[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1233

I திருவண்ணாமலை
திருச்சிற்றம்பலம்

பண் - நட்டபாடை - 1-ம் திருமுறை

உண்ணாமுலை யுமையாளொடு முடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரு
மண்ணாமலை தொழுவார்வினை வழவாவண மறுமே.

(1)

வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவ னண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவ ரடிபேணுத றவமே.

(11)

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- பெருமான்மலை அண்ணாமலையினைத் தொழுவார்களுடைய வினைமுழுதும் அறும் என்று மலையினைத் தூரத்தே கண்டு போற்றியது.
பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) உண்ணாமுலை உமையாள் - முருகப் பெருமானும் வாய்வைத்து உண்ணாத முலை; பரம் அபரம் எனும் ஞானங்களிரண்டுமே உருவாகக் கூறுதல் மரபு; ஒருவனாயிருந்து உலகுக்கருளும் நினைவுகொள்ளச், சிவமும் சத்தியுமுடனாகிய உருக்கொண்டு, பின் அருள்தரச் சத்தி வேறாகி வரும் நிலைகள் குறிப்பு. பெண் ஆகிய - சத்தி வேறாகிய; அருவிகள் திரண்டு சலசல ஓசையுடன் தரையில் வீழ்வன மழலை முழவுபோலச் சத்திக்கின்றன. முழவுபோல அதிரும் என்று உவம உருபு விரிக்க; அதிர்தல் - சத்தித்தல்; வழுவா வண்ணம் - "ஒன்றொழியா வண்ணமெல்லாம்"(திருவா); உறுதியாக என்றலுமாம்;- (2) தேமாங்கனி....சிதற - ஆண் குரங்குள் கொம்புகளைக் கீழ் இழுத்துத், தொங்கும் மாங்கனியைக், கொள்வதால் பின்னர் அக்கொம்புகள் மேலேசென்று மேகங்களைக் கீற அவற்றினின்று நீர்ச் சிறுதுளிகள் சிதறி வீழ; "மலர்பறிப்பத் தாழவிடு கொம்புதைப்ப"(தேவா); தேமா - மாவின் சிறந்த ஒருவகை; தேம் - இனிமையுடைய; தூமாமழை - மேகத்தாற் றூய நீராவியாய்க் கொள்ளப்பட்டதாதல் குறிப்பு; தீண்டி - தீண்டுதலால்; துறுவல் - செறிவு; சோலைகளின் திரட்சி. ஆமா - காட்டுப்பசு;- (3) மயில் - குறிஞ்சிக் கருப்பொருள். கழை - மூங்கில்; கழை முத்தங்களைச் சூல்கொண்டு முற்றி மணிகளைத் தரை நிறையச் சொரியும்; சூலி - சூல் கொண்டு; ஆலி - நீர்த்துளி; புகழ் தொழுவாரனவே - என்று கூட்டுக;- (5) முரவம் படும் - முரசு (பறை) போல ஒலிக்கும்; - (7) கரிகாலன....எரியாடிய - ஊழிச் சுடலை; காலனவும் கொள்வனவும் ஆகிய கழுகு என்க; கழுகு - நரி - முதலியன இருத்தல் ஈமத்தின் பொதுவியல்பு;- (8) ஒளிறு - விளங்கும்; ஒளிறு - அதள் - என்க; ஒளிறூ - முதலிய நீட்டல்கள் செய்யுள் இசை நிரப்புதற்கண் வந்தன;- (9) கடல்வண்ணன் - புகழோன் - ஏனைத் தேவர்களை நோக்க இவர்களது பெருமையும் இத்தலவரலாறும் குறித்தன; அளவா - அளத்தலாகாத; அழலாகிய அண்ணல் - தல வரலாறு;- (10) வெயில் நின்றுழல்வார் - சமண குருமாரின் வழக்குக்களுள் ஒன்றுபற்றிக் கூறியது; சீவரம் - புத்தர்களது மஞ்சட் போர்வை; ஆரம்பர் - வீண் ஆரவாரஞ் செய்வோர்;- (11) வெம்பு - வெப்பு என்பது மெலிந்து வந்தது. ஒளி விலகும் - உட்புகமாட்டாது விலகிச்செல்லும்;