| வேறு |
2825 | அந்நகரி லடியார்க ளெதிர்கொள்ளப் புக்கருளிக் கொன்னவிலுங் கூற்றுதைத்தார் குரைகழல்கள் பணிந்தேத்தி மன்னியமர்ந் துரையுநாள், "வாகீச மாமுனிவர் எந்நகரி லெழுந்தருளிற்" றென்றடியார் தமைவினவ, | |
| 927 |
2826 | அங்கவரு மடிபோற்றி யாண்டவர செழுந்தருளிப் பொங்குபுனற் பூந்துருத்தி நகரின்கட் போற்றிசைத்துத் தங்குதிருத் தொண்டுசெயு மகிழ்ச்சியினாற் சார்ந்தருளி யெங்குநிகழ்ந் திடவிருந்த படியெல்லா மியம்பினார். | |
| 928 |
|
| 2825. (இ-ள்) அந்நகரில்....புக்கருளி - அந்தத் திருப்பதியினில் அடியவர்கள் தம்மை எதிர்கொண்டு அழைக்க நகரத்தின் உள்ளே (பிள்ளையார்) புகுந்தருளி; கொன்னவிலும்....நாள் - உயிர் பிரிக்க வரும் கூற்றுவனை உதைத்தருளிய இறைவரது சத்திக்கின்ற வீரக்கழலை யணிந்த திருவடிகளைப் பணிந்து துதித்து அங்குப் பொருந்தி விரும்பி வீற்றிருக்கும் நாளிலே; வாகீச மாமுனிவர்....வினவ - வாகீசத் திருமுனிவராகிய திருநாவுக்கரசு நாயனார் எந்தத் திருநகரில் எழுந்தருளி யிருந்தது என்று அடியார்களைக் கேட்க; |
| 927 |
| 2826. (இ-ள்) அங்கு அவரும் அடிபோற்றி - அங்கு அவ்வடியவர்களும் பிள்ளையாரது திருவடிகளைத் துதித்து நின்று; ஆண்டவரசு...படி எல்லாம் - அரசுகள் பொங்குகின்ற நீர்வளமுடைய காவிரி சூழ்ந்த திருப்புந்துருத்தியில் எழுந்தருளி இறைவரைத் துதித்துத் தங்கித் திருத்தொண்டு செய்யும் விருப்பத்தினால் அங்குச் சேர்ந்தருளி எங்கும் தமது பண்பு நிகழும்படியாகத் தங்கியிருந்தபடியினை எல்லாம்; இயம்பினார் - சொன்னார்கள். |
| 928 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |
| 2825. (வி-ரை) கொல் நவிலும் கூற்றுதைத்தார் - கொல் - கொலை; முதனிலைத் தொழிற்பெயர்; கொலையினைக் கூறும்; இரண்டனுருபு விரிக்க; "வீடுநாளணுகிற் றென்று மெய்கொள்வான் வந்த காலன்"(தேவா). மார்க்கண்டரது உயிரை வவ்வுதற் பொருட்டுக் கொல்லுதலைக் கூறிவந்த கூற்றுவனை உதைத்த என்றது தலசரிதம் பற்றிய குறிப்பு. குங்குலியக்கலய நாயனார் புராணமும், தலத் தேவாரங்களும் பார்க்க. கூற்று - உடலையும் உயிரையும் வேறுபடுத்திக் கூறு செய்பவன். கூறு - பகுதி. காரணக் குறிப்புப்பெற இப்பெயராற் கூறினார் (2432). |
| மன்னியமர்ந்துறையு நாள் - இத்திருநகரில் முன்முறை திருநாவுக்கரசர் பெருமானும் ஆளுடையபிள்ளையாரும் ஒருங்கு எழுந்தருளிக் குங்குலியக் கலய நாயனார் திருமடத்தில் திருவமுது செய்து அமர்ந்தருளியிருந்த வரலாறு இங்கு நினைவுகூர்தற்பாலது. 862 - 863-ம், 1512-ம், 2431 - 2433-ம் பார்க்க. இந்நினைவுகள் எல்லாம் பெற மன்னி என்றும், அமர்ந்து என்றும் கூறினார். அமர்தல் - விரும்புதல். |
| உறையு நாள்....வினவ - முன்முறையில் இருவரும் உடனிருந்த நினைவினாலும், திருமறைக்காட்டில் அவரைத் தடுத்து நிறுத்தித் தாம் பிரிந்து சென்ற நினைவினாலும் (1554 - 2516) காணும் காதல் வர இவ்வாறு இங்கு வினாவுதல் நிகழ்ந்ததென்க. |
| வாகீச மாமுனிவர் - வாகீசர் - (1555) "வாகீசர் மறாதவண்ணம் வணங்கி யருள் செய்து விடைகொடுத்து மன்னுங், காதலினா லருமையுறக் கலந்து நீங்கி" (2516) |