| விறகினைக் குவைசெய்திடினும் - தனித்தனியே இடினும் வெந்தீ சுடவல்லவாறு போல - இஃது அவன் எடுத்துக்காட்டிய வுவமை. தீ உணர்வுக்கு உவமிக்கப்பட்டது. தீ விறகுக் குவியலின் இடினும் சுட்டெரிக்கின்றது; தனித்தனி யிடினும் எரிக்கின்றது. அதுபோல உணர்வு எல்லாப் பொருள்களையும் தொகுதியாய்ப் பொதுவாயும் கண்டு கூறும்; தளித்தனியாய்ச் சிறப்பாயும் கண்டு கூறும். இதுபோல் முதல்வன் பொருள்கள் எல்லாம் தொகுத்தும் விரித்தும் உணர்ந்ததும் உரைத்ததும் ஆம் என்று சாரிபுத்தன் எடுத்துக்காட்டியவாறு. |
| வரம்பில்லாப் பொருள்கள் எல்லாம் இப்படியால் - "பொருள் எல்லாம்" (2819) என முன்பாட்டிற் கேட்ட அதனை விளக்கினான். ஆல் - அசை. |
| இடினும் - இடினும் தீ சுடவல்லது என்க. தீ இடுதல் - கொளுவுதல்; தீத்துணர் கதுவி - தீயின் கொழுந்து முடுகி எழுந்து பற்றி. |
| தொல்லோன் - பழமையானவன்; தலைவன். தொன்மை - எல்லாவற்றை உணருந் தன்மைக் குறிப்பு. |
| உணர்த்தல் - என்பதும் பாடம். |
|
| 922 |
2821 | எடுத்துரைத்த புத்தனெதி ரியம்பு மன்ப "ரெரியுணர்வுக் கெடுத்துக்காட் டாகச் சொன்னாய்; அடுத்தவுணர் வுருவுடைய தன்று சொன்ன வனல்வடிவிற் றாமதுவு மறிதி; நுங்கோன் றொடுத்தநிகழ் காலமே யன்றி யேனைத் தொடர்ந்தவிரு காலமுந்தொக் கறியு மாகிற் கடுத்தவெரி நிகழ்காலத் திட்ட தல்லாற் காணாத காலத்துக் கதுவா" தென்றார். | |
| 923 |
| (இ-ள்) எடுத்துரைத்த...அன்பர் - முன் கூறியவாறு எடுத்துக்காட்டி மறுமொழி கூறிய சாரிபுத்தனெதிரில் வாதம் கூறும் அன்பராகிய சம்பந்த சரணாலயர்; எரி....அறிதி - தீயின் செயலை உணர்வின் செயலுக்கு உதாரணமாகச் சொன்னாய்; ஆனால் பொருள்களை அடுத்துநின்ற உணர்வு உருவுடையதன்று. அதற்கு எடுத்துக்காட்டாக நீ சொன்ன எரியோ ஒரு வடிவுடையது. அதையும் அறிவாயாக; நும் கோன்.....அறியுமாகில் - உனது தலைவன் தொடுக்கப்பட்ட நிகழ்காலமே யல்லாது மற்றும் அதனை முன்னும் பின்னுமாகத் தொடர்ந்த இறந்தகாலம் எதிர்காலம் என்று இரு காலத்தையும் தொகுத்து ஒருங்கே அறிவானானால்; கடுத்த.....கதுவாது என்றார் - அவன் அவ்வாறு உணரும் (முக்காலமுமுணரும்) உணர்வுக்கு எடுத்துக்காட்டாக நீ மொழிந்த பொருளாகிய எரிக்கும் தீயானது நிகழ்காலத்தில் இட்டபோது சுடுதலேயன்றிக் காணாத ஏனை இரண்டு காலத்தும் சுடாதாகும் என்றார். |
| (வி-ரை) அனல் வடிவிற்று....எரி நிகழ்காலத் தல்லாற் கதுவாது - எரியினை உணர்வுக்கு எடுத்துக்காட்டாக் காட்டியதற்கு இரண்டு நிலைகளால் மறுப்புக்கூறியவாறு. |
| அடுத்த உணர்வு உரு உடையதன்று - எரி வடிவிற்று - உணர்வு உருவம்பற்றியதன்று; தீ வடிவம்பற்றிப் புலனாவது. உருவுடைய பொருள் மற்றும் அத்தன்மைத்தாகிய பொருள்களைப் பற்றும் நிலையினுக்கு, உருவுடையதன்றாகிய பொருள் மற்றும் பொருள்களைப் பற்றுதற்கு உவமித்தல் பொருந்தாதென்பது. இஃது இடவகையாற் பொருத்தமின்மை காட்டியபடி; முற்றும் உணர்தல் கூடாமை என்றவாறு. |