|
2880 | தென்னாட் டமண்மா சறுத்தார்தஞ் செய்கை கண்டு திகைத்தமணர் அந்நாட் டதனை விட்டகல்வார் சிலர்தங் கையிற் குண்டிகைகள் "என்னா வனமற் றிவை" யென்று தகர்ப்பா; "ரிறைவ னேறுயர்த்த பொன்னார் மேனிப் புரிசடையா னன்றே!" யென்று போற்றினார். | |
| 982 |
| (இ-ள்) தென்னாட் டமண்மா சறுத்தார்தம்.....அகல்வார் - தென்னாடாகிய பாண்டி நாட்டிலே அமணாலாகிய குற்றத்தை நீக்கிய பிள்ளையாரது இந்தச் செய்கையைக் கண்டு திகைப்படைந்து சமணர்கள் அந்நாட்டினை விட்டு நீங்கிப் போவார்களாகி; சிலர்...தகர்ப்பார் - சிலர் தமது கையில் ஏந்திய தமது சமயச்சார்பாகிய நீர்க்குண்டிகைகளை "இவை என்ன பயன் தருவன?" என்று உடைத்தெறிவார்களாகி; "இறைவன்...அன்றே" என்று போற்றினார் - முழுமுதற் கடவுளாவார் இடபத்தை யுயர்த்தியவரும் பொன்போன்ற திருமேனியை உடையவரும் புரித்த சடையினையுடையவருமாகிய சிவபெருமானேயாவர்" என்று கூறித் துதித்தனர். |
| (வி-ரை) செய்கை - வாக்கின் வாய்மையால் ஆண்பனைகளை உடனே பெண்பனைகளாக்கிய செய்கை. கண்டு - அன்பர்கள் முன்னே கண்டு போற்றினார்கள்; அது தெரிந்தபின் அமணரும் கண்டார்களாதலின் இவரது நிகழ்ச்சி பிற்கூறப்பட்டது. இவ்வாறன்றித் திருமயிலையில் நிகழவுள்ள அருட்செயலை நன்றியில் சமயத்திலுள்ளோரும் உடன் கண்ட வரலாறு பின்னர்க் காணப்படும். |
| திகைத்தல் - அச்சத்தால் செய்வதறியாது மயங்கி நிற்கும் மெய்ப்பாடும். |
| அந்நாட்டதனை - அவ்வூரை; விட்டகல்வார் - தென்னாட்டில் அமணர் கழுவேற வந்தது போல நேர்ந்துவிடுமோ என்றஞ்சி அவ்வூரை அகன்று நீங்குவார். நீங்குவார் - தகர்ப்பார் - போற்றினார் - என்க. நீங்குவார் பலர். அவருட் சிலர் தம் சமயத்தின் உண்மையற்ற பொய் நிலையினை உணர்ந்து தமது குண்டிகைகளைத் தகர்த்துச் சிவனைப் போற்றினார்; அவ்வாறு செய்யலாற்றாத பிறர் அகன்று நீங்கிப் போயினர். அகல்வாரும் , தகர்ப்பாருமாயினர்; தகர்ப்பார் போற்றினார் என்க. |
| மற்று இவை என் ஆவன - மற்று - உண்மைக்குப் புறம்பு என்பது குறிப்பு. என் ஆவன - என்ன பயன் தருவன; ஒருபயனுமற்றன என்பது. |
| இறைவன் - முழுமுதல்வன்; அன்றே - தேற்றமும் பிரிநிலையுமாய்உறுதிப் பொருள் தந்து நின்றது. புரிசடையான் நன்றே - என்று பிரித்துரைப்பதுமாம். |
| அமணாசறுத்தார் - என்பதும் பாடம். |
| 982 |
2881 | பிள்ளை யார்தந் திருவாக்கிற் பிறந்த லாலத் தாலமு,முன் புள்ள பாசம் விட்டகல, வொழியாப் பிறவி தனையொழித்துக் கொள்ளு நீர்மைக் காலங்கள் கழித்துச் சிவமே கூடினவால்; வள்ள லார்மற் றவரருளின் வாய்மை கூறின் வரம்பென்னாம்? | |
| 983 |
| (இ-ள்) பிள்ளையார்தம்....அத்தாலமும் - பிள்ளையாரது மெய்த் திருவாக்கிலே சொல்லப்பட்டு வந்து பிறந்த காரணத்தாலே அந்தப் பனைகளும்; முன்புள்ள...அகல - பனையாய்ப் பிறப்பதற்குரித்தாய் முன்னே உள்ள வினை விட்டு நீங்க; ஒழியா...ஒழித்து - ஒழியாது தொடர்ந்து வருகின்ற பிறவிப் பிணி நீங்கப்பெற்று; கொள்ளும்...கழித்து - உடம்பு இருத்தற் கேதுவாகிய பிராரத்தவினை கொள்ளும் கால அளவு கழித்துப் பின்பு; சிவமே கூடின - சிவப் பேற்றை அடைந்தன; வள்ள |