செல்லும் மெய்த்தவிறற் சின்னங்களையே முன்வந்து புத்தநந்தி விலக்கினானாதலின்(2805); பிள்ளையார் எழுந்தருளி வரும் சிவிகை, எழுச்சியின் பின்னணியில் நின்றதாதலின் இங்குநின்றும் அவ்விடத்துக்குச் சென்று விண்ணப்பித்தனர். "புத்தன் கூறும் பொய்மேற்கோளின் பொருணிலைமையினைப் பொருமிடத்தி லறிகின்றோம்" (2806) என்று பிள்ளையார் அருளினாரன்றி வேறு கூறிற்றிலர். ஆதலின் அன்பர் அத்திரவாக்கினால் இடி வீழ்ந்து புத்தன் பட்ட செயல் தொண்டர்கள் சென்று அவர்க்கு விண்ணப்பிக்க நின்றது.

"எதிர்ந்த....ஓதுக" என - "புத்தன் மொழியினைப் பொருமிடத்தி லறிகின்றோம்" என்ற பிள்ளையார், தாமும் எண்ணாத வகையாலே இடி வீழ்ந்து புத்தனிறந்ததனைக் கேட்டபோது இது சிவச்செயலால் உள்ள விதியே என்று கொண்டு சிவனை வழுத்துக என்றருளினார்.

எதிர்ந்த விலக்கு - செல்லும் இடைவழியில் தானே வந்து எதிர்ந்து மேற்செல்கையை விலக்கிய இடையூறு; விலக்கு - முன் செல்கையை விலக்கும் செயல். உற்ற விதி - "நினையாது முன்வந்து நின்று" பொருந்திய சிவன் விதியாகிய நியதி.
விலக்கு நீங்க உள்ள விதி அதுவேயாம் - மேற்கூறியபடி இவ்விடத்துச் சிவாகமங்களில் விதிக்கப்பட்ட நியதியும் அதுவே என்ற குறிப்புமாம்.
அர என்று எல்லாம் ஓதுக - சிவனருள் வெளிப்பட்டபோதெல்லாம் சிவநாமங் கூறி முழக்கி வாழ்த்துதல் சைவ மரபு.
அவ்வொலி - அவ்வாறு ஆணைப்படி ஓதப்பட்ட அரநாம முழக்கமாகிய ஒலி; எல்லாம் அரவென்றோதினார் என்பது இசையெச்சம்.
வான் உற்றது - அலை ஒலிப் பரம்பரையால் ஆகாயம் நிறைய எழுந்து சென்றது.
இதுவேயாம் - என்பதும் பாடம்.

910

2809
அஞ்சியகன் றோடியவப் புத்த ரெல்லா
  மதிசயித்து மீண்டுமுட னணைந்து கூடி,
"வஞ்சனையோ? விதுதான்மற் றவர்தஞ் சைவ,
  வாய்மையோ?" வெனமருண்டு மனத்திற் கொள்வார்
"எஞ்சலின்மந் திரவாத மன்றி யெம்மோ
  டெதிர்ந்துபொருள் பேசுவதற் கிசைவ" தென்று
தஞ்செயலின் மிக்குள்ள சாரி புத்தன்
  றன்னையே முன்கொண்டு பின்னுஞ் சார்ந்தார்.

911

(இ-ள்) அஞ்சி....கூடி - பயந்து அவ்விடத்தினின்றும் நீங்கி ஓடிய அந்தப் புத்தர்கள் எல்லாரும் அதிசயமடைந்து மீளவும் தம்முள் வந்தணைந்து ஒன்றுகூடி; வஞ்சனையோ...மருண்டு - அந்நிகழ்ச்சிதான் வஞ்சனையால் விளைந்ததோ? அன்றி மற்று அவர்களுடைய சைவ சமயத்தின் உண்மைத் திறத்தினால் விளைந்ததோ? என்று மனமருட்சியடைந்து; மனத்திற் கொள்வார் - மனத்திலே எண்ணினார்களாகி; எஞ்சலின்....என்று - குறைவில்லாத மந்திர வாதத்தாலன்றி - மந்திரவாதத்தினிற் செல்லாது எங்களோடு எதிர்த்து உண்மைப்பொருளிது என்று பொருணிச்சயம் பேசி வாதம் செய்வதற்கு இசைவீர்களாக" என்று சொல்லி; தம் செயலின்.....சார்ந்தார் - தமது