[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1299

தேடு மருந்து வெளியே இருந்த - மலை - சிறந்த மருந்துப் பண்டங்கள் மலையில் உள்ளன என்பர். அவற்றுள் சிறந்தவை தேடியலையாமல் வெளியே எளிதில் கிடைப்பது அரிது. ஆனால் இங்கு அவ்வாறு அரிய மருந்து வெளியே இருந்தது என்றபடி. மருந்து - தீராநோ யாகிய பிறவிப்பிணி தீர்க்கு மருந்தாகிய இறைவர். "மருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன்", "மருந்து மாவன", "மருந்தவை", "மருந்து வேண்டில் லிவை", "மந்திரமுந் தந்திரமு மருந்து மாகி"(தேவா) முதலிய திருவாக்குக்கள் காண்க. மருந்து போல்வாரை மருந்தென்றார்; வெளியே எளிதிற் காண இருந்தும் உரியவாறு கண்டுகொள்ள மாட்டாத அறியாமையுடையார் அயனும் மாலும் என்பார் தேடும் என்றார்; இலிங்க புராணத் திருக்குறுந்தொகைத் திருப்பதிகம் பார்க்க; வெளியே - ஞான அறிவாகிய வெளியிலே எளிதிற் காண.
மருந்து வெளியே இருந்த - மருந்தாகிய இறைவரது கண்ணில் கண்ட புண்ணுக்கு மலையில் மருந்து தேடிப் பிழிந்த மலை என்றும், அதற்குரிய கைகண்ட மருந்தாகிய மதது கண் தம்மிடத்து இலகுவிற் காண இருந்தும் முன்னர் அஃதறியாது மலையிற் பல மலையிற் பல மருந்து தேடிப் பின் கண்ட மலை என்றும் நாயனாரது சரிதக் குறிப்புக்கள் பட நிற்றலும் காண்க. வெளியே - மலையில் வெளிப்பட்டு முளைத்தெழுந்து என்ற பொருளும் காண்க.
அடிவாரம் சார - அடிவாரம் - மலையின் அடி. வாரம் - அன்பு என்றுகொண்டு மலையின் அடியினைத் தமது மீக்கூர்ந்த அன்பு முன்னே சாரத் தாம் பின்பு வந்து என்ற குறிப்புப்பட நிற்பதும் காண்க. "நாணனு மன்பு முன்பு நளிர்வரை யேறத் தாமும்...ஏறி" (752).
தாழ்ந்தார் - மலையினடியில் நிலம் பொருந்த வீழ்ந்து வணங்கினார்; மலையினைக் கண்டபோதே அவனிமேற் பணிதலும் (2918), அடிவாரத்தில் வீழ்ந்து வணங்குதலும், மேலே திருமலையைத் தொழுதுகொண்டே செல்லுதலும் (2920) ஆகிய இவை கைலாயமே யாகிய அம்மலையினையும், அதனில் வெளிப்பட்ட இறைவரையும் அவரை உள்ளே நிலைபெறக் கொண்டு நிற்கும் நாயனாரையும் வழிபடும் முறையையும் மரபையும் குறித்தன. தாழ்தல் - விரும்புதலுமாம்; விரைந்த விருப்பத்துடன் வணங்கினார் என்க.

1021

2920
தாழ்ந்தெழுந்து திருமலையைத் தொழுது கொண்டே
  தடஞ்சிலா தலசோபா னத்தா லேறி
வாழ்ந்திமையோர் குழாநெருங்கு மணிநீள் வாயின்
  மருங்கிறைஞ்சி யுள்புகுந்து வளர்பொற் கோயில்
சூழ்ந்துவலங் கொண்டிறைவர் திருமுன் பெய்தித்
  தொழுதுதலை மேற்கொண்ட செங்கை போற்றி
வீழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண் பார்போல்
  மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்.

1022

(இ-ள்) தாழ்ந்தெழுந்து....ஏறி - வணங்கி மேல் எழுந்து காளத்தித் திருமலையினைத் தொழுதுகொண்டபடியே பெரிய மலைப்படிகளின் வழியே ஏறிச் சென்று; வாழ்ந்து...உள்புகுந்து - வாழ்வடைந்து வானவர்களின் கூட்டம் நெருங்கியுள்ள மணிகளையுடைய நீண்ட திருவாயிலின் பக்கத்தே முன்பு வணங்கித் திருக்கோயிலினுள்ளே புகுந்து; வளர் பொற்கோயில் சூழ்ந்து வலங்கொண்டு - அதனைச் சுற்றி