|
| நாதர்; அம்மை - இளமுலை நாயகி; அம்மை பெயர் பதிகத்துக் (2) காண்க; தீர்த்தம் - சேயாறு; பதிகம் 1. |
| இது காஞ்சிபுரத்துக்குத் தென்மேற்கே கற்சாலைவழி 18 நாழிகையளவில் அடையத் தக்கது; மோட்டார்பஸ் வசதியுண்டு. அச்சிறுபாக்கம் நிலையத்தினின்றும் வடமேற்கே மட்சாலை வழி 18 நாழிகையளவிலும், திருமாகறலினின்றும் தென்மேற்கே மட்சாலைவழி 15 நாழிகையளவிலும் அடையலாம். |
2879 | சீரின் மன்னுந் திருக்கடைக்காப் பேற்றிச், சிவனா ரருள்பெற்றுப் பாரி னீடு மாண்பனைமுன் காய்த்துப் பழுக்கும் பண்பினால் நேரு மன்பர் தங்கருத்து நேரே முடித்துக் கொடுத்தருளி ஆரு முவகைத் திருத்தொண்டர் போற்ற வங்க னினிதமர்ந்தார். | |
| (இ-ள்) சீரின்...ஏற்றி - சிறப்பினால் நிலைபெற்ற திருக்கடைக்காப்புச் சேர்த்துப் பதிகத்தினை நிறைவாக்கி; சிவனார்.....கொடுத்தருளி - சிவபெருமானுடைய திருவருள் பெற்று உலகத்தில் நீடிய ஆண்பனைகள் முன்னே காய்த்துப் பழுக்கும் தன்மை வர விரும்பும் அன்பருடைய கருத்தினை நேர்பட முடித்துக் கொடுத்தருளி; ஆரும்...அமர்ந்தார் - நிறைந்த மகிழ்ச்சியையுடைய திருத்தொண்டர் துதிக்க அத்திருநகரின் கண் இனிதாக விரும்பி வீற்றிருந்தருளினார். |
| (வி-ரை) சீரின் மன்னும் திருக்கடைக்காப்பேற்றி - சீரின் மன்னுதலாவது விமலரருளாலே குரும்பை ஆண்பனையீன்குலை ஓத்தூர் என்னும் வாய்மை குலவுதல்; திருக்கடைக்காப்பு ஏற்றுதல் - பாட்டு நிரப்பிப் பதிக நிறைவாக்குதல். வாய்மை குலாவ அருளித் திருக்கடைக்காப்பு ஏற்றுவதன் முன்னே அதன் பயனாக ஏற்றுப் பனைகள் எல்லாம் குரும்பை அரும்பு பெண்ணையாகியிட எல்லாரும் கண்டு அதிசயித்தனர் என்று விரைந்து பயன் தந்தருளிய சிறப்புக் குறிப்பு. |
| சிவனார் அருள் பெற்று முடித்துக் கொடுத்தருளி என்க. |
| பண்பினால் - பண்பு வரச் செய்தமையாலே; நேரும் - அதனை விரும்பும். |
| முன் காய்த்துப் பழுக்கும் பண்பினால் - முன் - பதிகம் திருக்கடைக் காப்பு ஏற்றி நிறைவாக்கு முன். அத்தொண்டர்களின் முன்னே - கண் காண - என்றலுமாம். கால முறையால் முன் காய்த்துப் பின் பழுக்கும் என்ற குறிப்புமாம். முன்னர்க் குரும்பையே காணப்பட்டன; ஆயின் அவை பின்னர்க் காலத்தில் முதிர்வுபெற்றுக் காயாகிப் பின் பழுக்கும் என்ற தன்மை இன்றியமையாத நியதியாதலின் என்பதும் குறிப்பு. பழுக்கும் - தலச்சிறப்பாகிய நிவேதனத்துக்குரிய தன்மையும் அதனை எண்ணி அன்பர் பனைகளை ஆக்கிய தன்மையும் குறிப்பு. |
| நேரும் அன்பர்தங் கருத்து நேரே முடித்து - நேர்தல் - விரும்புதல்; நேரே - அவர் நேரிற் காண; நேர்பட; விரைவாக என்றலுமாம். |
| ஆரும் உவகைத் திருத்தொண்டர் - பனைகளை ஆக்கி விண்ணப்பித்த அத்திருத்தொண்டர்; பயன் கண்ட ஏனைத் திருத்தொண்டர்களுமாம்; ஆரும் உவகை - கருத்து முற்றக் கண்டதனால் நிறையும் மகிழ்ச்சி. |
| பாரினீடும் - நீண்ட வயதுடைய; புகழால் எந்நாளும் இறவாமல் நீடிய என்ற குறிப்புமாம்; 2881 பார்க்க. |
| மெய்ம்மைத் திருக்கடைக்காப்பு - பனைமுன்னம் - அப்பனைமுன் - என்பனவும் பாடங்கள். |
| 981 |