1238திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

இவ்வாறு சென்ற சென்ற தலங்கள்தோறும் எதிர்கொண்ட பெருமை தொண்டை நாட்டுக்குச் சிறப்புரிமை.
முனிவர்க்கோத்தளித்த - என்பதும் பாடம்.

974

2873
சண்பை வேந்தர் தண்டரளச் சிவிகை நின்று மிழிந்தருளி
நண்பின் மிக்க சீரடியார் சூழ நம்பர் கோவுரஞ் சூழ்
விண்பின் னாக முன்னோங்கும் வியன்பொற் புரிசை வலங்கொண்டு
பண்பி னீடிப் பணிந்தெழுந்து பரமர் கோயி லுள்ளடைந்தார்.

975

(இ-ள்) சண்பை.....இழிந்தருளி - சீகாழித் தலைவராகிய பிள்ளையார் குளிர்ந்த முத்துச் சிவிகையினின்றும் இறங்கியருளி; நண்பின்...சூழ - அன்புமிகுந்த சிறப்புடைய அடியார்கள் தம்மைச் சூழ்ந்துவர; நம்பர்...வலங்கொண்டு - இறைவரது கோபுரத்தைச் சூழ்ந்து ஆகாயமும் கீழ்ப்படும் வண்ணம் முன்னே உயர்ந்து விளங்கும் பெரிய அழகிய திருமதிலைச் சுற்றி வலமாக வந்து; பண்பின்....அடைந்தார் - வணங்கவேண்டிய தன்மை பெருகிப் பணிந்து எழுந்து இறைவரது திருக்கோயிலினுள்ளே அடைந்தருளினர்.
(வி-ரை) சிவிகைநின்று மிழிந்தருளி - என்றது எதிர்கொண்ட அடியார்களது அன்பினை அங்கீகரித்துக் கொள்ளும் நிலை.
கோபுரம் சூழ் விண்பின்னாக முன் ஓங்கும் - கோபுரத்தைச் சூழ்ந்த உயர்ந்த மதில் முன்னால் ஓங்கி நின்றது; அஃது ஆகாயத்தையும் கீழ்ப்படுத்தி ஓங்கியது.
புரிசை வலங்கொள்ளுதல் - மதிலைச் சூழ்ந்து புறத்தே வலம் வருதல்.
பண்பின் நீடுதல் - வணக்கத்திற்குரிய இடம் காலம் முறை முதலிய எல்லாத் தன்மைகளாலும் மிகுதல்.

975

2874
வார ணத்தி னுரிபோர்த்த மைந்த ருமையாண் மணவாளர்
ஆர ணத்தி னுட்பொருளாய் நின்றார் தம்மு னணைந்திறைஞ்சி
நார ணற்கும் பிரமற்கும் நண்ணற் கரிய கழல்போற்றுங்
காரணத்தின் வருமின்பக் கண்ணீர் பொழியக் கைதொழுவார்.

976

(இ-ள்) வாரணத்தின்...அணைந்திறைஞ்சி - யானையின் உரியைப் போர்த்த வல்லமையுடையாரும், உமையம்மையாரின் மணவாளனாரும், வேதங்களினுட்பொருளாய் நின்றவரும் ஆகிய இறைவரது திருமுன்பு சேர்ந்து வணங்கி; நாரணற்கும்...காரணத்தின் வரும் - திருமாலுக்கும் பிரமதேவர்க்கும் சேர்தற்கரிய திருவடிகளைத் துதிக்கின்றதனால் வருகின்ற; இன்பக் கண்ணீர் பொழியக் கைதொழதார் - இன்பமாகிய ஆனந்தக் கண்ணீர் பொழியக் கைகூப்பித் தொழுதருளினர்.
(வி-ரை) உரிபோர்த்த மைந்தர் - மைந்தர் - வல்லாளர். மைந்து - வல்லமை; இது சங்கார காரணராந் தன்மையினையும், உமையாள் மணவாளர் என்றது சிருட்டி காரணராந் தன்மையினையும், ஆரணத்தின் உட்பொருளாய் நின்றார் என்றது சிருட்டியில் வரும் உயிர்களுக்கு அவ்வவற்றின் றிறத்துக்கேற்ப ஞானங் கொடுத்து அறியாமை நீக்கி உய்வதற்கு அருள்புரியும் தன்மையினையும் உணர்த்தின.
ஆரணத்தின் உட்பொருளாய் நின்றார் - உருத்திரபசுபதி நாயனார் புராணத்தினுரைத்தவை பார்க்க. வேதம் எவ்வெப் பக்குவமுடைய எல்லாவுயிர்க்கும் பொதுநூலாதலின்