[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1237

மழை - மேகம்; ஆமாம்பிணை வெருவித் தொறுவின் நிரைவோடும் அணையும் என்க; வெருவி - அஞ்சி; அச்சத்தால் தன் இனமல்லாவிடினும் ஒருசார் ஒப்புமை பற்றிப் பசுக் கூட்டத்துடன் காட்டுப்பசுவும் வரும் என்பது; பின்னிரண்டடிகள் குறிஞ்சியியல் புணர்த்தின. மேல்வருவன பலவும் இவ்வாறே காண்க; இவை தமிழ் இலக்கணம் பற்றியனவாதலால் சொல்லான் மலிந்த(11) என்பதும் காண்க (சொல் - தமிழியல்);- (2) அடக்கும் அதுவும் நன்மைப்பொருள் - அன்று தேவர்க்கருளியதன்றி இன்று காண்பார்க்கும் அருள் புலப்பட நின்று நலம்செய்தல் குறிப்பு;- (3) உண்மைப் பொருள் - மெய்கண்ட ஞானநூல்களின் முடிந்த உண்மை இதுவேயாகும்; ஊனத் திரள் - மலம்; ஏனத்திரள் - இனமான் - ஆனைத்திரள் - இச்சாதிகள் இனமாய்த் திரளாகக் கூடிவரும் இயல்புடையன. இவை குறிஞ்சிக் கருப்பொருள்கள்; இவை மலைச்சாரலில் ஒருங்கு வாழும் வாழ்க்கைத் தன்மைபற்றிய குறிப்பு; - (4) இழைத்த - நல் உடை புனைந்த;- (5) பருவிக் - குவித்த என்க; பருவி - அரித்து;- (6) குழல் ஊத - மேதி - திரளும் - இஃது இசையின் சத்தியாலாவது; ஆனாயர் புராணம் பார்க்க; பார்ப்பவர்க்கு உலகியலில் கண்கூடாகக் காண்பது;- (7) வரும் மேல்வினை - ஆகாமியம்; பந்தித்திருந்த பாவம் - பழவினை; - (8) நிறம் - புகழ்;- (9) ஆடிப்பாடி யளக்கும் - விலை கூறுவார் செய்யும் வாணிபத் திறம்; இன்றும் வாணிபப் பலதுறைகளிலும் காணவுள்ளது;- (10) பிட்டர் - பிரட்டர்; கீழ்கள். சமணே - உடையின்றி; நின்றுண்ணும் - சமண குருமார் வழக்கு; அட்டம் - அணையும் - அட்டமாக; குறுக்காக. 725 பார்க்க;- (11) அல் - இரவு; சொல்லான் மலிந்த - தமிழியல் நிறைந்த.
[ஆண்பனை பெண்பனையாக்கிய அற்புதம்].
2872
தேவர் முனிவர்க் கோத்தளித்தார் திருவோத் தூரிற் றிருத்தொண்டர்
தாவில் சண்பைத் தமிழ்விரகர் தாமங் கணையக் களிசிறந்து
மேவுங் கதலி தோரணங்கள் விளக்கு நிரைத்து நிறைகுடமும்
பூவும் பொரியுஞ் சுண்ணமுமுன் கொண்டு போற்றி யெதிர்கொண்டார்.
(இ-ள்) தேவர்............திருத்தொண்டர் - தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதங்களை ஓதுவித்து அருளிச்செய்த இறைவரது திருவோத்தூரிலே வாழும் திருத்தொண்டர்கள்; தாவில்...அணைய - குற்றமில்லாத சீகாழியில் வந்த தமிழ் விரகராகிய பிள்ளையார் தாம் அங்க அணையவே; களிசிறந்து...எதிர்கொண்டார் - மிகமகிழ்ந்து பொருந்திய வாழைகளையும் தோரணங்களையும் விளக்குகளையும் வரிசைபெற நாட்டிப், பூரண கும்பங்களையும் பூவும் பொரியும் சுண்ணமும் என்ற இவற்றையும் முன்னே ஏந்திக் கொண்டு துதிசெய்து எதிர்கொண்டார்கள்.
(வி-ரை) தேவர்...திருவோத்தூரில் - திருவோத்தூர் என்ற பெயர்க் காரணக் குறிப்புப்பட வந்த விசேடணம். ஒத்து - வேதம். தலவிசேடம் பார்க்க.
களிசிறந்து...எதிர்கொண்டார் - இஃது அவர்களது அன்பின் பெருமையினை விளக்குவதாம்; நிரைத்து - வரிசைபெற நிறுவி. நிரை - வரிசை; விளக்கு நிரைத்தலாவது - விளக்குகளைத் தோரணம்போல வரிசைபெற ஏற்றுதல்; முன்கொண்டு - முன்னால் ஏந்திக்கொண்டு; பூ - பொரி - சுண்ணம் - இவற்றைத் தூவி எதிர்கொள்ளுதல் மங்கலம் செய்யும் மரபு. பொரி - நெற்பொரி. போற்றி - வாழ்த்திசைத்து,