| (வி-ரை) அத்தன்மை - அஞ்சி உடைந்து ஓடிய புத்தர்கள் மீண்டு சாரிபுத்தனைத் தலைமைகொண்டு சமய வாதத்தினை மேற்கொண்டு வந்த தன்மை. |
| அடல் ஏறு - மதங்கொண்ட யானை போன்ற புறச்சமயிகளை வெல்லும் தன்மை பற்றிச் சிங்க ஏறு என்று உருவகித்தார்; ஏறு - ஆண்மைப் பொதுப் பெயராகக் கொள்ளினுமாம். |
| "அழகிது" என்று - "அழகிதாம்"(2806) என முன்கூறியதற்கேற்ப மேற்கொண்டவாறு. |
| சத்திர மண்டபம் - வழியில் கண்டதொரு சத்திரத்தின் உள்ள மண்டபம்; வடக்கிருந்து கடற்கரையோரமாகத் தெற்கு இராமேச்சுரம் நோக்கி வரும் அவ்வழியில் யாத்திரிகர்கள் தங்குதற்குரிய பல சத்திரங்கள் முன்னாளிலிருந்தன. இந்நாளில் இருப்புப் பாதைவழிப் பயணமாயினபின் அவை காவலற்றழிந்தன. இங்குப் பிள்ளையார் எழுந்தருளி யிருந்து அவர் முன்பு புத்தவாதம் நிகழ்த்தச் செய்து, சைவத்தாபனம் செய்தருளிய சத்திரம் இடம் ஒன்றும்பட்டில் கர்னபரம்பரை நினைவுகொண்டு காட்டப்படுகிறது. |
| சிவிகையினின் றிழிந்து - மண்டபத்தின் மிசை ஏறி - இழிந்து - ஏறி - என்று கவிநயம்படக் கூறினார். ஏறி - வெற்றிக் குறிப்புப்பட நின்றது. "ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர், தாக்கற்குப் பேருந் தகைத்து" (குறள்) என்ற குறிப்பும் காண்க. |
| சத்திரமண்டபத்தின்மிசை ஏறி - இருந்து - அழைக்க என - வாதம் நிகழ்த்திப் பேச ஏற்ற இடமும், பிற வாய்ப்புக்களும் கண்டு செயல் செய்யும் வகை. |
| 912 |
2811 | சென்றவர்க டேரர்குழா மணைந்து "நீங்கள் செப்பிவரும் பொருணிலைமை தெரிக்க வெங்கள் வென்றிமழ விளங்களிறு சண்பை யாளி வேதபா ரகன்மும்மைத் தமிழின் வேந்தன் நன்றுமகிழ்ந் தழைக்கின்றா; னீண்ட நீரும் நண்ணு"மெனக் கூறுதலு நன்மை சாராத் தன்றகைமைப் புத்தருடன் சாரி புத்தன் சத்திரமண் டபமுன்பு சார வந்தான். | |
| 913 |
| (இ-ள்) சென்றவர்கள்...அணைந்து - முன் கூறியவாறு பிள்ளையாரது ஏவல் வழிச் சென்ற அவர்கள் புத்தர் கூட்டத்தை அடைந்து; நீங்கள்....நண்ணுமெனக் கூறுதலும் - நீங்கள் சொல்லிவருகின்ற பொருளின் உண்மைநிலையினைத் தெரிக்கும்படி எங்களுடைய வெற்றியுடைய இளங்களிறும், சண்பையாளியும், வேதத் தலைவரும், முத்தமிழரசரும் ஆகிய பிள்ளையார் நன்கு மகிழ்ந்து அழைக்கின்றார்; பொருந்தும்படி நீங்களும் வாருங்கள்" என்று சொல்லுதலும்; (அது கேட்டு) நன்மை சாரா....சார வந்தான் - நன்மை நெறியினை (இதுவரை) சாராத தன்னுடைய தன்மையினையே கொண்ட புத்தர்களுடனே கூடிச் சாரிபுத்தன் சத்திர மண்டபத்தின் முன்னே சார வந்தனன். |
| (வி-ரை) செப்பி வரும் பொருள் நிலைமை - "எதிர்ந்து பொருள் பேசுவதற்கிசைவது" என்று சொல்லி வாதத்தினை மேற்கொண்டு வரும் உங்கள் சமய உண்மையாகிய பொருளின் நிலைமை - தன்மை; தெரிக்க - தெரிவிக்க; சொல்ல. |