[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1219

எல்லாவற்றையும் நீறாக்கும்; அழிதலால் வந்து பொருந்தும்; அப்போதும் அழியாது நிற்கும் தமக்கன்றிப் பிறர்க்கும் ஏலாத; ஆலுதல் - அசைதல்; - (3) ஏடு - இதழ்களை யுடைய; -(4) துவர் - பவள நிறம்; பவளம். புரிசை - மாட உறுப்பு; மதில். கவர - அழிய; பவரும் - விளங்கும் ;-(5) பணி ஆர் - திருப்பணிகள் செய்கின்ற ;- (8) நெடுநீர் - கங்கை. குழல் - ஊதுகுழல்கள் ;-(9) சந்தம் - மணம்; கந்தம் - ஒளி - புகழ் ;-(10) மால் அடிவீழ -நான்முகன் உணர்கில்லா - இருவரும் ஒன்றுபோலவே அடியுமுடியும் அறிகில்லா ராயினும் மால் அறிகில்லேனென்று உணர்ந்து அடிவீழ்ந்தனர்; பிரமன் அங்ஙனமன்றி உணரானாயினும் உணர்ந்தேனென்று பொய் மொழிந்தானென்ற வரலாற்றுக் குறிப்புப்பட அருளியபடி. மால்விடை - திருமாலாகிய விடை;பெரிய விடை.
தலவிசேடம் :- திருவடுகூர் - நடுநாட்டில் பாடல் பெற்றனவற்றுள் 16-வது பதி. வடு பூசித்த பதி என்பது தலப் பெயர்க்காரணம்; வடு - வைரவரைக் குறித்தது. இப்போது ஆண்டார் கோயில் என வழங்கப்படும். சுவாமி - வடுகூர்நாதர்; வடுகூரடிகள் என்பது பதிகம். அம்மை - வடுவகிர்க்கண்ணியம்மை; பதிகம் 1.
இது கண்டமங்கலம் என்று வழங்கும் சின்னபாபு சமுத்திரம் நிலையத்தினின்றும் மட்சாலை வழி மேற்கு இரண்டு நாழிகையளவில் அடையத்தக்கது; திருத்துறையூரினின்றும் மட்சாலை வழி வடகிழக்கில் ஒருநாழிகை யளவிலும் அடையலாம்.
2862
வக்க ரைப்பெரு மான்றனை வணங்கியங் கமருநா ளருளாலே
செக்கர் மேனியா ரிரும்பைமா காளமுஞ் சென்றுதாழ்ந் துடன்மீண்டு
மிக்க சீர்வள ரதிகைவீ ரட்டமு மேவுவார் தம்முன்பு
தொக்க மெய்த்திருத் தொண்டர்வந் தெதிர்கொளத் தொழுதெழுந் தணைவுற்றார்.

964

(இ-ள்.) வக்கரை....அமருநாள் - திருவக்கரையில் வீற்றிருந்தருளிய இறைவரை வணங்கி அப்பதியினில் விரும்பி எழுந்தருளியிருந்த நாட்களிலே; அருளாலே....மீண்டு - திருவருட் குறிப்பினாலே செவ்வானம் போன்ற சடையினையுடைய இறைவரது திருவிரும்பைமாகாளத்தையும் போய் வணங்கி உடனே திரும்பி; மிக்க.....அணைவுற்றார் - மிகுந்த சிறப்புக்களை வரச் செய்கின்ற திருவதிகை வீரட்டனாத்தைச் சென்று சேர்பவராகிய பிள்ளையார் தம்முன்னர்க் கூடிய உண்மைத் திருத்தொண்டர்கள் வந்து எதிர்கொளத் தொழுது எழுந்து அங்குச் சேரலுற்றனர்.
(வி-ரை.) வக்கரை - அமருநாள் - என்றதனால் அப்பதியினிற் சில நாட்கள் தங்கியருளினார்கள் என்பதும். இரும்பைமாகாளமும்....உடன் மீண்டு - என்றதனால் அங்கு வழிபட்டு உடனே மீண்டருளினார் என்பதும் எச்சவும்மையினால் இடையில் திருவரசிலியை வணங்கியதுடன் என்பதும் கருத நின்றன. இவையிரண்டும் தொண்டை நாட்டுப் பதிகள். இவையே தொண்டைநாட்டில் பிள்ளையார் முதலில் "கண்டு போற்றிப் பணிந்த" (2858) பதிகளாம்; ஆனால் இவற்றினின்றும் காஞ்சிபுரம் சென்று சேர்வதற்கு இடையில் திருவதிகை - திருக்கோவலூர் - திருவண்ணாமலை முதலிய பதிகள் உள்ளபடியால் அவற்றை வணங்கிச் சென்றமை மேல் உரைக்கப்படுவது காண்க. "அதிகை வீரட்டமும் மேவுவார்" என்று மேல் தொடங்கிக் கூறுவது மிக் கருத்து.
தொழுதெழுந்து - எதிர்கொண்ட தொண்டர் குழாத்தைத் தொழுது என்றும், வீரட்டமாகிய திருத்தலத்தைத் தூரத்தே தொழுது என்றும் உரைக்க நின்றது. 2405 பார்க்க.