|
| சேண் - சேணில்; வானில். வாயில் - வாயிலின்கண்; ஏழனுருபு விரிக்க. வாயிலில் புகுந்திட என்க. |
| நீற்றணி மேனி மேல் விளங்கிட மனத்தினில் அன்பு பூணாக வுடையவர் என்க. "மாசிலாத மணிதிகழ் மேனிமேற், பூசு நீறுபோ லுள்ளும் புனிதர்கள்" (141); இவர்கள் பிள்ளையாரை எதிர்கொள்ள வந்த காஞ்சி வாழும் திருத்தொண்டர்கள்; இவர்களே பிள்ளையாரை உடனாக நகரின் உள்ளே அழைத்துச் சென்றவர்கள் என்பது. |
| புறத்துளோர் - காணுமாசையில் - புறத்துளோர் - தொண்டர் கூட்டத்தின் புறத்தே நின்றவர்களும் நகர்ப்புறத்தினின்றும் வந்து கூடியவர்களும். |
| காணுமாசையில் - பிள்ளையார் சிவிகையினின்றிழிந்து தொண்டர் கூட்டத்தினுள் அவர்கள் சூழச் சென்றருள்கின்றாராதலின் இவர்கள் அருகில் நெருங்கிக் காண மாட்டாது அந்த ஆசையினாற் கைகளைக் கூப்பி வணங்கினர் என்பதாம். நிரை குவித்த கை எடுத்தனர் - வரிசைபெறக் கைகளை மேலே கூப்பி வணங்கினர்; எடுத்தல் - மேற்கூப்புதல். பூணும் அன்பர் - அன்பினையே பூணாகக் கொண்டவர். |
| மனத்தினாற் பூணும் அன்பர் - என்று பாடங்கொண்டு மனங் காரணமாகப் பொருந்தும் மொய்யன்பினையுடைய அடியார்கள் என்றும், மனத்திற் பொருந்திய என்றும் உரைத்தனர் முன் உரைகாரர்கள். |
| வானநீடு - விளக்கிட - என்பனவும் பாடங்கள். |
| 990 |
2889 | வியனெ டுந்தெ ருவினூடு மிக்க தொண்ட ரார்ப்பெழுக், கயனெ டுங்கண் மாதருங் காத னீடு மாந்தரும் புயல்பொழிந்த தாமெனப் பூவினோடு பொற்சுணம் இயலு மாறு வாழ்த்தெடுத் திரும ருங்கும் வீசினார். | |
| 991 |
| (இ-ள்) வியனெடும்...எழ - இடம் அகன்ற நீண்ட தெருவினிடையே திரண்ட தொண்டர்களின் முழக்கம் எழ; கயனெடுங் கண்...மாந்தரும் - கயல்மீன் போன்ற நீண்ட கண்களையுடைய பெண்களும் காதலால் மிக்க மாந்தர்களும் மேகம் மழை பெய்ததுபோலப் பூக்களோடு பொற்சுண்ணப் பொடியினை ஏற்றவாறு வாழ்த்துக் கூறி இரண்டு பக்கங்களிலும் வீசினார்கள். |
| (வி-ரை) மாதரும்...மாந்தரும் - இவர்கள், பிள்ளையார், நகரினுள் புகுந்து கம்பவாணர் திருக்கோயிலுக்குச் செல்லுமிடையில் தெருவில் இருபுறமும் வீடுகளினின்று வாழ்த்திப் பூவும் சுண்ணமும் தூவினவர்கள். முன் "மாதர் மைந்தர் மல்குவார்" (2885) எனப்பெற்றவர்கள் விளக்கு முதலிய மங்கலங்களுடன் மதிற்புறத்துச் சென்று பிள்ளையாரை எதிர்கொண்டவர்கள். |
| மாதரும் காதனீடு மாந்தரும் - சதிபதிகளாக இணைந்து வாழ்த்தியும் பூத்தூவியும் தெருவின் இருபுறமும் இருந்தனர் என்பது; காதனீடு என்ற குறிப்புமிது. இஃது இல்லற நிலையின் நிகழ்வதென்க. திருப்புக்கொளியூரவிநாசியில் ஆளுடைய நம்பிகளை மறையவனும் மனைவியும் உடன் வந்து வணங்கும் நிகழ்ச்சி காண்க; இவ்வாறன்றி இவ்விருவகையினரும் அங்கங்குத் தனித்தனி வாழ்த்தினர் - பூவும் சுண்ணமும் தூவினர் என்று கொள்ளுதலுமாம். |
| புயல் பொழிந்ததாமென - வினைபற்றி வந்த உவமம். மழைபோலச் செறிவும் மென்மையும் தண்மையும் பொருந்த இடையறாது பொழிதல் குறிப்பு. |