1192திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

பூந்துருத்தி வந்தணைந்தார் - வந்து - என்றமையாலும் அரசுகள் சென்று சிவிகை தாங்கிய நிகழ்ச்சி நிகழ்ந்த இடம் நகரினுக்குப் புறமாகிய இடம் என்பது பெறப்படும். "அந்தப் பதிநின்றும் புறப்பட்டு" (2380) என முன் உரைத்ததனை இங்கு நினைவுகூர்க. III - பக். 671. "புறம்பாணை" என்றவிடத் துரைத்தவை பார்க்க.
உடன் - இருவரும் உடனாக. உடன் அணைந்தார் - "அன்பரொடு மரீஇ....ஆலயந்தொழும்" என்ற சிவஞான போதம் 12-ம் சூத்திரக் கருத்துத் தருவது. "கோபுரத்தை முன்னிறைஞ்சி" (2837).

938

2837
அன்பர்குழாத் தொடுஞ்செல்வா ரானேற்றார் மகிழ்கோயில்
முன்பணித்தா கச்சென்று, கோபுரத்தை முன்னிறைஞ்சித்,
துன்பமிலாத் திருத்தொண்ட ருடன்றொழுது, புக்கருளி
என்புருக வலங்கொண்டு பணிந்தேத்தி யிறைஞ்சினார்

939

(இ-ள்.) அன்பர் குழாத்தொடும் செல்வார் - திருத்தொண்டர்களது திருக்கூட்டத்துடனே செல்வாராகிய பிள்ளையார்; ஆனேற்றார்...இறைஞ்சி - இடப ஏற்றினையுடைய இறைவர் மகிழ்ந்தெழுந்தருளியிருக்கும் திருக்கோயில் முன்பு அருகாகச் சென்று திருக்கோபுரத்தை முன்னர்த் தொழுது; துன்பமிலா...புக்கருளி - துன்பமில்லாத திருத்தொண்டர்களுடன் தொழுது கொண்டபடியே உட்புகுந்தருளி; என்புருக...இறைஞ்சினார் - எலும்பும் உருகும்படி கோயிலினுள் வலமாக வந்து பணிந்து துதித்து வணங்கினார்.
(வி-ரை.) சென்று - முன் இறைஞ்சி - தொழுது - புக்கருளி - வலங்கொண்டு - இறைஞ்சினார் - வழிபாட்டு முறைகளை இவ்வாறு தனித்தனி வகுத்தோதியது ஆர்வமிகுதியினை உணர்த்தற்கு.
திருக்கோயில் முன்பு - முன்பு - என்றது திருக்கோயிலின் முன்னர் - நேரே - என்று இடத்தையும், முன் இறைஞ்சி - முன் - என்றது வழிபாட்டு முறையிற் காலத்தால் முன்னர் என்று காலத்தையும் குறித்தன.
கோபுரத்தை இறைஞ்சுதல் - தூலலிங்கமாதலின் கோபுரம் கட்புலப்படு மெல்லையிலே வணங்குதல் வேண்டுமென்பது விதி.
துன்பமிலாத் திருத்தொண்டர் - துன்பமிலா - "இன்பமே யெந்நாளுந் துன்பமில்லை" (தேவா); "பன்னெடுங் கால மழைதான் மறுக்கினும்...முக்கட், பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண் டீரிப் புகலிடத்தே" (தேவா); "வானந் துளங்கிலென....உத்தமர்க்கே" (தேவா); "கண்ணுதலான் றிருநீற்றுச் சார்வி னோர்க்கும் கவலைவருமோ (3460);"ஈரவன்பினர் யாதும் குறைவிலார்" (144); "தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லால், மனக்கவலை மாற்ற லரிது" (குறள்) என்பன முதலியவை காண்க. துன்பத்தை மலவாதனையை - இல்லையாகத் துணை செய்யும்தொண்டர் என்று கொண்டு 12-ம் சூத்திரக் கருத்துப்பட உரைத்தலுமாம். இக்கருத்தினையே தொடர்ந்து "மையறுசீர்த் தொண்டர் குழாம்" (2838) என மேலும் கூறுதல் காண்க.
தொழுது புக்கருளி - தொழுது - தொழுதபடியே.
தொழுது புக்கு - தொழுதலும் புகுதலும் உடனிகழ; "தொழுதெழுவாள்" (குறள்)