1190திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

இழிந்தருளி - அவர் சிவிகை தாங்கச் சிவிகையில் எழுந்தருளியிருத்தல் தகாதாதலின், இழிந்தருளுதல் - பெரியார்முன் சிறியராயடைந்து என்ற குறிப்பும் தருவது. "இழிந்தே" (1662).
இவ்வாறு...என்னாம் - செய்தக்கதல்லாத இச்செயலை இவ்வாறு தேவரீர் செய்யின் அதன் பயன் என்னாகி விளைவது என்று பதைத்துக் கூறியது. "செய்தக்க வல்ல செயக் கெடும்" (குறள்) என அச்செயலைக் கொண்டனர் பிள்ளையார்.
செவ்வாறு மொழிநாவர் - முன் பாட்டில் உரைத்தவை பார்க்க.
"திருஞானசம்பந்தர்க் கெவ்வாறு செயத்தகுவது?" - சிவஞானம் கிட்டப்பெற்ற போது அதனை அடிசார்ந்து வணங்குதலன்றி வேறென்ன செய்தக்கது என்றபடி; அச் செயலினையே "செய்தக்க செய்யாமை யானும் கெடும்" (குறள்) எனக் கொண்டருளினர். ஒரே செயலினை இவ்வாறு வேறு வேறாகக் கொண்டருளியது அவ்வவலரும் தாழ்வெனும் தன்மையோடு சைவமாஞ் சமயஞ் சார்ந்த நிலை குறித்தது. அவ்வவர் கொண்ட நிலையின்படி இருவர் திறனும் முரண்படாமை அறிந்துகொள்க.
இறைஞ்சினார் - அவர் வணங்காமுன் வணங்கினார் (1662).
எதிரே இறைஞ்சுதலும் - என்பதும் பாடம்.

936

2835
சூழ்ந்துமிடைந் தருகணையுந் தொண்டரெல்லா மதுகண்டு
தாழ்ந்துநில முறவணங்கி யெழுந்துதலைக் கைகுவித்து
வாழ்ந்துமனக் களிப்பினராய் "மற்றிவரை வணங்கப்பெற்
றாழ்ந்தபிறப் புய்ந்தோ"மென் றண்டமெலா முறவார்த்தார்.

937

(இ-ள்.) சூழ்ந்து...அதுகண்டு - சுற்றி நெருங்கிப் பக்கத்தில் அணையும் மெய்த்தொண்டர்களெல்லாம் அதனைக் கண்டு; தாழ்ந்து...களிப்பினராய் - தாழ்ந்து நிலம் பொருந்த வணங்கி எழுந்து கைகளைத் தலையின்மேற் கூப்பி வாழ்வடைந்து மனமகிழ்ச்சியுடையவராகி; மற்றிவரை....ஆர்த்தார் - மற்று இவ்விரு பெருமக்களையும் வணங்கும் பேறு நாம் பெற்றோமாதலின் நாம் ஆழ்ந்திருக்கும் பிறவிக்கடலினின்றும் ஈடேறியுய்யப் பெற்றோம்" என்று கூறி அண்டங்கள் எல்லாம் பொருந்தும்படி ஆரவாரித்தனர்.
(வி-ரை.) சூழ்ந்துமிடைந்து அருகணையும் தொண்டர் எலாம் - "நாற்றிசையோர் - சூழ்ந்த நெருக்கினிடை" (2831) என்றபடி கூடியவரும், அரசுகளும் பிள்ளையாரும் இவ்வாறு கூடிய செயலைக் கண்ட திருக்கூட்டத்தினரும்.
வணங்கி - இரு பெருமக்களையும் வணங்கி.
வாழ்ந்து - பெருவாழ்வு பெற்று.
ஆழ்ந்த பிறப்பு - தாம் ஆழ்ந்து கிடந்த பிறவி; பிறப்பு - பிறவியினின்றும்.
ஆர்த்தல் - மகிழ்ச்சி மிக்கதனால் உய்ந்தோமென்று பலவாறும் ஆரவாரித்தல்.
எழுந்துதம - எழுந்தங்கை தலை - என்பனவும் பாடங்கள்.

937

2836
திருஞான சம்பந்தர் திருநாவுக் கரசர்தமைப்
பெருகார்வத் தொடுமணைந்து தழீஇக்கொள்ளப் பிள்ளையார்
மருவாரு மலரடிகள் வணங்கியுடன் வந்தணைந்தார்
பொருவாரும் புனற்சடையார் மகிழ்ந்ததிருப் பூந்துருத்தி.

938