| தூநெறிய துன்னுநெறி ஆக்குதலால் என்க. முன்னிருந்த ஏனையவை துன்னாத - பொருந்தாத - நெறி என்பதாம். |
| வாகீசர் கேட்டு மனமகிழ்ந்தார் - சைவநெறியின் ஆக்கப்பாட்டிலே உலகுயிர்கள் ஓங்கி வாழ்தல் கண்டு மகிழ்வது வாகீசப் பெருமானின் மனநிலை, "தேவர் திருவடிநீ நெனைப் பூசு"; "திருநாம மஞ்செழுத்துஞ் செப்பாராகில் தீவண்ணர் திறமொருகாற் பேசாராகில் அருநோய்கள் கெடவெண்ணீ றணியாராகில்"; "நமச்சிவாயஞ் சொல்ல வல்லோ நாவால்"; "விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற்பூசி" (தேவா) என்பனவாதி அவரது எண்ணிறந்த திருவாக்குக்களால் இவ்வுண்மை இனிது விளங்கும். திலகவதியம்மையார் திருநீற்றை யஞ்செழுத்தோதிக் கொடுக்கப் பெற்றமையால் அத்துணைகொண்டே தாம் கரையேறியமை திருவுள்ளத்தில் எப்போதும் கொண்டு மகிழ்ந்தனர் அரசுகள். "சாம்பலைப் பூசித் தலைரயிற் கிடந்துநின் றாள்பரவி, யேம்பலிப் பார்கட் கிரங்கு கண்டாய்" என்று அடியார்கள் பொருட்டு வேண்டுதலும், "துஞ்சும் போதுநின் னாமத் திருவெழுத், தஞ்சுந் தோன்றவருளும்" என்று வேண்டுதலும் பிறவும் சிவசாதனப் பொலிவொழுக்கமாகிய சைவநெறி விளக்கத்தில் அரசுகள் கொண்ட ஆர்வத்தைக் காட்டுவன. இவ்வாறு மகிழ்தல் - விருப்பு வெறுப்புக்களாகும் ஆணவமலச் சார்பாகிய காரணத்தாலன்று. பல்லுயி ரனைத்தையும் ஒக்கப் பார்க்கும் செல்வக் கடவுட் டொண்டரா (திருவிடை - மு. கோ - 7) கிய அரசுகள், உயிர்கள்படும் துன்பங் கண்டுழி அதற்குப் பரிதல்மாத்திரையே இங்கு மேற்கொண்ட மகிழ்ச்சியாம் என்க. சிவஞான மாபாடியம் 12-சூத் - 2 அதி - பார்க்க. "கள்ளத் தலைவர் துயர்கருதித் தங்கருணை, வெள்ளத் தலைவர் மிக" (திருவருட் பயன்). |
|
| 944 |
2843 | சொல்லின் பெருவேந்தர் தொண்டைவள நாடெய்தி மல்கு புகழ்க்காஞ்சி யேகாம் பரமன்னுஞ் செல்வார் கழல்பணிந்து சென்றதெல்லாஞ் செப்புதலும் புல்குநூன் மார்பரும்போய்ப் போற்ற மனம்புரிந்தார். | |
| 945 |
| (இ-ள்.) தொண்டைவள நாடெய்தி.....சென்றதெல்லாம் - திருத்தொண்டை வளநாட்டினைச்சேர்ந்து மிகுந்தபுகழினையுடைய காஞ்சிபுரத்தில் திரு ஏகாம்பரத்தில் நிலைபெற வீற்றிருக்கும் செல்வாராகிய திருவேகம்பரது திருவடிகளைப் பணிந்து சென்று வந்த வரலாறுகள் எல்லாவற்றையும்; சொல்லின் பெருவேந்தர் - வாக்கிற் பெரியஅரசராகிய அரசுகள்; செப்புதலும் - சொல்லியருளுதலும் (அதுகேட்டு); புல்கு....மனம் புரிந்தார் - பொருந்திய நூலையுடைய மார்பராகிய பிள்ளையாரும் அங்குச்சென்று துதிக்கத் திருவுள்ளங் கொண்டருளினர். |
| (வி-ரை.) சொல்லின் பெருவேந்தர் - "வாக்கின் றனிமன்னர்" (2839)சொல்லின் பெருவேந்த ராதலின் அவர் செப்புதலும், அது பிள்ளையாரை அத்தொண்டை நாட்டு யாத்திரையில் உடனே மனம் வைக்கச் செய்தது என்பது குறிப்பு. |
| காஞ்சி - நகர்ப் பெயர். தொண்டை வளநாடு - நாட்டு வளமும், மன்னு புகழ் - நகரின் பெருமையும் குறித்தவாறு. இவை முன் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்துட் பேசப்பட்டமையால் இங்குச் சில அடைமொழிகளால் இவ்வாறு சுட்டிக் கூறினார்; விரிவு ஆண்டுக் காண்க. வளநாடு - நாட்டின் பெரும் பகுதிக்கு முன்னை நாளில் வழங்கிய மரபுப் பெயருமாம். (கல்வெட்டுக்கள் பார்க்க). |