| ஆழிமிசைக் கன்மிதப்பில் வந்தார் - "ஆழிமிசைக் கன்மிதப்பி லணைந்த பிரான்" என இச்சொல்லும் பொருளும் உமாபதிசிவம் எடுத்தாண்டு பாராட்டினர். |
| வாழி - வாழ்வாகவுள்ள; வாழ்வைத் தருகின்ற. |
|
| திருத்தொண்டென்னும்...வேலியானீர் - வினைபற்றி வந்த தொடருவமம்; தொண்டு - பயிர். பிள்ளையார் - பெருவேலி; உவம உருபு தொக்கது. ஆனீர் - ஆக்கச் சொல் உவம உருபுப் பொருளில் வந்தது. "ஆள்வாரிலி மாடாவேனோ" (திருவாசகம்). |
| பயிர் ஓங்குதற்குச் சூழும் பெருவேலியானீர் "ஏரினு நன்றா லெருவிடுதல் கட்ட பின், நீரினு நன்றதன் காப்பு" (குறள்) என்று பயிர் ஓங்குதற்கு வேண்டப்பட்ட உழவு - எருவிடல் - களைகட்டல் - நீர் பாய்ச்சல் - காத்தல் என்ற ஐந்தனுள் ஏனை நான்கிற்கு மேலாகிச் சிறப்புப்பற்றி இறுதியில் வைக்கப்பட்ட வேலியாகிய காவலை உவமித்தார் - உவமேயத்தினும் அச்சிறப்பினை யாப்புறுத்தற்கு. |
| வான்பயிர் - சிவவானில் சேரும் சிவபுண்ணியமாகிய பயிர் என்பதும் குறிப்பு; "வானோர்க் குயர்ந்த உலகம்" (குறள்). |
| பெருவேலி - தொண்டராகிய பெரும் பயிருக்கு ஏற்றவாறு பொருந்தும் பெரிய வேலி. சூழும் - சுற்றி வளைத்த என்றும், சூழ்ந்து - எண்ணி - அமைத்த என்றும் உரைக்க நின்றது. |
| 942 |
2841 | பிள்ளையார் தாமுமவர் முன்றொழுது பேரன்பின் வெள்ள மனையபுகழ் மானியார் மேன்மையையும் கொள்ளும் பெருமைக் குலச்சிறையார் தொண்டினையும் உள்ளபரி செல்லா மொழிந்தங் குவந்திருந்தார். | |
| 943 |
| (இ-ள்.) பிள்ளையார்....தொழுது - பிள்ளையாரும் அவர் முன்னே தொழுது; பேரன்பின்...மேன்மையும் - பெரிய அன்பின் வெள்ளம்போன்ற புகழினையுடைய மங்கையர்க்கரசியம்மையாரது மேம்பாட்டினையும்; கொள்ளும்....தொண்டினையும் - கொள்ளும் பெருமையினையுடைய குலச்சிறை நாயனாரது திருத்தொண்டினது சிறப்பினையும்; உள்ள பரிசெல்லாம் மொழிந்து - உள்ள தன்மையெல்லாம் சொல்லியருளி; அங்கு உவந்திருந்தார் - அத்தன்மையில் மகிழ்ந்தருளினர். |
| (வி-ரை.) தொழுது - பெரியோர்களது வினாவுக்கு விடைகூறப் புகும்பொழுது தொழுது தொடங்குதல் உயர்ந்தோர் மரபு; 2377 - 2556 முதலியவை பார்க்க. இனிக் கூறப்புகும் அருட்பொருளின் சிறப்பு நோக்கித் தொழுது தொடங்கியருளினார் என்றலுமாம். |
| பேரன்பின் வெள்ளம் - மிகுதிபற்றி அன்பை வெள்ளம் என்றார். மானியார் - மங்கையர்க்கரசியம்மையார்; மேன்மை - சிவநெறியிற் கொண்ட அன்பின் மேம்பட்ட நலங்கள்; அரசியார் என்ற குறிப்புமாம். இவற்றை "முன்நின் நிலை விளம்பக் கொங்கை சுரந்தவருட் கோமகள்" என்று போற்றினார் சிவப்பிரகாசர். |
| கொள்ளும் பெருமை - எஞ்ஞான்றும் மேற்கொண்டொழுகும் பெருமைப் பண்புகள்; தொண்டு - அடிமைத் திறம். |
| மேன்மை - தொண்டு - இவற்றின் றிறங்களைப் பிள்ளையாரது திருவாலவாய்த் (புறநீர்மை) திருப்பதிகத்திற் கண்டுகொள்க. |
| உள்ள பரிசு எல்லாம் - உள்ளவாறு காணும் தன்மைகள் யாவையும். இவை என்றும் நிலைத்த உண்மையினியல்புகள். முன்னர்ப் "புகுந்ததெல்லாம்" (2839) |