1222திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

இது புதுச்சேரி நிலையத்தினின்றும் வடகிழக்கே மட்சாலைவழி 8 நாழிகையளவில் அடையத் தக்கது. (இங்குநின்றும் வடமேற்கில் மட்சாலைவழி 2 நாழிகையளவில் உள்ளது திருவரசிலி.)
திருவரசிலி
திருச்சிற்றம்பலம்

பண்-பியந்தைக் காந்தாரம் - 2-ம் திருமுறை

பாடல் வண்டறை கொன்றை பான்மதி பாய்புனற் கங்கை
கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி
வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோண்மேல்
ஆடன் மாசுண மசைத்த வடிகளுக் கிடமர சிலியே.

(1)

அல்லி நீள்வயல் சூழ்ந்த வரசிலி யடிகளைக் காழி
நல்ல ஞானசம் பந்த னற்றமிழ் பத்திவை நாளுஞ்
சொல்ல வல்லவர் தம்மைச் சூழ்ந்தம ரர்தொழு தேத்த
வல்ல வானுல கெய்தி வைகலு மகிழ்ந்திருப் பாரே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- ஆடல் மாசுண மசைத்தார் என்பது முதலான தன்மைகளாற் போற்றப்படும் இறைவராகிய அடிகளுக்கிடம் அரசிலியே.
பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) வண்டு பாடலறை என்க; வல்லியம் - புலி; புலித்தோல் குறித்தது ;-(2) தேன்அவன் - தேன் போன்ற இனிமையுடையவன்; நல்.....சுடர் - முழு ஞானவொளி ;-(3) கதம் மிக - ஆரவாரிக்க; கதம் - கோபம்; கோபம் போல்வதனைக் கோபம் என்றார்; ஒப்புமைப்பற்றி; "கதமிக் கெரிகதிரின் முன்னிருள்போல்" (போதம் - 10 - சூத்) "எரி துள்ளினாலென" (527); சங்கையாய்த்திரியாமே - திரியாதவாறு; "அனுசயப்பட் டதுவிது வென் னாதே" (தேவா); "இரண்டாட்டாது" (தேவா) ;-(4) மெய் - உடம்பு ;-(5) அஞ்சும் - உவமவுருபு; -(6) பரிய மாசுணம் - வாசுகி என்னும் மாநாகம் ;-(9) குறியமாண் - வாமனன்; மாண் - பிரமசாரி ;-(10) குருளை - இளமை; குருளை எய்திய மடவார் - இளம் பருவமடைந்த பெண்கள்; திரளை - சோற்றுருண்டை ; கவளம். பொருள் - சத்து; உண்மைப் பொருள். வணங்கும் அருளை நல்கும் - வணங்கும்படி அருள் செய்யும்; "அவனரு ளாலே அவன்றாள் வணங்ங்கி" (திருவா).
தலவிசேடம் :- திருவரசிலி - தொண்டைநாட்டின் 31-வது பதி. இஃது ஒழிந்தியாப்பட்டு என வழங்கப்படுகின்றது. அரசமரத்தை இல்லாக-இருப்பிடமாக-க்கொண்டு இறைவர் வீற்றிருக்கும் இடம் என்பது பெயர்க்காரணம். அடிகளுக்கு இடம் அரசிலி என்ற பதிகம் இப்பொருள் தருவது. அரசமரம் கோயிலுக்கு எதிரில் உள்ளது. முதல் வழிபாடு அதற்கு நடைபெறுகின்றது. வாமதேவ முனிவர் வழிபட்ட பதி. சுவாமி - அரசிலி நாதர்; அம்மை - பெரியநாயகி; தீர்த்தம் - அரசடித் தீர்த்தம்; மரம் - அரசு; பதிகம் 1.
இது புதுச்சேரி நிலையத்தினின்றும் வடகிழக்கில் மட்சாலையில் 8 நாழிகையளவில் உள்ள இரும்பைமாகாளத்தினின்றும் வடமேற்கே மட்சாலைவழி 2 நாழிகையளவில் அடையத் தக்கது.