| என்புருக வலங்கொண்டு - என்புருகுதல் - இறைவர் செய்யும் பேருபகாரத்தை எண்ணுந்தோறும் மேன்மேற் பெருகும் ஆர்வத்தாலாவது. |
| இறைஞ்சினார் - இவ்வணக்கம் திருக்கோயிலினுள் உட்புறம் நிகழ்ந்தது. இறைவர் திருமுன் நிகழ்ந்த வணக்கம் மேல்வரும் பாட்டிலுரைக்கப்படுதல் காண்க;பிள்ளையார் புறத்து நின்றாங்கு இறைஞ்சுதற்காக இடப தேவர்கள் விலகி எழுந்தருளியுள்ளார்கள் என்ற தொருவரலாறும், இக்கோயிலில் அம்மூர்த்திகள் விலகியுள்ள நிலைபற்றி வழங்கப்படுகின்றது. தலவிசேடம் பார்க்க. |
| 939 |
|
2838 | பொய்யிலியா ரைப்பணிந்து போற்றியே புறத்தணைவார்; செய்யசடை யார்கோயிற் றிருவாயின் முன்னாக மையறுசீர்த் தொண்டர்குழாம் வந்துபுடை சூழ,வுல குய்யவரு வார்தாங்க ளுடன்மகிழ்ந்தங் கினிதிருந்தார். | |
| 940 |
| (இ-ள்.) பொய்யிலியார்....அணைவார் - பொய்யிலியப்பரை வணங்கித் துதித்துப் பின்பு புறத் திருமுற்றத்தில் அணைவாராகிய பிள்ளையார்; செய்ய சடையார்....சூழ - சிவந்த சடையினையுடைய இறைவரது திருக்கோயிற் றிருவாயின் முன்பு குற்றமறும் சிறப்புடைய தொண்டர் கூட்டம் வந்து தம்மைச் சுற்றிச் சூழ்ந்து வர; உலகுய்ய....இருந்தார் - உலக முய்யும்பொருட்டு வரும் நாயன்மார் களிருவரும் அடியார்கள் சூழ அவர்களுடன் மகிழ்ந்து அங்கு இனிதாக விரும்பி எழுந்தருளி யிருந்தனர். |
| (வி-ரை.) பொய்யிலியார் - திருப்பூந்துருத்தியில் வீற்றிருக்கும் இறைவரது பெயர்; "பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டே னானே" (தாண்.) |
| புறத்து - பிறத்திருமுன்றிலின்கண்; திருவாயில் முன்னாக - என்றது காண்க. இத்திருவாயில் கோயிலினுட்புறம் உள்ள திருவாயில். |
| அங்கு - கோயிலினுள்ளே திருமுன்றிலின் வாயில்முன் ஒரு தனியிடத்து. மேல் வரும் 5 பாட்டுக்களினும் கூறப்பெறும் நிகழ்ச்சிகள் நிகழ்ந்த இடம் திருமுற்றம் என்பது குறிக்கப்பட்டது காண்க. இவற்றின் பின்னரே பிள்ளையார் அரசுகளது திருமடத்திற் புகுந்தருளினர் என்பது (2844-ல்) மேற்கூறப்படுதலும் காண்க. |
| வருவார் தங்களுடன் - என்று பாடங் கொண்டு - வருவாராகிய அடியார்கள் என்றுரைத்தலுமாம். |
| 940 |
| வேறு |
2839 | வாக்கின் றனிமன்னர் வண்புகலி வேந்தர்தமைப் போக்கும் வரவும் வினவப், புகுந்ததெல்லாந் தூக்கின் றமிழ்விரகர் சொல்லிறந்த ஞானமறை தேக்குந் திருவாயாற் செப்பி யருள் செய்தார். | |
| 941 |
| (இ-ள்.) வாக்கின்...வினவ - வாக்கிற்கு ஒப்பற்ற அரசராகிய அரசுகள் வளப்பமுடைய சீகாழி அரசரை அவர் பாண்டி நாட்டுக்குச் சென்றருளியதும் அங்குநின்று மீண்டருளியதும் ஆகிய வரலாறுகளை வினவ; புகுந்ததெல்லாம் - அங்கு நிகழ்ந்த வரலாறுகளின் தொகுதியினை முழுதும்; தூக்கின்....அருள்செய்தார் தமிழ்ப் பாட்டின் தலைவராகிய பிள்ளையார் சொல்லுதற்கரிய ஞானமறைகளைத் தேக்குகின்ற தமது திருவாக்கினாற் சொல்லியருளினார். |
| (வி-ரை.) மன்னர் - வேந்தர் - இருவரும் திருவருட் பெருக்கினால் ஒப்பாந்தன்மை குறித்தது. தனி வாக்கின் மன்னர் என்றலுமாம். |