1196திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

என்றது நிகழ்ச்சிகள். அவற்றைச் செப்பியருளிய வரலாற்றினைத் தொகுத்து முடித்த பின், இவ்வாறு அம்மையாரது பண்பும் அமைச்சனாரது பண்பும் உரைத்தருளியது அடிமைத் திறத்திற்றிளைக்கும் அரசுகள் அறிந்து களிக்கும்பொருட்டு; இவ்வாறு அவர்களது அடிமைத்திறங்கேட்ட அளவே அரசுகள் அங்குச் சென்று தமிழ்நாடு காண்பதற்கு வாகீசர் மனங்கொண்டார் என்று முன்னர் "உரைத்தருள....தமிழ்நாடு காண்பதற்கு மனங்கொண்டார்" (1665) எனவும், போக்கும் வரவும் கேட்டபோது "உவந்தார்" (1664) எனவும் கூறியவை இங்கு நினைவு கூர்தற்பாலன. அவ்விருவர் பணியினைப் பற்றியே "இவர் பணியு, மந்நலம் பெறுசீ ராலவா யீசன்" (தேவா) என்று பிள்ளையார் இறைவரைச் சிறப்பித்தமை காண்க.
அங்கு - மொழிந்த அத் தன்மையின்கண்; அவ்விடத்து என்றுரைப்பாரு முண்டு.

943

2842
தென்னற் குயிரோடு நீறளித்துச் செங்கமலத்
தன்ன மனையார்க்கு மமைச்சர்க்கு மன்பருளித்
துன்னுநெறி வைதிகத்தின் தூநெறியே யாக்குதலான்
மன்னுபுகழ் வாகீசர் கேட்டு மனமகிழ்ந்தார்.

944

(இ-ள்.) தென்னற்கு....நீறளித்து - பாண்டியருக்கு உயிருடனே திருநீற்றினை அளித்தருளியும்; செங்கமலத்து...அன்பருளி - செங்கமலத்திலிருக்கும் அன்னம் போன்ற மங்கையர்க்கரசியம்மையாருக்கும் அமைச்சனாருக்கும் அன்பினை அளித்தருளியும்; துன்னுநெறி.....ஆக்குதலால் - தூய வைதிகச் சைவநெறியே பொருந்தும் நெறியாக ஆக்கியளித்தமையாலே; மன்னுபுகழ் ....மகிழ்ந்தார் - நிலைபெற்ற புகழினையுடைய அரசுகள் கேட்டு மனம் மிக மகிழ்ந்தார்.
(வி-ரை.) உயிரோடு நீறு அளித்து - வெப்பு நோயினால் உயிர்போகும் நிலையிலிருந்து பாண்டியனுக்கு நோய்நீக்கி உயிரைக் கொடுத்ததன்றி அதனோடு திருநீற்று நெறியினைச் சாரும் பேற்றினையும் அளியுடன் தந்து; திருநீற்றின் மூலம் (திருநீற்றுப் பதிகம் அருளி நீறு சாத்தி) உயிர் அளித்து என்பதும் குறிப்பு. நீறிடா நெற்றிபாழ் என்றும், "திருவெண்ணீ றணியாத திருவி லூரும்...அடவி காடே" (தேவா) என்றும், "நீறணியாத நெற்றியினைச் சுடு" (வேதம்) என்றும் கூறுபவாகலின் அவ்வாறு ஒழியாது நீற்றினால் உண்மை உயிர்வாழ்க்கை பெறுபவனாக ஆக்கி என்ற குறிப்பும் காண்க. சமண் சார்பாற் சிவாபராதப்பட்டு வீழ்ந்து கிடந்த உயிரை மேல் எடுத்துப் புனிதமாக்கி அளித்து என்ற குறிப்புமாம்.
செங்கமலத்து அன்னம் அனையார் - மங்கையர்க்கரசியம்மையார்; அன்னம் - அன்னம் போன்றவர் என்க; நடைபற்றிய உவமம். "செய்ய தாமரைமே லன்னமே யனைய சேயிழை" என்ற தேவாரப் பகுதி ஆசிரிய வசனமாக எடுத்தாளப்பட்டது. "பங்கயச் செல்வி" என்று பிள்ளையாரால் போற்றப்படும் நிலையுள்ள அம்மையாரை ஈண்டுப், பிறவியுட்படும் இலக்குமிக்கு உவமிப்பதாகக் கூறுவார் பொருள் பொருந்தாதென்க.
அன்பு அருளுதலாவது - தமது இன்னருளினை அளித்தல்; அவர்கள் வேண்டியவாறே சமணீக்கமும் சைவ ஆக்கமும் செய்தருளுதல்.
வைதிகத்தின் தூநெறி - வைதிக சைவநெறி. "வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத் துறைவிளங்க" என்றபடி வேதத்திற் காட்டிய நெறிகள் பலவற்றுள்ளும் தூய்மை செய்வது சைவநெறியே யாதலின் தூநெறி என்றார்.