| உணர்வு நிகழ்காலமேயன்றி ஏனை இருகாலமும் அறியுமாகில் - அனல் நிகழ் காலத்து மட்டும் கதுவி ஏனை இருகாலத்தும் கதுவாது - என்றதனால் உவமை கால வகையாலும் பொருந்தாமை காட்டியபடி. |
| தொடுத்த....ஆகில் - தொடுத்த - பஞ்சகந்த விளைவுபற்றிய உணர்வு தொட்ட; தொடர்ந்த - முன்னும் பின்னுமாகத் தொடர்ச்சியுடைய; இருகாலம் - இறப்பும் எதிர்வுமாகிய இரண்டுகாலங்கள்; தொக்கு அறிதல் - "தொகுத்தும் விரித்தும் தெரிக்கும்" (2820) என முன்பாட்டிற் கூறியபடி மூன்று காலமும் ஒருங்கு உணர்தல் கூடாமை என்றபடி. |
| அறியுமாகில் - அறியுமென்பது அவன் பக்கமாதலின் தாம் உடம்படாது ஆகில் என்றார்; ஆகில் - கதுவாது என்றது உவமேயம். மூன்றுகாலமு நிகழக் கூறப்பட்ட உவமானம் அவ்வாற்றா லமையமாட்டாது ஒருகாலத்துக்கே உரியதாம் என்றபடி. |
| இட்டதல்லால் - இட்டபோது கதுவுதலல்லாமல். |
| காணாத காலம் - இறப்பும் எதிர்வுமாகிய இரண்டும் காணப்படாதவை; நிகழ்வொன்றே காணப்படும் என்பது. |
|
| காட்டாகச் சொன்னால் - என்பதும் பாடம். |
| 923 |
2822 | "ஆதலினா லுன்னிறைவன் பொருள்க ளெல்லா மறிந்ததுநும் முத்திபோ லாயிற் றன்றே; ஏதமா மிவ்வறிவா லுரைத்த நூலும்" என்றவனுக் கேற்குமா றருளிச் செய்ய, வாதமா றொன்றின்றித் தோற்றான் புத்தன்; மற்றவனை வென்றருளிப் புகலி மன்னர் பாததா மரைபணிந்தா ரன்பர்; தங்கள் பான்மையழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார். | |
| 924 |
| (இ-ள்) ஆதலினால்.....அன்றே - முன் கூறியபடி எடுத்துக்காட்டிய பொருள் செல்லாது நீ மேற்கொண்ட பொருள் வீழ்ந்துபட்ட தாதலினாலே, உனது தலைவன் எல்லாப் பொருள்களையும் முழுதொருங்குணர்ந்த செய்தியும் நீ கூறிய முத்தியிலக்கணம் பாழாக முடிந்தவாறு போல இதுவும் பாழாய் ஒழிந்தது; இவ்வறிவால் உரைத்த நூலும் ஏதமாம் - இத்தகைய நிரம்பாத அறிவினாலே அவன் உரைத்த உமது பிடக நூலும் குற்றமாம்; என்று....அருளிச்செய்ய - என்று வாத மேற்றுவந்த அந்தச் சாரிபுத்தனுக்கு ஏற்கும் வகையாலே உண்மை உணர்த்தியருள; வாதம்...புத்தன் - மேலே செய்யும் வாதம் ஒன்றுமில்லாமல் சாரிபுத்தன் தோல்வியுற்றனன்; மற்றவனை....அன்பர் - அன்பராகிய சம்பந்த சரணாலயர் மாறுபட்ட அவனை இவ்வாறு வென்று அருளிச் சீகாழி வேந்தராகிய பிள்ளையாரது திருவடித் தாமரைகளைப் பணிந்தார்; தங்கள்....வீழ்ந்தார் - தங்களுடைய சமயத்தன்மை அழிந்த புத்தர்களும் (பிள்ளையாரது திருவடிகளிற்) பணிந்து வீழ்ந்தார்கள். |
| (வி-ரை) ஆதலினால் - உன் இறைவன் உன் சமயக் கொள்கைப்படி முழுதொருங்குணர்ந்த நிலை அளவை வகையால் நிறுவப்படா தொழிந்து மறுக்கப்பட்டது ஆதலினாலே. |