[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1161

சமயநிலைச் செயலில் மிக வன்மையுடைய சாரிபுத்தன் என்பவனையே தலைவனாக முன் வைத்துக் கொண்டு பின்னும் வந்து சார்ந்தார்கள்.

(வி-ரை) அதிசயித்து - "அதிசயம் கண்டாமே"(திருவா) என்றபடி நேரிற் கண்டார்களாதலின் இனைத்தென் றறியாவகை அதிசயித்தார்கள்.

வஞ்சனையோ?...வாய்மையோ?...என மருண்டு - இந்நிகழ்ச்சி இந்த இரண்டனுள் ஒருகாரணத்தால் நிகழ்ந்திருத்தல் வேண்டும்; அவற்றுள் இன்னதென்று துணிய மாட்டாமையின் மருண்டனர். இரண்டனுள் எவ்வகையாயினும் இது மந்திர வாதத்தின்பாற் பட்டதேயன்றி வேறில்லை எனக் கொண்டு, அவ்வாறு மந்திர வாதம் செய்யாது பொருள் பேசி நிச்சயிக்கும் வாக்கின் வாதம் வேண்டுவோம் என நிச்சயித்து அதனை வேண்டினர் என்க. இசைவது - இசைவீராக என்று சொல்லி.
தஞ்செயல் - தம் சமயநூல் அறிவும் தொழிலும். ஓடி அவப்புத்தர் - அவம் - தவமல்லாதது - என்று பிரித்துரைக்கவும் நின்றது; (வ.சு.செ.)
உடன் அணைந்து கூடி என்றதனால் முன் சிதறுண்டமை பெறப்படும்.
சாரிபுத்தன் - புத்தநந்தி இறந்த பின்னர் அப்புத்தர் தமது தலைவனாகக் கொண்ட புத்தனுடைய பெயர்.
முன்கொண்டு பின்னும் - முன்வரினும் பின்னடையவே - தோல்வியுறவே - செல்கின்றார் என்பது குறிப்பு.
எஞ்சலில் - எஞ்சுதல் - கெடுதல்; குறைதல். பொய்யாத - குறிதவறாத - மந்திர வாதம்.
மந்திரவாதமன்றி - இப்போது நேரிற் கண்டது பிழையாத மந்திரவாதம்; முன்னர்ச் சமணர் பட்டதாகக் கேட்டதும் அவ்வாறே; ஆதலின் அதனைத் தவிர்த்துச் சமய வாதமாகிய வாக்கின் வாதத்தை ஏற்றனர்; அதனில் தம்மினு மிக்காரிலர் என்னும் துணிபினால் என்க.

911

2810
அத்தன்மை கேட்டருளிச் சண்பை வந்த
  வடலேறு திருவுள்ளத் "தழசி" தென்று
மெத்தமகிழ்ச் சியினோடும் விரைந்து சென்று,
  வெண்டரளச் சிவிகையினின் றிழிந்து, வேறோர்
சத்திரமண் டபத்தின்மிசை யேறி, நீடு
  சைவருட னெழுந்தருளி யிருந்து, "சாரும்
புத்தர்களை யழைக்க!" வெனத், திருமுன் னின்றார்
  புலிகா வலரேவல் போற்றிச் சென்றார்.

912

(இ-ள்) அத்தன்மை....சென்று - அத்தன்மையைக் கேட்டருளிச் சீகாழியி லவதரித்த வலிமையுடைய சிங்கம் போன்ற பிள்ளையார் திருவுள்ளத்தில் இது அழகு என்று கொண்டு மிக மகிழ்ச்சியோடும் விரைவாகச் சென்று; வெண்...இழிந்து - வெள்ளிய முத்துச் சிவிகையினின்றும் இறங்கி; வேறு...ஏறி - பிறிது ஒரு சத்திரத்தின் மண்டபத்தின்கண் ஏறி; நீ....இருந்து - நீடிய சைவர்களுடனே அமர்ந்து எழுந்தருளி வீற்றிருந்துகொண்டு; சாரும்...என - முன் சொன்னபடி எதிர்ந்து பொருள் பேசச் சார்கின்ற புத்தர்களை அழையுங்கள் என்று கூற; திருமுன்...சென்றார் - திருமுன்பு நின்ற தொண்டர்கள் சீகாழித் தலைவரது ஏவலினைப் போற்றி அவ்வாறு அழைத்தற்குச் சென்றனர்.