1194திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

போக்கும் - வரவும் - போக்கு - பாண்டி நாட்டுக்கு எழுந்தருளிச் செல்லுதல்; வரவு - அங்குநின்று மீண்டருளுதல். போக்கும் வரவும் - போயினநாள்முதல் மீண்ட இந்நாள்வரை நிகழ்ந்த எல்லா நிகழ்ச்சிகளின் தொகுதி. இக்கருத்தே பற்றிப் புகுந்ததெல்லாம் என்றார். புகுந்தது எல்லா(மு)ம் என ஒருமையிற் கூறினார். போக்கு - பரசமய நிராகரிப்பாகிய அழிவும், வரவு - திருநீற்றின் ஆக்கமாகிய பெருக்கமும் என்றும், புகுந்தது எலாம் - இடையே புகுந்த வாத முதலிய நிகழ்ச்சிகளின் தொகுதி என்றும் குறிக்கொள நின்ற திறமும் காண்க. "வாதில் வென்றதுவும்...திருநீறு வளர்த்ததுவும்" (1664) என்றது காண்க.
தூக்கின் தமிழ் விரகர் - தூக்கு - செய்யுள். முதன்மைபற்றி முத்தமிழனுள் இயற்றமிழினை விதந்தோதினார். தூக்கு - எடுப்பு - பெருமை என்றலுமாம். இசைப் பொதுமை என்றலுமாம். "இன்னிசையாற் றமிழ்பரப்பும் ஞானசம் பந்தன்" (நம்பி. தேவா).
சொல்லிறந்த ஞானமறை தேக்கும் திருவாய் - சொல்லிறந்த ஞானம் - சொல்லுணர்ச்சியைக் கடந்த ஞானம்; மெய்ப்பொருளை அனுபவமாக அறியுஞ் சிவஞானம். "எண்ணரிய சிவஞானத் தின்னமுதம்" (1965); ஞானமறை தேக்குதல் - ஞானத்தைப் புலப்படுத்தும் சொல் நிறைதல்; தேக்குதல் - நிரம்பி மேல் வருதல்; தேக்கும் - தடையுண்ட நீர் நிரம்பி வழிதல்போல நிரம்பி வருதல் என்ற பொருள் தரும் குறிப்புருவகம்.
நூக்கினால் - தேக்கும் என்று கூட்டியுரைக்கவும் நின்றது.
சொல்லிறந்த ஞான மறை தேக்கும் திருவாயால் செப்பி - சொல்லரிய ஞானத்தை மறையினால் வெளியிட வல்லவராதலின் அத்திருவாக்கினால் அது போலவே சொல்லரிய சிவனருட்டுணையாற் பெற்ற அருணிகழ்ச்சிகளைச் சொன்னார் என்பது குறிப்பு. 

941

2840
காழியினில் வந்த கவுணியர்தம் போரேற்றை
ஆழிமிசைக் கன்மிதப்பில் வந்தா ரடிவணங்கி
"வாழிதிருத் தொண்டென்னும் வான்பயிர்தா னோங்குதற்குச்
சூழும் பெருவேலி யானீ" ரெனத்தொழுதார்.

942

(இ-ள்.) காழியினில்...அடிவணங்கி - சீகாழியில் வந்து அவதரித்த கவுணியர் குலத்தவருடைய போரேறு போன்ற பிள்ளையாரைக் கடலின்மேலே கல்லே மிதவையாகக் கொண்டு வந்தருளிய அரசுகள் அடிபணிந்து; வாழி...எனத் தொழுதார் - வாழ்வு தரும் திருத்தொண்டு என்னும் பெரிய பயிர் ஓங்கி வளர்ந்து பயன்றரச் செய்தற்கு உரியதாகச் சூழும் பெருவேலிபோல நீர் ஆயினீர் என்று கூறித் தொழுதனர்.
(வி-ரை.) காழியினில் வந்த - கன்மதிப்பில் வந்தார் -முன் பாட்டில் மன்னர் - வேந்தர் என்று தலைமைபற்றிய ஒப்புமை பெறக் கூறிய ஆசிரியர், இப்பாட்டில் வந்தருளிய தன்மைபற்றிய ஒப்புமைபெறக் கூறிய கவிநலம் கண்டுகொள்க. அரசுகள் வந்த கன்மிதப்புப் போலவே காழியும் தோணியாய் மிதக்கும் தன்மைக் குறிப்புப்படக் கூறியபடியாம்.
போரேறு - ஏறுபோல்வாரை ஏறு என்றதுபசாரம்; போரேறு என்ற இத் தன்மையாற் கூறியது வாதஞ் செய்து வென்றருளிய தன்மையும், ஈண்டு அவ்வரலாறுபற்றிக் கூறும் நிலையும் குறித்தற்கு.