1214திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

2858. (வி-ரை.) தண்டகத் திருநாடு - திருத்தொண்டை நாடு; தண்டகன் - என்னும் அரசன் ஆண்டமையால் தண்டகநாடென்று பேர் வழங்கலாயிற்று. இவ்வாறே இந்நாடு அவ்வக்காலத்து ஆட்சி புரிந்த அரசர் பெயரால் துண்டீரன் ஆண்டமையால் துண்டீர நாடு என்றும், தொண்டைமான் ஆண்டமையால் தொண்டைநாடென்றும் வழங்கப்படும் என்க. "அண்டரும் புகழ்துண் டீர னாண்டுதுண் டீரநா டாய்த், தண்டகன் பின்ன ராண்டு தண்டக நாடாய்ப் பின்னர்த், தொண்டைமா னாண்டு தொண்டை நாடெனத் துலங்கிற் றன்றே, பண்டயன் படைப்புத் தொட்டுப் பயிலுமித் தொண்டை நாடு" என்ற விநாயக புராணம் காண்க.

"தண்டகத் திருநாட்டினை....பணிவது" என்று - இது பிள்ளையார் அடியார்களுக்கு அருளியது. தொண்டை நாட்டிற் சென்று கோயில்களைப் பணிவோம் என்றதாம். பணிவது - பணிந்து செல்வது எமது கருத்து என்றபடி; எமது கருத்து என்பது குறிப்பெச்சம்.

அண்டருக் கறிவரும் பெரும் தோணி - தோணியே பிரணவமாம். பிரணவப் பொருள் தேவருமறிவரிது என்பது குறிப்பு. தேவர்களுட் பெரிய பிரமதேவன் பிரணவப் பொருளறியாமையால் முருகப் பெருமானால் குட்டுப்பட்டுச் சிறைப்படுத்தப் பெற்ற கந்தபுராண வரலாறு இங்கு நினைவுகூர்தற்பாலது.
தோணியிலிருந்தவர் அருள் பெற்று - தொண்டைநாடு செல்வதற்கு அருள்விடை பெற்று.
தொடர்ந்து எழும் - தம்முடன் தொடர்ந்து வருவதற்கு ஒருப்பட்டு எழுந்து போந்த.
உரை செய்வார் - முற்றெச்சம். உரை செய்வாராகி - எனச் சொல்லி என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடித்துக்கொள்க.
சார்ந்து நந் தம்பிரான் - என்பதும் பாடம்.

960

2859. (வி-ரை.) அப்பர்!.......எனச் சொல்லி - இது சிவபாதவிருதயருக்குப் பிள்ளையார் சொல்லி, அவர் தம்முடன் தொடர்ந்து செல்லுதலை மறுத்து விடுத்தது; தாதையாரின் மூப்புக் காரணமாகவும், உயிர்பற்றிய இறைவரது சார்பும் அடியார் சார்புமேயன்றி உடல்பற்றிய சார்புகளின் தொடர்ச்சியில் விருப்பமின்மை காரணமாகவும் பிள்ளையார் இவ்வாறு மறுத்து விடுத்தனர்போலும்!; முன் யாத்திரையில் தந்தையார் தம்முடன் வர இசைந்தமைபற்றி ( ) பார்க்க. தம்முடன் தமிழ்நாடு செல்வதற்கு அமைந்த அரசுகளை "அப்பர்! இந்தப் புனனாட்டி லெழுந்தருளி யிருப்பீர்!" என்று (2515) பிள்ளையார் தவிர்த்தருளியதும் ஈண்டு நினைவு கூர்தற்பாலது. ஆனால் அங்கு அரசுகளைப் பிள்ளையார் மறுத்தருளியது வேறு காரணம்பற்றி; அந்நிலைபற்றி ஆண்டுரைத்தவை பார்க்க. "அருமறை தங்கு வேட்டும் - சடையாரைத் தொழுதும் இரும்" என்று தாதையார் செய்ய நின்ற உயரிய இரண்டு கடன்களையும் பிள்ளையார் சுட்டி அருளியதும், சீகாழிப் பதியவர்க்கு வேள்வியின் பொருட்டே பிள்ளையார் முன்னர் உலவாக்கிழியாக ஆயிரம்பொன் திருவாவடுதுறை யிறைவரிடம் பெற்றளித்தமையும் இங்கு நினைவு கூர்தற்பாலன.
மீள்பவர் - தம்முடன் செல்லாது அங்குத் தங்கும்படி விடைபெற்று மீள்பவர்கள்.
ஒப்பிலாதவர் - சிவபெருமான். "உவமனில்லி" (தேவா); "தனக்குவமை யில்லாதான்"(குறள்).