1234திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

உந்துவனவாகிய குயில் என்க; ஆலுவ - அசைவன; தாம் உந்திய கொம்புகளுடன் தாமும் அசைவன.
தலவிசேடம்:- திருவண்ணாமலை - III - பக். 534 பார்க்க.
2869
அங்க ணணைவார் பணிந்தெழுந்து போற்றி செய்தம் மலைமீது
தங்கு விருப்பில் வீற்றிருந்தார் தாட்டா மரைக டம்முடிமேற்
பொங்கு மார்வத் தொடும்புனைந்து புளக மலர்ந்த திருமேனி
யெங்கு மாகிக் கண்பொழியு மின்ப வருவி பெருக்கினார்.

971

(இ-ள்) அங்கண்...போற்றி செய்து - அங்கு (அண்ணாமலையின்கண்) அணைபவராகிய பிள்ளையார் நிலமுற வணங்கி எழுந்து; அம்மலைமீது....தாள் தாமரைகள் - அந்த மலையின்மேல் தங்கும் விருப்பினுடன் எழுந்தருளியுள்ள இறைவரது திருவடிகளாகிய தாமரைகளை; தம் முடிமேல்...புனைந்து - தமது திருமுடியின் மேலே மேன்மேல் எழுகின்ற ஆசையினுடன் சூடிக்கொண்டு; புளகம்...எங்குமாகி - திருமேனி முழுதும் மயிர்புளகம் வரக்கொண்டு; கண்...பெருக்கினார் - கண்களிற் பொழிகின்ற ஆனந்தக் கண்ணீரை அருவிபோலப் பெருக்கினார்.
(வி-ரை) பணிந்தெழுந்து - மலையினைச் சேர்ந்தவுடன் அதனடியில் நிலமுறப் பணிந்து எழுந்து.
அம்மலைமீது....வீற்றிருந்தார் - திருஅண்ணாமலை நாதர் - அருணாசலேசுவரர்; தங்கு விருப்பில் வீற்றிருத்தலாவது என்றும் நீங்காது வெளிப்பட எழுந்தருளியிருத்தல்.
தாள் தாமரைகள் - முடிமேல் - புனைந்து - திருவடிகளில் தலைசாய்த்து நிலமுற வணங்கி; அடித்தாமரை மலரைத் தலையிற் சூடி என்ற நயமும் காண்க. தாமரை அந்தணர்க்குரிய மாலையாதலும் குறிப்பு. மலையை வணங்கி மேற்சென்று இறைவரை வணங்கினார் என்க.
புளகம்...ஆகி - புளகம் - மயிர்க் கூச்செறிதல்; இம்மெய்ப்பாடு உடல்முழுதும் உளதாதல் அன்புநிறைவின் குறி.
கண் பொழியும் இன்ப அருவி - ஆனந்தக் கண்ணீர் அருவிபோலக் கண்களில் பெருக வருதல் பேரின்ப அன்பின் மிகுதியினால் உளதாவது; மிகுதியும் இடையறாத தன்மையும்பற்றி அருவி என்றார். உபசாரம்.

971

2870
ஆதி மூர்த்தி கழல்வணங்கி யங்க ணினிதி னமருநாட்
பூத நாத ரவர்தம்மைப் "பூவார் மல"ராற் போற்றிசைத்துக்,
காத லாலத் திருமலையிற் சிலநாள் வைகிக் கமழ்கொன்றை
வேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார்;

972

2871
மங்கை பாகர் திருவருளால் வணங்கிப் போந்து வடதிசையிற்
செங்கண் விடையார் பதிபலவும் பணிந்து, புகலிச் செம்மலார்
துங்க வரைகள் கான்பலவுங் கடந்து, தொண்டைத் திருநாட்டிற்
றிங்கண் முடியா ரினிதமருந் திருவோத் தூரைச் சேர்வுற்றார்.

973