[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1249

தணையும் மேல் வினைகள் - ஆகாமியம்; கையகரி - கையினையுடைய யானை; கால்வரை - நடைமலை;- (8) மாசுபடு செய்கை - குற்றம் நீக்கும் செய்கை; படுதல் - அழிதல்;- (9) தாமரைகள் - முதலிய நீர்ப்பூக்கள் கூறப்பட்டன; இப்பதி சேயாற்றின் கரையில் நீர்ச்செழிப்புடன் விளங்குதல் குறிக்கும்; வயலும் பொழிலும் கூறியதும் காண்க;- (10) கழல்களின் மேலுணர்வு - முடியின் மேலுணர்வு எனத் தனித்தனி கூட்டுக; உணர்வு - உணர்தலை; காமுறவு - விரும்புதல்; மாலும் அலரானும் - கழலும் முடியும் என நிரனிரை;- (11) அடையும்...அடிகூடு சம்பந்தன் - பிள்ளையாரது திருத்தொண்டின் றிறம்; பிள்ளையாரை முருகப் பெருமா னவதாரம் என்போர் இதனைக் குறிக்கொள்வாராக; அடியையே உடைய தமிழ் - அடிசேர்பவர்கள்; அடியை ஏத்த; அடியையே ஏத்தி; அடியாரை; அடி சேர்பவரை என்பனவாகத் திருவடித் தொண்டேபற்றி வரும் பதிகக் குறிப்பும் கருத்துமாம். சுவாமி பெயரும் காண்க.
தலவிசேடம் :- திருமாகறல் - தொண்டைநாட்டின் 7-வது பதி. இந்திரன் வழிபட்ட தலம்; சிவலிங்கத் திருமேனி உடும்பின் வண்ணமாகிய சுயம்பு மூர்த்தி; இராசேந்திர சோழனுக்கு இறைவர் பொன்னுடும்பாகக் காட்சி கொடுத்து, அவன் துரத்தியபோது ஓடிப் புற்றில் ஒளித்து வெளிப்பட்டனர் என்பது வரலாறு. மக்கட் பேறு வேண்டுவோர் அங்கப் பிரதட்சணம் செய்வது தலவிசேடம். சுவாமி - அடைக்கலங்காத்த நாதர்; அகத்தீசுரர் அம்மை - புவன நாயகி; விநாயகர் - பொய்யா விநாயகர்; தீர்த்தம் - சேயாறு - அக்கினி தீர்த்தம் பதிகம் 1.
இது காஞ்சிபுரத்திலிருந்து தென்கிழக்கில் கற்சாலை வழி 10 நாழிகையளவில் சேயாற்றின் வடகரையில் உள்ளது. வழியில் வேகவதி யாற்றையும், பாலாற்றையும் கடக்க வேண்டும்; மோட்டார்பஸ் வசதி உண்டு. குரங்கணின்முட்டத்தினின்றும் தென்கிழக்கில் மட்சாலை வழி 6 நாழிகையளவிலும் அடையத்தக்கது.
2883
ஆதி முதல்வர் குரங்கணின்முட் டத்தை யணைந்து பணிந்தேத்தி,
நீதி வாழுந் திருத்தொண்டர் போற்ற நிகரில் சண்பையினில்
வேத மோடு சைவநெறி விளங்க வந்த கவுணியனார்
மாதொர் பாகர் தாமன்னு மதில்சூழ் காஞ்சி மருங்கணைந்தார்.

985

(இ-ள்) ஆதிமுதல்வர்.....ஏத்தி - ஆதிமுதல்வராகிய இறைவரது திருக்குரங்கணின் முட்டத்தைச் சேர்ந்து வணங்கித் துதித்து; நீதி...போற்ற . சைவ நீதிநெறியினில் வழுவாத ஒழுக்கமுடைய திருத்தொண்டர்கள் போற்றச்சென்ற; நிகரில்...கவுணியனார் - ஒப்பற்ற சீகாழிப்பதியிலே வேதநெறியுடனே சைவநெறி விளங்கும்படி திருவவதாரம் செய்த கவுணியனாராகிய பிள்ளையார்; மாதொர் பாகர்...அணைந்தார் - அம்மைபாகமுடைய ஏகம்பவாணர் நிலை பெற எழுந்தருளியுள்ள மதில் சூழ்ந்த காஞ்சிப் பதியின் பக்கத்தே அணைந்தருளினர்.
(வி-ரை) அணைந்து பணிந்து ஏத்தி - பதியின் அருகே அணைந்தமை இப்பாட்டிற் கூறிய ஆசிரியர், பதியினுள் புக்குத் திருக்கோயிலை அணைந்தமையும் அங்கு இறைவரை வணங்கித் துதித்தமையும் மேல்வரும் பாட்டுக்களிற் கூறுகின்றார்;
நீதி வாழ்தலாவது - சைவ விதியாகிய ஒழுக்கத்தினின்றும் பிறழாது வாழ்தல்.
போற்ற - போற்ற அங்குநின்றும் அகன்று சென்று; போற்ற - வந்த என்று கூட்டி முடித்தலுமொன்று.