| இது புதுச்சேரி நிலையத்தினின்றும் வடமேற்கில் கற்சாலையில் 11 நாழிகையளவில் உள்ளது வானூரினின்றும் மேற்கே மட்சாலைவழி 2 நாழிகையளவில் உள்ளது; (2) முண்டியம்பாக்கம் நிலையத்தினின்றும் கிழக்கே 1 நாழிகையில் கற்சாலைவழி திருப்புறவார் பனங்காட்டூரை யடைந்து கிழக்கில் மட்சாலைவழி 8 நாழிகையளவில் கூனிச் சம்பட்டையும் அதனின்று வடக்கே 1 நாழிகையில் கொடுக்கூரையும் அடைந்து அங்கு நின்றும் கிழக்கே 1/2 நாழிகையளவில் வராக நதியின் வடகரையில் உள்ளது. இது மற்றொரு வழி. புதுச்சேரிச் சாலையில் இடையே திருவரசிலியும் திருஇரும்பைமாகாளமும் உள்ளன. |
|
| திருவிரும்பைமாகாளம் |
| திருச்சிற்றம்பலம் |
| பண் செவ்வழி - 2-ம் திருமுறை |
| மண்டுகங் கைசடை யிற்கரந் தும்மதி சூடிமான் கொண்டகை யாற்புர மூன்றெரித் தகுழ கன்னிடம் எண்டிசை யும்புகழ் போய்விளங் கும்மிரும் பைதனுள் வண்டுகீ தம்முரல் பொழில்சுலாய் நின்றமா காளமே. | |
| (1) |
| எந்தைபெம் மானிட மெழில்கொள்சோ லையிரும் பைதனுள் மந்த மாயபொழில் சூழ்ந்தழ காருமா காளத்தில் அந்தமில் லாவன லாடுவா னையணி ஞானசம் பந்தன் சொன்னதமிழ் பாடவல் லார்பழி போகுமே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு :- இறைவனது இடம் இரும்பைதனுள் மாகாளமே. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) மான் கொண்ட கை - மானேந்திய கை; மான் - மான்போன்ற அம்மை என்று கொண்டு அம்மையினது கை என்றலுமாம்; "விற்றாங் கியகரம் வேனெடுங் கண்ணி வியன்கரமே" (அரசு); போய் - பரவி; "இசையாற் றிசைபோயது"(சிந்தா). இரும்பை - நகரின் பெயர்; மாகாளம் - கோயிலின் பெயர்; சுலாவுதல் - விளங்குதல்; சுற்றுதலுமாம்;-(2) வேதவித்து - வேதங்களிற் கூறப்படுவது; வேதங்களை அறிந்தோன் என்றுமலம்; "ஓதாதே வேத முணர்ந்தாய்" (தேவா); கோதுவித்தல் - குற்றம் தீர்த்தல் - போக்குதல்; நீறெழ - வெந்து சாம்பலாக; ஏதவித்து - ஏதங்களின் காரணம்; மாதவத்தோர் - ஆகமவிதிப்படி சிவனை வழிபடுபோர்; -(3) தந்தம் - மணம் ;-(4) மஞ்சில் - மேகமண்டலத்தினுள்;-(5) குறை வெண்மதி - பிறை; மதி - மதி சூடிய ;-(6) பறைவது - தீர்வது ;-(8) நட்டத்தோடு - ஆடுவான் - நட்டம் - "கூடிய விலையம் சதிபிழையாமை" ஆடும் கூத்து. வட்டம் சூழ்ந்து - வலம் வந்து ;- (9) அட்ட - மார்க்கண்டேயருயிரை வவ்விய; மட்டு - தேன்; மணம் என்றலுமாம். |
| தலவிசேடம் :- திருவிரும்பைமாகாளம் - தொண்டை நாட்டின் 32-வது (கடைசி) பதி. இரும்பைப் பதியில் உள்ள மாகாளம் என்னும் கோயில்; மகாகாளர் பூசித்த காரணத்தால் மாகாளம் எனப்படும். சுவாமி - மாகாளேசுவரர்; அம்மை - குயின்மொழி நாயகி; பதிகம் 1. |